கவிஞர் அப்துஸ் ஸலாம்
“இறைவனிடம் கையேந்துங்கள் – அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை!
பொறுமையுடன் கேட்டுப் பாருங்கள் – அவன்
பொக்கிஷத்தை மூடுவதில்லை!”
இந்த இசைக் கவிதை நிகழ்த்தி இருக்கக் கூடிய பிரம்மாண்டங்கள் ஏராளமானவை. இந்தப் பாடலின் ஆசிரியர் கவிஞர் அப்துஸ் ஸலாம். கவிஞர் இன்று நம்மிடம் இல்லை.
இந்தக் கவிதையினை இசை வீரியத்தோடு நாகூர் ஹனீஃபா அண்ணன் பாடி வெளியிட்ட கால கட்டத்தில் , இசை உலகின் வித்தியாசமான இசைக் கவிதையினை எழுதிய இந்த கவிஞரை மானசீகமாக நான் கண்டு ரசித்துக் கொண்டிருந்தேன். இசைப் பாடலில் இருந்த இளமை காரணமாக, இந்தக் கவிஞரை ஒரு புதிய இளைஞராக நான் கற்பனைச் செய்து இருந்தேன்.
இந்தக் காலகட்டத்தில் என்னுடைய “பேரீச்சம் பழக் காட்டின் பிரதிநிதிகள்” புதுக் கவிதைத் தொகுதி வெளி வந்திருந்தது. அதனை கவிஞர் அப்துஸ் ஸலாம் படித்து இருக்கிறார். அவருடைய மனக் கண்ணில், “யாரோ ஒரு முதிர்ந்த கவிஞன் இந்த நூலின் ஆசிரியனாக இருக்க வேண்டும்” என்ற நினைப்பு முளைத்து இருந்திருக்கிறது.
ஏனோ தெரியவில்லை நாங்கள் இருவருமே சந்தித்துக் கொள்ள ஆசைப் பட்டுக் கொண்டிருந்தோம். எங்களின் இந்த மன ஆவலை கவிஞர் தா.காசிம் எந்த வித முன்னேற்பாடுமின்றி மாயவரத்தில் உள்ள கொரனாடு (கூரைநாடு) பகுதியில் இருந்த கவிஞரின் இல்லத்தில் தீடீரென சந்திக்க வைத்தார்.
“இவர்தான் கவிஞர் அப்துஸ் ஸலாம்” என்று எனக்கு அறிமுகப் படுத்தும்போது நான் ஆழமான அதிர்வில் விழுந்து விட்டேன். என் கற்பனையில் இருந்த இளைய கவிஞன் என் எதிரே கிழ வயதில் அமர்ந்திருக்கக் கண்டேன்.
“இவன்தான் ஹிலால் முஸ்தபா” என்று அவருக்கு என்னை அறிமுகப்படுத்தும் போது அவரும் என் நிலையிலேயே தடுமாறிக் கொண்டிருந்தார்.
“ஹிலால், உங்களை நான் இப்படி கற்பனை செய்யவில்லை. தாடையிலே தாடி, அதுவும் வெளுத்திருக்க வேண்டிய தோற்றம். முதுமையில் நீங்கள் பொலிவோடு இருப்பீர்கள் என நினைத்தேன். ஆனால் ஒரு இளைஞனாக என் எதிரில் வந்து நின்றால் என்னால் ஏற்க முடியவில்லை” என்றார். என்னை அணைத்துக் கொண்டார்.
அதைத் தொடர்ந்து மச்சான் நாகூர் கவிஞர் இஜ்ட். ஜபருல்லாவும் நானும் , கவிஞர் இல்லத்தில் பல முறை இரவுத் தொடங்கி விடிய விடிய பல விஷயங்களைப் பேசிப் பேசி குழைந்து கூத்தாடி மகிழ்ந்து இருக்கிறோம்.
கவிஞர் மகனார் திருமணத்திற்கு என்னிடம் கவிஞர் கேட்டுக் கொண்டார்.
“ஹிலால் உங்களுடைய அச்சகத்தில் நீங்களே கவிதையினை அச்சுக் கோத்து நீங்களே உங்கள் டிரெடிலில் (அச்சு இயந்திரம்) அச்சடித்து என் மகனுக்கு வாழ்த்துக் கவிதை கொண்டு வர வேண்டும். ஆனால் இந்த வாழ்த்துக் கவிதையினை பேப்பரில் எழுதி அதன் பின் அச்சுக் கோக்கக் கூடாது. நேரடியாக மனதில் உள்ள கவிதையை அச்சுக் கோத்து அதை பிரிண்ட் எடுத்து வரவேண்டும்.” என கேட்டுக் கொண்டார்.
