Thursday, May 27, 2021

"என்னங்க மூட்டை"

 

Abu Haashima



"என்னங்க மூட்டை"

"ஒண்ணுமில்ல. ரேசன் கடையில 2 ஆயிரம் ரூபா குடுத்தாங்க, அதான் கொஞ்சம் மளிகை சாமான் வாங்கிட்டு வந்தேன்"

ஓடிவந்து மூட்டையைக் பிரிக்கும் மனைவியை அதட்டினார்

ஏய் அத எடுக்காத இது நமக்கு இல்ல. இது நம்ம பொண்ணு வீட்டுக்கு

ஏன் நமக்கு வாயும் வயிறும் இல்லையா. உங்க பொண்ணுக்கு மட்டும் தான் வாயும் வயிறும் இருக்குதா. ஆயிரம் ரூபா வாங்கிட்டு வந்துருக்கீங்க. மீதிய குடுங்க

இதுவே 2400 ரூபாய் ஆச்சு, 400 ரூபாய் கடன் சொல்லிட்டு வந்திருக்கேன்

அப்போ எனக்கு ஆஸ்துமா மாத்திரை வாங்கலே. அந்த உறிஞ்சிர மிசினு இன்னும் வாங்கல அதானே

வாங்கிக்கலாம். எப்படியும் காசு வரும்போது உனக்கு வாங்கி தரேன். உனக்கு வாங்கித் தராம வேற யாருக்கு வாங்கி தர போறேன்

அய்யோ வாங்கி கொடுத்தாலும், நான் ஆறு மாசமா கேட்டுட்டு இருக்கேன். மூச்சு விட முடியல. கஷ்டமா இருக்குன்னு சொல்லிட்டு இருக்கேன். அதை வாங்கி கொடுக்க முடியல. 1000 ரூவா வாங்கி அப்படியே மகளுக்கு மளிகை சாமான் வாங்கிட்டு வந்துட்டீங்க

சரி, எப்படி போவீங்க பஸ் இல்ல. ட்ரெயின் இல்ல. ஆட்டோவும் கிடையாது.எப்படி போவீங்க.

சைக்கிள்ல போவேன்

ஏன் பாதிலேயே வெய்யில்ல சுருண்டு விழுந்து சாகுறதுக்கா

நல்ல வார்த்தையே பேச மாட்டியா நீ

இப்ப போக வேணாம் நாளைக்கு காலைல போய் குடுத்துக்கலாம்

இல்லல்ல நான் இப்பவே கிளம்புறேன்

போங்க. போலீஸ்காரன் சாமானையும் சைக்கிளையும் புடுங்கி வச்சுகிட்டு, உங்களை தோப்புக்கரணம் போட சொல்லுவானோ, குட்டிக்கரணம் போட சொல்லுவானோ. நடந்து தான் வரப் போறீங்க

நல்ல வார்த்தையே பேச மாட்டியா

ஐயையோ துரை போருக்கு போறாரு. நல்ல வார்த்தை சொல்லி அனுப்பனும்.

சரி கிளம்பனும் பழைய சோறு இருந்தா கொடு

அதான் மக வீட்டுக்கு போறீங்கள்ள. உங்க மக சமைச்சு வச்சிருப்பா. அங்கே போய் சாப்பிட்டு வாங்க

சரி நான் கிளம்புறேன்

சொன்னா கேக்க மாட்டீங்க. பட்டா தான் உங்களுக்கு புத்தி வரும்.போலீஸ்காரன் உங்கள அடிச்சு உதைச்சு அனுப்பும்போது தான் நான் சொன்னது ஞாபகத்துக்கு வரும்

அவர் சைக்கிளில் எல்லா மளிகை சாமான்களையும் மூட்டையாக கட்டி, பின்பக்கம் வைத்துக் கொண்டு கிளம்பினார்

ஒரு பத்து கிலோமீட்டர் வந்திருப்பார்.அங்கே திருவந்திபுரம் கெடிலம் ஆற்று பாலத்தை தாண்டிய சாலையில் தடுப்பு அமைத்து  போலீஸ்காரர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.

மனைவி சொன்னது போல் போலீஸ்காரர்கள் சாமானையும் சைக்கிளையும் பிடிங்கி கொள்வார்களோ. தோப்புக்கரணம் போடச் சொல்லி போட்டோ எடுத்து டிவியில் போடுவார்களோ.தெரியாமல் வந்து விட்டோமோ.

பயம் தொற்றிக் கொண்டது.

