நேர் கானல் : கிண்ணியா பாயிஸா அலி
தென்றலே கவிபாடும் தென்கிழக்கு மண்ணின் கிராமம் ஒன்றின் தெருக்கோடியில் நின்று கொண்டு கூழான் கல்லொன்றை கூலிக்கெடுத்தாவது விழிகளை மூடிக் கொண்டு வீசினால் விர்ரென்று விரைந்தேகும் அக் கல் விழும் இடம் ஒரு கவிஞனின் வீடாக இருக்கும் இல்லாவிட்டால் ஒரு எழுத்தாளனின் தலையாக இருக்கும்.
கன்னித் தமிழின் கழுத்துக்கு கனகமணி மாலையிட்டு விண்ணுலகம் விரைந்திட்ட முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாந்த அடிகளார்.அவர் அன்புச் சீடன் ஆசுகவி புலவர்மணி ஆ.மூ.சரிபுதீன் போன்ற ஆன்றோர்களும் ;வாடிநிற்கும் பயிராய்,வாழ்வோடிந்த உயிராய்,வரண்டு போன நதியாய் கிடந்த ஈழத்து இலக்கியத்தை வளப்படுத்தி வாகை சூடிய சான்றோர்களும் பிறந்து சரித்திரம் படைத்த மண் தென் கிழக்கு மண்.அம் மண்ணில் வைரக்கற்களோடு வைரக்கல்லாக தன்னையும் பதித்துக் கொண்ட பெண் படைப்பாளி தான்சகோதரி கலைமகள் ஹிதாயா றிஸ்வி..
வினா : நீங்கள் சுமார் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக எழுத்துப் பணியில் இருந்து வருகின்றீர்கள். இது
பற்றி சொல்லுங்கள் ..?
விடை : பணத்தை எல்லோராலும் மண்ணிலிருந்து தேடலாம், ஆனால் கற்பனையில் உருவாகும்
யதார்த்தங்களை எல்லோராலும் தேட முடியாதே!
மகத்தான மாற்றங்களை உருவாக்கும் வல்லமை பெற்றவை இந்த இரத்த புஷ்டியுள்ள
ஆக்கங்களாகும். வானைப் பார்த்து “உருவாகும்”கற்பனைகளை விட மண்ணில் இருந்து
“உருவாகும்”யதார்த்தங்களும் சிறப்பானவைகளேயாகும்.
“கவிஞன் பிறக்கின்றான்! அவன் செய்யப்படுபவன் அல்ல! என்பது போல!கவிதைகளும் “
செய்யப்படுபவை”அல்ல!
ஆனால் கவிஞன் பிறந்து வளர்கின்றான்.
கவிதைகளோ வளர்ந்த பின்பே பிறக்கின்றன. இதுவே எனது சிந்தனைகளில் தூவும் தூறல்
எழுத்துக்களாகும்.
வினா : உங்களின் இலக்கிய அனுபவம் பற்றி …….?
விடை : கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் மொழி. இம்
மொழியை நான் படிக்க வில்லை . வேறு ஒரு மொழியைப் படித்தேன். அதனால் எனக்கு
தமிழ் மொழியில் (இலக்கியத்தில் ) ஆர்வம் ஏற்பட்டது. அத்தோடு,
நான் வாழும் யுகத்தில், சூழலில் மலிந்து கிடக்கும் சமூக முரண்பாடுகளையும்,
அந்த முரண்பாடுகளால் மனித குலத்திற்கு ஏற்படும் அவலங்களையும் , சித்தரிப்பதே ஆகும்.
அந்த சித்தரிப்பில் தவிக்க முடியா நிகழ்வாக கிழக்கு மாகாண சூழல் முதன்மை பெறுவதற்கான காரணம்.
எனது ஜீவித சூழல் அத்தகையதாக இருப்பதே ஆகும்.
வினா : தமிழ் மொழியில் கல்வி கற்காத நீங்கள் மரபுக் கவிதை , புதுக் கவிதை எழுதுவது பற்றி .....?
