மிடுக்கு, துடுக்கு, எடக்கு.........
நிரம்ப வேண்டாம் ஒரு 5 நாட்கள் மட்டும்.......என்னைப்பார் என் அழகைப் பார் என்று சொல்லாமல் சொல்லி தலையை நிமிர்த்தி; போகும் பாதையில் உரக்க தட்டி நடந்து, மண்ணில் உழல்வோரை சிறிதும் பொருட்படுத்தாமல், நான்தான் நானேதான் என்று சொல்லியும்......
மெல்லிய இதழில் முத்தமிட்டால் துள்ளும் அவள் உதடுகள் துவண்டு போகுமென்று எப்படி ஒத்தடம் கொடுப்பதென்பதை அறியாமல் மாதங்கள் பல கடந்து விட்டனவே என்று கைசேதப்படும் கைதேர்ந்த கவிகளும்........
நாளைக்கா மிக முக்கியமான வேலை இருக்கிறதே, இனியொருநாள் முயற்சிக்கிறேன் என்று ஏழை வீட்டு விருந்தை அவமதிக்கும் ஆணவ மூளை கொண்டிருப்போரும்........
அன்ன ஆகாரமின்றி, தாகம் தீர்க்க ஒரு சொட்டு நீருமின்றி பரந்து விரிந்து கிடக்கும் எப்போதும் அனலான மணற்காற்று வீசிக் கொண்டிருக்கும் ஒரு பாலைவன பிரதேசத்தில் ஐந்து நாட்கள் அலைந்து திரிந்து உயிர் பிழைத்து வா பார்க்கலாம் என்று விடப்பட்டால் என்கிற ஒரு நிலையில்.........
என்னாகும் இவர்களின் நிலை, இதுபோன்றோரின் தகாத நிலை?
தலை நிமிர்த்தி நடக்க முடியுமா மிருதுவான உதடுகளை எப்படி முத்தமிட முடியும் என்கிற கற்பனை வருமா ஏழை வீட்டு சாப்பாட்டை உதாசீனப்படுத்தவும்தான் முடியுமா?
ஒரு ஐந்து நாள் பாட்டுக்கே இப்படி எல்லாம் செயற்கை வேஷங்கள் அப்படியே அடியோடு மறைந்து ஒழியும் போது.......
இப்படித்தான் இந்த உலகின் வாழ்வு இருந்து கொண்டிருக்கிறது என்கிற உரத்த சிந்தனையை உரமாக தன் அடி மனதில் நிரப்பிக் கொண்டால், அந்த சிந்தனையை செடியாக மரமாக தன் உள்ளத்தில் வளரச் செய்தால், அப்படியானவனே இவ்வுலகில் பூரணமானவன் என்றாகிறான், வெற்றியாளன் என்றுமாகிறான்!
No comments:
Post a Comment