அவர் அருகில் சென்றபோது ஒரு போலீஸ்காரர் தடுத்து நிறுத்தினார்

என்னா பெருசு எங்க கிளம்பிட்டே

ஐயா மஞ்சகுப்பம் வரை போறேங்கய்யா. மக வீட்டுக்கு மளிகை சாமான் வாங்கிட்டு போறேங்கய்யா

சைக்கிளை ஓரமாக நிறுத்து.  அந்த மூட்டைய தூக்கிட்டு வா

அவ்வளவுதான் 1,400 ரூபாய் மளிகை சாமான் போக போவுது

மிதிவண்டியை நிறுத்தி ஸ்டாண்ட் போட்டு, மளிகை சாமான் மூட்டையை இறக்கி கீழே வைத்தார்

யோவ் பெருசு அந்த ஜீப்புக்குள்ள இன்ஸ்பெக்டர் உக்காந்திருக்காரு அவரை போய் பாரு

அவர் போலீஸ் வண்டியை நோக்கி நடந்தார். வண்டியில் வாட்டசாட்டமாய் கூலிங் கிளாஸ் போட்ட பெரிய மீசை வைத்திருந்த அந்த இன்ஸ்பெக்டர் அமர்ந்திருந்தார்

என்ன பெரியவரே எங்க கிளம்பிட்டீங்க

ஐயா மஞ்சகுப்பம் வரை போறேங்கய்யா. பொண்ணு அங்க இருக்கு.  மாப்பிள்ளை டிரைவரா இருக்காரு. வேலை இல்ல. அதான் கவர்மெண்ட் கொடுத்த ஆயிரம் ரூபாயில கொஞ்சம் மளிகை சாமான் வாங்கிட்டு போறேங்கய்யா

ஊர்ல தடை போட்டுருக்காங்க தெரியாதா பெரியவரே

தெரியுங்கய்யா. ஆனா நாலு உசுரு அங்க சோத்துக்கு இல்லாம கஷ்டப்படுமே. அதனாலதான் இத போயி கொடுத்துட்டு வந்துடலாம்னு கெளம்பினேய்யா

என்ன வயசு ஆகுது பெரியவரே உங்களுக்கு

63 வயசு ஆகுதுங்கய்யா

அருகில், நடு சாலையில் பத்துப் பதினைந்து இளைஞர்கள் தோப்புக்கரணம் போட்டுக் கொண்டிருந்தார்கள். இவருக்கு மனசு பிசைந்தது. நடுக்கம் வந்தது.

கான்ஸ்டபிள் வந்தார்.

சார் இந்த ஆள் கொண்டு வந்த மூட்டைய சீஸ் பண்ணிட்டேன் சார்

உன் வயசென்னை அவரு வயசு என்ன ஆளுன்ற

சாரி சார்

அந்த கான்ஸ்டபிள் தள்ளி போய் நின்று கொண்டார்.

பெரியவரே சாப்பிட்டீங்களா

இல்லீங்க சார்

கான்ஸ்டபிள் அந்த சாப்பாடு பொட்டலத்துல ஒண்ணு  எடுத்து குடு

ஐயா எனக்கு வேண்டாய்யா. நான் மகள் வீட்டுல போய் சாப்பிடுகிறேன்

 சாலையில் தோப்புக்கரணம் போட்டுக் கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவன் ஏதோ சொல்ல,

சட்டமா பேசறே என்று ஒரு கான்ஸ்டபிள் அவனை முதுகில் அடித்தார்

அங்க போய் கறியும் சோறும் தின்னுங்க.  இது சும்மா பிரிஞ்ஜி தான்.  சாப்பிட்டுக்கங்க. வெயில்ல எப்படி சைக்கிள் மிதிப்பீங்க

சாப்பிட்ட பின் தோப்புக்கரணம் போட சொல்வார்களோ

ஜீப் மைக் கர கரவென்று பேசிக்கொண்டே இருந்தது.

நாளைக்கு காலையில் சீக்கிரமா கிளம்பி போயிருக்கலாம் என்று நினைத்துக்கொண்டார்.

கான்ஸ்டபிள் எடுத்து வந்து கொடுத்த ஒரு பொட்டலத்தையும் ஒரு தண்ணீர் பாட்டிலையும் வாங்கிக்கொண்டார்.

பெரியவரே அதோ அந்த மரத்தடி இருக்குல்ல. இல்லன்னா அந்த கடைவாசல் இருக்குல்ல அங்க உக்காந்து சாப்பிடுங்க.

இன்ஸ்பெக்டர் சொன்ன இடத்தில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தார்

பெரியவரே நல்லா சாப்பிடுங்க இன்னொரு பொட்டலம் வேணுமா

இன்ஸ்பெக்டர் கேட்க, அவர் வேண்டாம் என்று தலையாட்டினார்.

சாப்பிட்டு தண்ணீர் குடித்து கை கழுவினார். பரவாயில்லை வயிறு ரொம்பிடுச்சி. இப்ப முட்டி போடலாம். தோப்புக்கரணம் போடலாம்.