விடை : முறையாக ஐந்து வரை ஆங்கிலத்தில் கற்று அதன் பிறகு அரபுக் கல்லூரியில் கற்று முடித்து
விட்டு உலக பாடசாலையில் அனுபவப் பாடம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன்.
கற்று வரும் அந்த அனுபவ பாடமே எனது எல்லா துறை வளர்ச்சிக்கும் மூச்சாகும்.
கவிதைகளோ காலங் கடந்து கூடிய சிரஞ்சீவித்துவ வரத்தைப் பெருகின்றன.
இலக்கியப் பரப்பில் , கவிதைகளுக்குரிய நிலை உன்னதமானது . அவை வெறும்
சொல்லடுக்குகளாகவோ , சோடனை வரிகளாகவோ பண்ணப்படுபவை அல்ல !
மாறாக சமுதாயத்தை நிலைக்களனாகக் கொண்டு கருவாகி , இதயத்தில் உருவாகி
அங்கிருந்து உணர்ச்சியோடும் , சத்தியா வேசத்தோடும்”பிரசவ” மாகின்றது. இந்த வகையில்
எனது கவிதைகளும் நானும் ,எந்த ஸ்தானத்தில் இருக்கின்றோம் ? என்பதைத் தெளிவு படுத்த வேண்டிய
கடமை என்னுடையதல்ல ! அது சுவைஞர்களாகிய உங்களின் கடமை என்பதே பொருத்தமாகும்.எனது
கவிதைகளில்,யாரும் இலக்கணக் குற்றங்களை தேடிக் கொண்டிருக்கத் தேவையில்லை.ஏனெனில் !
நான் இலக்கண ஏடுகளை எட்டிப் பார்த்ததுமில்லை ! தமிழ் மொழியை கற்றவளும் அல்ல. அதனால் !
தலைக்கனங் கொண்டு மார் தட்டிப் பேசுவதுமில்லை ! கிழக்கு மண்ணில் பிறந்ததை பாக்கியமாகக்
கருதுகின்றேன். மரபென்றும் , புதிது தோன்றும், மல்லுக் கட்டும் இக்கால கட்டத்தில் ! நான்
கவிதையென்று பட்டதை எழுதி வருகிறேன். நான் இலக்கிய உலகில் கால் ஊன்றி உள்ளேனா
என்பதனை தீர்மானிக்க வேண்டியது காலமும் , வாசகர்களும் , விமர்சகர்களும் தான்.
புதுக் கவிதை , மரபுக் கவிதை , நவீன கவிதை எல்லாமே கவிதை தான் கவிஞருக்கு
கற்பனை தான் முக்கியம் . கவிதைகள் என்று பிரித்துப் பார்ப்பது அல்ல.
வினா : இலக்கிய உலகில் அதிகம் நேசிப்பவர் யாராவது…உண்டா சகோதரி ?
விடை : மனிதாபிமான உணர்வுமிக்க ,கலை,இலக்கியத்தின் மீது ஆத்மா சுத்தமான நேசம் கொண்ட
எல்லா மனிதர்களையும் நான் நேசிக்கின்றேன்.
வினா : நீங்கள் வெளியிட்டுள்ள கவிதை தொகுதிகள் பற்றி....சொல்லுங்கள் ?
விடை : இதுவரை எனது மூன்று கவிதை தொகுதிகள் வெளிவந்துள்ளன.
நாளையும் வரும்
(புதுக் கவிதை)
தேன் மலர்கள்
(இலங்கை முஸ்லிம் பெண் கவிஞரால் எழுதி வெளியிடப்பட்ட முதல் மரபுக்கவிதை)
இரட்டை தாயின் ஒற்றைக் குழந்தை
(புதுக் கவிதைத் தொகுதி – கவிஞர் மஸீதா புன்னியாமினுடன் இணைந்து வெளியிட்டது)
வினா : உங்களுக்கு கிடைத்த பரிசுகள் ,பாராட்டுக்கள் பற்றி சொல்லுங்கள் சகோதரி......?
விடை :
- 1988 இளைஞர் சேவைகள் மன்றமும்,இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சும் இணைந்து நடாத்திய
கவிதைப் போட்டியில் அகில இலங்கை ரீதியாகவும், மாவட்ட ரீதியாகவும் முதலாம் இடத்தைப்
பெற்றமைக்காக ஜனாதிபதி விருது.
- 1999 ஆம் ஆண்டு “ரத்ன தீப”சிறப்பு விருது பெற்ற முதலாவது பெண் கவிஞர்.
- 2002 இல் முஸ்லிம் கலாச்சார அமைச்சின் அனுசரணையோடு நடாத்தப்பட்ட உலக இஸ்லாமியஇலக்கிய
மாநாட்டில் இளம் படைப்பாளிக்கான விருது
- 2005 ஆம் ஆண்டு உயன்வத்தையில் நடைபெற்"ப்ரிய நிலா 'இலக்கிய விழாவின் போது
கலை அரசி விருது .
- 2009 இல் பல்கலை வேந்தர் , ஞானக்கவி , சட்டத்தரணி , பிரதியமைச்சர், அல்-ஹாஜ் கெளரவ எஸ்.நிஜாமுதீன்
(பா.உ) அவர்களால் நிந்தவூர் ஆர்.கே.மீடியா பணிப்பாளர் ராஜகவி ராஹில் (இலங்கை வானொலி
அறிவிப்பாளர்) அவர்களின் சார்பில் "கவித்தாரகை "பட்டமும் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
- 2011 இல் லக்ஸ்டோ அமைப்பினால் கலைமுத்து ( மருத மா மணி முத்து )
போன்ற விருதுகள் கிடைத்து.இதை விட நான் பல உயர்ந்த விருதுகளையும் பெற்றுள்ளேன்.
அவை எனது இலக்கியப் பணிப் பயணத்தில் எனக்கு கிட்டிய நேச உள்ளமிக்க நல்ல உள்ளங்களின் உறவுகளாகும்.
வினா : உங்களை பற்றி சிறப்பு குறிப்பு, உங்கள் இலக்கிய சேவைகள் பற்றி சொல்லுங்கள்....?
விடை : - இலங்கையிலுள்ள தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் அமைப்பாளர்.
- இலங்கையிலுள்ள தடாகம் கலை இலக்கிய மலரின் பிரதம ஆசிரியர்.
- இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சியின் மாதர் மஜ்லிஸ் பிரதி தயாரிப்பாளர்களில் ஒருவர்.
- இலங்கையிலுள்ள பேராதனைப் பல்கலைகழகத் தமிழ்த் துறைப் பேராசிரியர் க.அருணாச்சலம்
அவர்களது ‘மலையக இலக்கியம்’ ஆய்வில் சில கவிதைகள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
- இலங்கை அரசின் பாடப் புத்தகமான தமிழ் மொழியும் இலக்கியமும் தரம்-09 நூலில் ‘வாழும் வழி’
எனும் கவிதை இடம் பெற்றுள்ளது.
- எனது பல கவிதைகள் ‘பஸீர் அஹமட் அல் அன்சாரி அல் காதிரி' அவர்களால் அரபு மொழியில்
மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
- இலங்கையிலிருந்து வெளிவரும் அனைத்து பத்திரிகைகளிலும்,இந்தியாவிலிருந்து வெளிவரும்
சமரசம் பத்திரிகைகளிலும் எனது கவிதைகள் மற்றும் படைப்புக்கள் வெளிவந்துள்ளன.