நானும் அதன் படியே செய்து கிளியனூரில் நடந்த அவர் மகனார் திருமணத்திற்கு எடுத்துச் சென்றேன். கவிஞர் பேரானந்தப் பட்டார்.
அந்தச் சந்திப்புத்தான் அவரைக் கடைசியாக நாங்கள் பார்த்தது. அடுத்த சில மாதங்களில் அவரை இறைவன் தன்னளவில் பொருந்திக் கொண்டான்.
அவரைக் கடைசியாக சந்திப்பதற்கு சில தினங்களுக்கு முன்னால் கவிஞரின் இல்லத்திற்கு நானும் கவிஞர் இஜட். ஜபருல்லாவும் சென்றிருந்தோம். இரவில் நீண்ட நேரம் இலக்கியங்களைப் பேசிக் கொண்டிருந்தோம். அப்பொழுது கவிஞர் சமீபத்தில் எழுதி இருந்த ஒரு கவிதையின் பல்லவியை எங்களிடம் கூறினார்.
“பர்தாவை நீக்கு, உன்னைப் பார்க்கனும் – உன்
பரிசுத்த அழகை கண்டு ரசிக்கனும்!”
இதுதான் அந்தப் பல்லவி. இந்தப் பாடலை அவர் முடிக்கவில்லை. இந்தப் பாடல் எங்கள் மனதிலே பிரம்மிப்பை ஏற்படுத்திய ஆழமான வரிகள். மறு நாள் நானும் ஜபருல்லாவும் நாகூர் சென்றோம். அங்கு ஞான மாமேதை அப்துல் வஹ்ஹாப் பாகவியிடம் கவிஞர் எழுதிய பல்லவியைச் சொன்னோம்.
நாகூர் ஹஸரத் அவர்கள் “கவிஞர் ஏன் இப்படி பிரார்த்தனை செய்து விட்டார்? அவரை நான் மண்ணுலக வாழ்க்கையில் சந்திக்க முடியாமலே போய் விடுமோ?” எனக் கூறி வருந்திய முகத்துடன் காணப் பட்டார்கள்.
கவிஞரும், நாகூர் ஹஸரத்தும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த பாசம் கொண்டு இருந்தார்கள். ஆனாலும் இருவருமே சந்த்தித்துக் கொண்டதே இல்லை.
அந்தப் பாடலின் பொருள் , பர்தாவை நீக்கு உன்னைப் பார்க்கனும் என்றால் ,இறைவனை ஒரு பெண்ணாக கற்பனை செய்து அவன் பேரழகை ரசிக்க கவிஞர் ஆசைப் பட்டு துஆ செய்து விட்டார். அவனைச் சந்திக்க தடையாக இருக்கும் பர்தா மண்ணுலக வாழ்க்கை. அதை நீக்கி விட்டால் மரணம். அதற்குப் பின்தானே அந்த சந்திப்பு. அதுதான் அவருக்கு நிகழ்ந்து விட்டது.
தமிழ்க் கவிஞர்களில் செல்வச் செழிப்பு மிக்க ஒரு பெரும் கவிஞர் இவர். மாயவரம் கூரை நாடுப் பகுதியில் ஒரு பெரிய சொந்த பங்களாவில் வாழ்ந்தவர். மொத்தத் துணி கொள்முதல் வணிகர் இவர். மயிலாடுதுறை அருகில் உள்ள கிளியனூர், இவர் சொந்த ஊர்.
இந்தக் கவிஞரின் வசீகர முகமும் , சிகரட் புகைத்துக் கொண்டிருக்கக் கூடிய தோற்றமும் , ஆழ்ந்த விஷய ஞானம் நிறைந்த அற்புதமான பேச்சும் , அழகு ததும்பும் சிரிப்பும் இப்பொழுதும் எங்கள் நினைவுகளில் வந்து செல்லக் கூடிய வழக்கம் பெற்று இருக்கிறது.
நன்றி, அண்ணன் ஹிலால் முஸ்தபா.அவர்களுக்கு
http://hilalmusthafa.blogspot.in/2013/11/blog-post.html
No comments:
Post a Comment