பெரியவரே சாப்பிட்டீங்களா

சாப்பிடங்கய்யா

ஜீப்ல கொண்டு வந்து உங்க மகள் வீட்டுல விடட்டுமா

ஐயா வேண்டாங்கய்யா நான் போயிடுவேங்கய்யா

சரி இந்த பனியனை போட்டுக்கோங்க. இந்த தொப்பிய போட்டுக்கோங்க. இது வாலண்டியர்ஸ்  போட்டுக்கறது. அரசாங்கம் கொடுக்கிற பணத்தை வாங்கினமா தண்ணி அடிச்சமா தலைகுப்புற விழுந்தமான்னு இல்லாம, நாலு உசுருக்கு சோறு போட சாமான் வாங்கிட்டு போறீங்களே. நீங்க தான் உண்மையான வாலண்டியர்.

 இந்த பனியனை  போட்டுக்கோங்க. பத்திரமா போயிட்டு வாங்க.

அது கனவா நனவா என்று நம்ப முடியாமல் பனியனை வாங்கி மாட்டிக்கொண்டார்.

இன்ஸ்பெக்டருக்கு இரண்டு கை குவித்து வணக்கம் வைத்தார்.

 சைக்கிளில் ஏறி, மகள் வீட்டை நோக்கி சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தார்.

*

அப்பா எப்படி வந்தீங்க. எதுக்குப்பா சைக்கிள்ல வந்தீங்க. கை கழுவுங்க.

பேரன்கள் ஓடி வந்து கட்டிக் கொண்டார்கள்.

பேரன்களை அணைத்து உடனே தள்ளிப் போகச் சொன்னார்.

மகள், அவர் வாங்கி வந்த பொருட்களை எடுத்து உள்ளே வைத்துவிட்டு

என்னப்பா தனியா வந்துருக்கீங்க அம்மாவை கூட்டிட்டு வந்து இருக்கலாம்ல

இல்லம்மா. இன்னொரு நாளைக்கு  கூட்டிட்டு வரேன். நான் கிளம்பட்டுமா. இங்க இருக்கிறது அவ்வளவு நல்லது இல்லம்மா. நான் வீட்டுக்கு போயிடுறேன். உங்க அம்மா தனியா இருக்கும்.

அப்பா சாப்பிட்டு போங்கப்பா. சாப்பாடு ரெடியா இருக்குப்பா

நான் சாப்பிட்டேன்மா

ஏதுப்பா இந்த பனியன் நீங்க வாலண்டியரா இருக்கீங்களா

நடந்த எல்லா விஷயங்களையும் மகளிடம் சொன்னார்

பேரன்களை அழைத்து அவர்களுக்கு காசு கொடுத்து விட்டு கிளம்பினார்

மகள் ஒரு பையோடு வந்தாள்.

அப்பா  பையில கொஞ்சம் பழங்கள் இருக்கு. எடுத்துட்டு போயி அம்மாகிட்ட கொடுங்கப்பா. அம்மாவுக்கு ரோட்ஹெலர் மெஷின் வாங்கினேன். அத கொடுத்துடுங்கப்பா.  அம்மாவுக்கு ஆஸ்துமா மாத்திரை வாங்கி இருக்கேன் அதையும் மறக்காம குடுத்துடுங்கப்பா.

பையை வாங்கிக்கொண்டார்.

மாப்பிள்ளை எங்கம்மா

அப்பா அரசாங்கத்துல  காய்கறி எல்லாம் வண்டியில் போய் விக்க சொல்லியிருக்காங்க. அதான் ஒரு காய்கறி வண்டியில டிரைவரா போயிருக்காருப்பா

இந்த ஆஸ்துமா மெஷினுக்கும்,'ஆஸ்துமா மாத்திரைக்கும் ஏதும்மா காசு

போன மாசம் சம்பளத்திலேயே இது இரண்டும் வாங்கி வச்சுட்டேன் பா

அவர் சைக்கிளை எடுக்க வீட்டை விட்டு வெளியே வந்தபோது மகள் ஓடிவந்து அவர் சட்டைப்பையில்  இரண்டு ஐநாறு ரூபாய் நோட்டுகளை வைத்தார்

அப்பா எங்களுக்கும் நேத்துதான் அரசாங்கத்திலிருந்து 2 ஆயிரம் ரூபாய் கொடுத்தாங்க. நேத்து நைட்டு உங்க மாப்பிள்ளை சொல்லிட்டாரு, உங்க அப்பா அம்மாக்கு கொடுத்துடு. நம்ம ஏதாவது வேலை செஞ்சி சம்பாரிச்சுக்கலாம். வயசானவங்க என்ன பண்ணுவாங்கன்னு சொன்னாருப்பா.

சரிம்மா. மாப்பிள்ளைய கேட்டேன்னு சொல்லு. பத்திரமா இருங்கம்மா.

அவர் உயிரை தன் மகள் வீட்டில் வைத்து விட்டு மிதிவண்டியில் ஏறி தன் வீட்டை நோக்கி மிதிவண்டியை இயக்க ஆரம்பித்தார்...

#நீயா_நானா_கோபிநாத்தின்_பதிவு


No comments: