Raheemullah Mohamed Vavar
எங்கும் நிரம்பித்தான் இருக்கிறது வீசும் காற்று, அதில் சுவாசிக்கும் ஆக்ஸிஜனும் எப்போதும்போல் நிறைந்துதான் இருக்கிறது. எனினும் மூச்சுவிடும் மனிதனுக்கு அதே காற்றிருந்தும் காற்றை இழுத்து சுவாசிக்கும் மூக்கிருந்தும் அதை உள்வாங்கிக் கொள்ள நுரையீரல்கள் இரண்டிருந்தும் பிராணவாயு கிடைக்காமல் போவது எதனால், மூச்சு முட்டிப் போவதும் முடிவு ஏற்பட்டு போவதும் எதனால்?
மருத்துவத்தில் சாவுக்கு முக்கியமாக இரண்டு காரணங்களைச் சொல்வார்கள்-
உடம்பிலிருந்து இரத்தம் அதிகமாக வெளியேறி விடுவதாலும் உள் உறுப்புக்கள் தங்கள் செயல்களை நிறுத்தி விடுவதாலும் என்று. ஆயின் இதில் வேடிக்கை போல் தோன்றுவது என்னவென்றால்.....
சுவாசிக்க காற்றும் இரத்தமும் தேவையான அளவுக்கு இருந்திருக்கிறது, உடல் உறுப்புக்களும் இறப்பதற்கு முந்தைய விநாடி வரை ஒழுங்காக வேலையும் செய்திருக்கின்றன என்கிற போது, இன்றைக்கு பெரும்பான்மை மரணங்கள் உடனடி வாட்ஸ் அப் போல் தடாலடி ஹார்ட் அட்டாக்-கால் ஏற்பட்டு போகிறது.
இன்னமும் எடுத்துச் சொல்வதென்றால் உயிர் வரவுக்கு ஒரு வழிப்பாதை என்றால் இறப்புக்கு ஓராயிரம் பாதைகள். இப்படி பலவழிப் பாதைகளை வைத்துக் கொண்டு, என் வழி தனி வழி என்று சொல்பவர் பேதமை கொண்டவர், அறிவுப் போதாமை உள்ளவர். ஆ வென்றும் ஊ வென்றும் சப்தமிட்டு ஆணவத்தில் ஆணை இட்டவர்கள், திறந்த வாய் மூடுமுன்பே உடல் இடிந்து மண்ணில் வீழ்ந்து போனதை அதே மண்ணில் வாழ்பவர்கள் நினைவில் கொள்ள வேண்டும், ஆச்சா பூச்சா என்பவரெல்லாம் ஐயோ ஆத்தா எல்லாம் போச்சே என்று காது கிழிக்கும் கதறல்களில் தங்கள் நிலைமைகளை உணர்ந்து கொள்ள வேண்டும்.
இதற்கெல்லாம் ஒரே பரிகாரமாக, இமைக்கிற ஒவ்வொரு பொழுதிலும் இயங்குகிற ஒவ்வொரு செய்கையிலும் இறை உவப்பை மிக நிச்சயமாய் உறுதி செய்து கொள்ள வேண்டும், அவனிடம் கடனாக பெற்ற உயிரை கண்ணியமாக திருப்பிக் கொடுப்பதற்கு வேண்டி கசடில்லா நன்மைகளை கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்தி மனநிறைவாக செய்து முடிக்க வேண்டும், உவப்போடு கொண்ட கடனையும் தீர்க்க வேண்டும்
!
No comments:
Post a Comment