- சென்னையில் நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஏழாம் மாநாட்டில்
இலங்கையிலிருந்து கலந்து சிறப்பித்த முஸ்லிம் பெண் கவிஞர்
- மலேசியாவில் நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் கலந்து
கொண்ட பெண் கவிஞரில் நானும் ஒருவர்அத்துடன் குவைத் ,றியாத் ,சவூதிஅரபியா
நாடுகளுக்கும் சென்று உள்ளேன் .
- இலங்கையிலுள்ள தடாகம் கலை இலக்கிய வட்டத்தினால் வருடா வருடம் கலை உள்ளங்களை
" கலைத்தீபம் " விருது வழங்கி கெளரவித்துவருகின்றேன்.
( இதுவரை சுமார் 55க்கு மேற்பட்ட கலை உள்ளங்கள் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார்கள் )
வினா : இன்றைய எழுத்தாளர்களில் நீங்கள் விரும்புபவர் யார் சகோதரி ..?
விடை : கண்டது கற்கப் பண்டிதன் ஆவான் என்பது போல எல்லா எழுத்தாளர்களுடைய
படைப்புக்களையும் படிப்பேன் தரமாக எழுதும் அணைத்து எழுத்தலர்களையும் எனக்கு பிடிக்கும்.
வினா : இறுதியாக இலக்கிய உலகில் வளரும் இளையவர்களுக்கு நீங்கள் கூறும் ஆலோசனை…?
.
விடை : இலக்கிய வழி பயணத்தில் இன்னும் என்னை இளையவளாகத்தான் கருதி கொண்டிருக்கிறேன்.
அதனாலும்,ஆலோசனையோ,புத்திமதியோ சொல்வது ஞானப்பீடத்தில் அமர்ந்து உபதேசம் செய்வது போலாகி விடும்.
ஏனென்றால் இன்று ஞானபீடங்களுக்கும் நடைமுறைகளுக்குமிடையில் நிலவும் இடைவெளிகளை போல்
உங்களுங்கும் எனக்கு மத்தியிலும் நான் இடைவெளிகளை அல்லது இடை வேலிகளை போடத் தயாராக
இல்லை.நான் சொல்லும் கருத்துக்களெலாம் சிநேகபூர்வமான வேண்டுகோள்கள் தான்.அந்த முறையில் இளைய
படைப்பாளிகளின் மத்தியில் நான் முன் வைக்கும் வேண்டுகோள்கள் என்னவென்றால் இலக்கியத் தேடலை உங்கள்
இலக்கிய வளர்ச்சிக்கு தேவையான மிக முக்கிய நிகழ்வு. நல்ல படைப்புக்களை வெளிச்சம் போட்டு காட்டும்
விமர்சனங்களைப் படியுங்கள் .அதன் விளைவாக உங்களுக்குள் ஆத்மார்த்த கலை,இலக்கிய உணர்வு உறங்கி
கிடக்குமாயின் மேற்கொன்ட தேடலினால், முயற்சியினால் கிடைக்கும் நல்ல கலை சிருஷ்டிப்புக்கள் தரும்
அனுபவமே உங்களை உங்களுக்கே இனங்காட்டி விடும்.அந்த சுய அனுபவ தரிசனத்தை தண்டவாளமாக்கி உங்கள்
இலக்கிய வழிப் பயணத்தை தொடர்ந்தீர்களானால் நிச்சயமாக தனித்துவமிக்கவராக கலை இலக்கிய வழி பயணத்தில்
உங்களுக்கான இடத்தினை பெறுவீர்கள்.எந்தவொரு கலையினது அடிப்படை தத்துவத் தெளிவும் இந்த உலகின்
அனுபவ கூர்மையும் உங்கள் இலக்கிய வழி பயணத்தின் சரியான திசைகளாக உங்களுக்கு கிட்டி விட்டால் பிறகு
உங்களுக்கு எந்த வழிகாட்டியும் தேவையில்லை.ஏனென்றால்,
நதிகளுக்கு யாரும் கடலின்
விலாசத்தை சொல்லி கொடுப்பதில்லை........!
நன்றி சகோதரி
No comments:
Post a Comment