Tuesday, November 17, 2015

ஒரு சில நாட்கள் முன்பு துபையில் மெட்ரோ ரயிலில் பயணம்...

 Mohamed Anas
ஒரு சில நாட்கள் முன்பு துபையில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துக் கொண்டிருந்தேன், என் பக்கத்து இருக்கையில் ஒரு ஆப்ரிக்கர் அமர்ந்திருந்தார். கிட்ட தட்ட 5 வருடங்கள் நானும் ஆப்ரிக்காவின் உகாண்டாவில் வேலை பார்த்த அந்த பசுமையான நினைவுகளும் ஆப்ரிக்கர் மீதான ஒரு பாசமும் இன்னும் மனதில் நீங்காமல் இருப்பதால் அந்த ஆப்ரிக்கரிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தேன்.

பேச்சு கொடுத்த உடன் அவரும் சரளமாக பேச ஆரம்பித்தார். அவருடைய சொந்த நாடு எது என்று கேட்டேன், "காம்பியா" என்றார். என்னுடைய நாட்டைப் பற்றி விசாரித்தார், நானும் சொன்னேன். ஆப்ரிக்காவில் நானும் சில ஆண்டுகள் பணியாற்றினேன் என்று சொன்னேன் ரொம்ப ஆச்சரியப் பட்டார். அவருடைய நாட்டைப் பற்றி விசாரித்தேன் ஆப்ரிக்க கண்டத்தின் மேற்கே அமைந்திருப்பதாக சொன்னார்.

இப்படி பல விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது, எனக்கு "காம்பியா" நாட்டைப் பற்றி எதிலோ படித்த நியாபகம் வந்தது. கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன், நினைவுக்கு வந்தது, உடனே அவரிடம் காம்பியா, செனகலின் பக்கத்து நாடா என்று கேட்டேன், ஆப்ரிக்கர்களுக்கே உண்டான ஒரு துள்ளலில் என் கையில் ஒரு தட்டு தட்டி மிகச் சரியாக சொன்னீர்கள் , காம்பியா, செனகலின் நடுவே அமைந்திருக்கிறது, உங்களுக்கு எப்படி தெரியும் என்று என்னிடம் திருப்பிக் கேட்டார்.

நான் அவரிடம் "The Roots" என்ற புத்தகத்தில் அந்த நாட்டைப் பற்றிப் படித்திருக்கிறேன் என்றேன். அவருக்கு சந்தோஷம் தாங்கவில்லை, என்ன நீங்கள் அந்த புத்தகத்தை படித்திருக்கிறீர்களா? ஒவ்வொரு காம்பியா நாட்டவனிடமும் சொல்ல வேண்டிய மிக முக்கியமான வரலாறு அந்த புத்தகத்தில் இருக்கிறது என்று அங்காலாய்த்தார். அதற்கு பிறகு அவர் இன்னும் மனது விட்டு என்னிடம் பேச ஆரம்பித்து விட்டார். சிறுது நேரத்தில் நான் இறங்க வேண்டிய இடம் வந்து விட, இருவரும் கை குலுக்கிக் கொண்டு விடை பெற்றோம்.

அவர் சொன்ன அந்த விஷயம், காம்பியா நாட்டவனிடம் சொல்ல வேண்டிய அந்த அளவுக்கு மிக முக்கியமான அந்த வரலாறு, ஒவ்வொரு காம்பியா நாட்டவன் மட்டுமல்ல ஒவ்வொரு மனிதனும் தெரிந்திருக்க வேண்டிய வரலாறு.


"The Roots" ஆங்கிலத்தில் பிரபல எழுத்தாளர் "Alex Haley" அவர்களால் எழுதப்பட்டது. (இவர் மல்கம் X அவர்களின் வாழ்கை வரலாற்றை தன்னுடை எழுத்தின் மூலம் உலகறிய செய்தவர்). இந்த புத்தகத்தை அழகு தமிழில், பிரபல எழுத்தாளரும், பன்னூல் ஆசிரியருமான "M.S. அப்துல் ஹமீத்" அவர்கள் "வேர்கள்" என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறார். "இலக்கியச் சோலை" பதிப்பகம் இதை வெளியிட்டிருக்கிறது.

இந்த புத்தகத்தின் தலைப்பே அதன் கருவை சொல்லி விடுகிறது. ஆப்ரிக்காவின் ஒவ்வொரு நாடுகளிலும் இருந்து, அமெரிக்காவுக்கும், மற்ற மேலை நாடுகளுக்கும் கடத்திச் செல்லப்பட்டு அடிமை சந்தையில் விற்கப்பட்ட அந்த கறுப்பின மக்களின் வரலாற்றை மிக அழகாக சொல்லியிருக்கிறார்.

அலெக்ஸ் ஹேலி ஒரு கருப்பினத்தை சேர்ந்த அமெரிக்கர். இந்த புத்தகத்தில் அவர் தன்னுடைய வேரைத் தேடிச் செல்கிறார். அமெரிக்காவில் வாழும் கறுப்பின மக்களின் வரலாற்றை இந்த புத்தகத்தில் அவர் விவரிக்கிறார். படிப்பவர் கண்களில் கண்ணீரை வரவழைக்கக் கூடிய உண்மை சம்பவங்களை மிக நேர்த்தியாக சொல்லியிருக்கிறார்.

இன்றைய உலகில் ஜனநாயக வாதிகளாக, மக்கள் உரிமையை பேணக் கூடியவர்களாக வேஷம் போட்டு அலையும் வல்லருசுகள், இரு நூற்றாண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தார்கள், "நிறவெறி" எவ்வளவு கொடூரமானது, ஒரு அடிமையின் வாழ்வு எவ்வளவு துயரம் நிறைந்ததாக இருக்கும், இப்படி எல்லவற்றையும் கண் முன் காட்சியாக்கியிருக்கிறார் மொழிபெயர்ப்பாளர் M.S. Abdul Hameed அவர்கள். படித்த பிறகு பல நாட்கள் என் சிந்தனைகளை இந்த நூல் ஆக்கிரமித்திருந்தது.


எல்லோரும் படிக்க வேண்டிய மிக அருமையான நூல்.
Abu Haashima

1 comment:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

இன்ஷா அல்லாஹ்
இந்தப் புத்தகத்தைப்
படிக்க ஆவல்
கொண்டுள்ளேன்.