+1 படித்துக் கொண்டிருக்கும்போது ஒரு நண்பனின் அண்ணன்தான் சேர்த்துவிட்டார்.
காலை 8.30 முதல் 3.00 மணி வரைதான் பள்ளி நேரம் என்பதால் அதற்குப் பிறகு வேலைக்குச் செல்லலாமென்று இணைந்தேன்.
சேரும்போது சம்பளம் குறித்து எதுவும் பேசவில்லை.
ஆரம்பத்தில் ஸ்க்ரீனைக் கழுவுவதுதான் பணியாக இருந்தது.
பின் பிரிண்டிங் செய்யும்போது உதவுவதும், ப்ரிண்டிங் முடிந்த பேப்பரிலிருந்து ஸ்டிக்கர்களை தனித்தனியாக ப்ளேடால் பிரிப்பதுமாகத் தொடர்ந்தது.
கம்ப்யூட்டர் அதிகம் புழங்கப்படாத 1989/1990 காலகட்டம் அது. கைகளால் ஓவியம் வரைந்துதான் டிசைன்கள் உருவாயின.
அதை கவனிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தேன்,மேலும் கலர்கலரான ஆங்கில தமிழ் மாத இதழ்களும் அங்கு வருமென்பதால் தினமும் ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டுபோய்ப் படிப்பதை/பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தேன்.
கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் கழிந்தபிறகும் சம்பளம் ஏதும் கொடுக்கவில்லை அவர்கள். மிகத்தயங்கி ஒருநாள் கேட்டேன்,
அண்ணன் வரட்டும் என்று தம்பியும் தம்பி வரட்டும் என்று அண்ணனும் மாறிமாறிச் சொல்லிக் கொண்டிருந்தனர்.
ஒருமுறை இரு மகராசன்களும் ஒன்றாய் இருக்கும்போது
"சார் சேலரி இன்னும் கொடுக்கல" என்று நினைவூட்டினேன்.
ஒரு நிமிஷம் வெய்ட் பண்ணுதம்பி என்றுவிட்டு இருவரும் நீண்டநேரம் குசுகுசுவென்று பேசிவிட்டுப் பிறகு அழைத்து
பணத்தைக் கொடுத்தார்கள்.
அது,
ஒரு ஒற்றை ஐம்பது ரூபாய் நோட்டு.
எனக்கு ஒன்றுமே புரியவில்லை, பதட்டமாக இருந்தது.
கைகள் நடுங்கின, அழுகை அழுகையாய் வந்தது.
"ஒன்றரை மாச வேலைக்கு அம்பது ருவா சம்பளமா சார்..?"
என்று தழுதழுத்த குரலில் கேட்டேன்,
"பரஸ்பரம் முகம் பார்த்துக்கொண்ட அண்ணனும் தம்பியும் எங்களுக்கே எங்கப்பா ஆளுக்கு ஐநூறு ரூவாதான் தர்ரார்.."
என்று கெக்கெக்கேவெனச் சிரித்தபடி
" நல்லா வேலை செய் தம்பி, அப்பாட்ட கேட்டுட்டு சேத்துத்தரச் சொல்றேன்" என்றனர்.
அந்த பணத்தைத் தூக்கி முகத்தில் வீசிவிட்டு வரத் தோன்றினாலும் அடக்கியபடி ஒன்றும் சொல்லாமல் வெளியே வந்து பொங்கிவந்த அழுகையைக் கட்டுப்படுத்த இயலாமல்
அந்த பிரஸ்ஸை நோக்கி கல்லை விட்டெறிந்து கத்தினேன்,
"போங்கடா திருட்டுத் ....."
நிஷா மன்சூர்
முன்னாள் முதலாளியும் முதல் முதலாளியும்.....அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் நிஷா மன்சூர்
No comments:
Post a Comment