Wednesday, November 11, 2015
மன அமைதியைப் பெறுவது எப்படி?
அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வை நினைவு கூர்வதால்தான் உள்ளங்கள் நிம்மதியடைகின்றன. (அல்குர்ஆன் 13: 28)
ஆம்! மேற்சொன்ன இறைவசனம் மனிதர்களுக்கு நிம்மதியைப் பெற வழி வகுக்கும் என்றால் அது மிகையாகாது.
இன்று மனிதர்கள் எவ்வளவோ வளர்ச்சியடைந்து, தொழில்நுட்பத்தின் மூலமும், பொருளாதாரத்தின் மூலமும் எவ்வளவோ முன்னேறி விட்டான்.
தங்களுடைய தேவைகளை எளிதாக பூர்த்தி செய்யும் அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. தகவல் தொழில்நுட்பம் முன்னேறி விட்டது. இதையெல்லாம் வைத்து மனிதனால் எவ்வளவோ தேவைகளைப் பூர்த்தி செய்ய முடிந்தளவுக்கு, அவனுடைய உள்ளத்துக்கு நிம்மதியை வாங்க முடியவில்லை.
அவனுடைய உள்ளம் நிம்மதியின்றி அலைந்து கொண்டிருக்கின்றது. இதைப் பெறுவதற்கு அவன் எந்த முயற்சியும் செய்யவில்லை.
இன்று மனிதர்களுக்கு இரண்டு விதமான நோய்கள் ஏற்படுகின்றன. ஒன்று உடல் ரீதியான நோய். மற்றொன்று மன ரீதியான நோய். உடல் ரீதியான நோய்க்கு மருந்து எடுத்துக் கொள்கின்றான். மன ரீதியான நோய்க்கு மருந்து எடுக்கத் தவறி விடுகின்றான்.
இதனால் வரும் பிரச்னைகள் ஒன்றல்ல. நூறல்ல. ஏராளமான பிரச்னைகள் உள்ளன. இதனால், தூக்கமின்மை, மலச்சிக்கல், தலைவலி, ஞாபக மறதி, கவனமின்மை போன்ற நோய்கள் நம்மை அறியாமலேயே ஆட்கொண்டு விடுகின்றன.
இந்த நோய்களுக்கு மருந்து எடுத்துக் கொள்கின்றோம். ஆனால், இந்த நோய்களுக்குக் காரணமான மனதளவிலான பிரச்னைக்கு தீர்வு என்ன என்பதைப் பற்றி சிந்திக்கத் தவறி விடுகின்றோம். அதனால்தான் இறைவன் இவ்வாறு கூறுகின்றான்:
இறைவனின் அருட்கொடைகளை நீங்கள் கணக்கிடும் சமயத்தில் அவற்றை உங்களால் என்ன முடியாது. (அல்குர்ஆன் 14: 34)
நிச்சயமாக இறைவன் நமக்கு கொடுத்துள்ள அருட்கொடைகளை எண்ணிப் பார்க்க தவறி விடுகிறோம். அதை எண்ணிப் பார்த்தால் நிச்சயமாக இறைவனை மீண்டும் மீண்டும் நினைவு கூர்வோம்.
உலகைப் பார்க்க அழகான கண்களை நமக்கு தந்திருக்கின்றான். நல்லதைக் கேட்க காதுகளைத் தந்திருக்கின்றான். நல்லதைப் பேச நாவைத் தந்திருக்கின்றான். அழகான முடி, அழகான கை, கால்கள், அழகான முடி, அழகான பற்கள் – இவையெல்லாம் நமக்கு யார் கொடுத்தது என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்?
நம்முடைய தாய், தந்தையரால் வாங்கித் தர முடியுமா? உறவினர்களால் வாங்கித் தர முடியுமா?நண்பர்களால் வாங்கித் தர முடியுமா? இது இறைவன் நமக்குத் தந்த அருட்கொடைகள். எதை வேண்டுமானாலும் பணங்களைக் கொடுத்து வாங்கி விடலாம். பொருட்களைக் கொடுத்து பெற்றுக் கொள்ளலாம். ஆனால், இவை இல்லை என்றால் சமூகம் நமக்கு கொடுக்கும் பெயர் ‘ஊனம்’.
இப்பொழுது சிந்தியுங்கள்! நாம் ஏன் இறைவனை நினைவு கூர்வதிலிருந்து விலகி நிற்கின்றோம்? ஏன் அவனுடைய படைப்புகளைப் பற்றி சிந்திக்க தவறுகிறோம். அவனுக்கு நன்றி செலுத்த மறுக்கின்றோம்.
இதை வரும் காலத்தில் நம்மை நாமே கேட்டுக் கொண்டு, இறைவனுக்கு நன்றி செலுத்துவோம். இறைவனை தினமும் காலையிலும், மாலையிலும் நினைவு கூர்வோம். பூரண மன அமைதியைப் பெறுவோம்.
நெல்லை சலீம்
http://www.thoothuonline.com/archives/49338
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment