Monday, April 18, 2016

சென்னை கோட்டை


Vavar F Habibullah






டெல்லியில் செங்கோட்டையை கட்டியவன் பெயரை கேட்டால் எந்த மாணவனும் முகலாய மன்னன் ஷாஜஹான் என்று தெளிவாக பதில் சொல்வான்.
ஆனால் சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை கட்டியவன் யார் என்று கேட்டால் திருதிருவென்று முழிப்பான். நமதூர் அரசியல் தலைவர்களை பற்றி சொல்ல வேண்டியதில்லை. IQ வில் சிறந்தவர்கள் நம் தலைவர்கள்.
சென்னை பட்டனம், ஒரு காலத்தில் தொண்டைமண்டலத்தின் ஒரு பகுதி என்றும், அதை ஆட்சி செய்தவன் தொண்டைமான் என்றும் அவனுக்கு பிறகு, அது சோழன் இளங்கிள்ளியின் கைக்கு வந்தது என்பதும் சரித்திரம் சொல்லும் கதை.

சோழனிடமிருந்து அதை பல்லவன் தட்டி பறித்தான் என்றும், அது பின் னாளில் பாண்டியன் கைக்கு வந்தது என்றும், அதை அவனிடம் இருந்து கொள்ளை அடித்தவர்கள் பக்கத்து ஊர்க்காரன் - விஜயநகர மன்னன் என்றும், பின்னர் அதை சில நாயக்கர்கள் குத்தகைக்கு எடுத்து கைவசப்படுத்திக் கொண்டனர் என்றும், அவர்களிடம் இருந்து, ஆங்கிலேயர்களின் ஈஸ்ட் இந்தியா கம்பெனி தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த குத்தகைக்கு எடுத்துக் கொண்டது என்று வரலாறு நீழ்கிறது.
பிரான்சிஸ் டேயும் அவரது மேலதிகாரி கோர்க்கும் தான் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை நிர்மாணித்தவர்கள்(the real founders). இதற்காக் ஐயப்ப நாயக்கனை அணுகி ஒப்பந்தம் போட்டவர்கள் இவர்கள் தான். ஐயப்பனின் தந்தை பெயர், சென்னப்ப நாயக்கன். அவன் தான், தன் தந்தை யின் பெயரை புதிய பட்டணத்துக்கு சூட்டும்படி கேட்டுக் கொண்டான். அதனால் தான் அது சென்னை பட்டணம் என்று அழைக் கப்பட்டது.
செயிண்ட் ஜார்ஜ், ஒரு கிருத்துவ துறவியாக அங்கீகரிக்கப்பட்டவர். ரோமில் சாதாரண சிப்பாயாக வேலையில் சார்ந்த இவரை, ரோ மாபுரியின் கடவுள்களை வணங்கும்படி அரசன் கேட்டான். ஜார்ஜ் மறுக்கவே அவர் தலையை வெட்டி எறிந்தான் மன்னன். இதனாலேயே புனிதராக அங்கீகரிக்கப்பட்ட இவரை இங்கிலாந்து ராஜ குடும்பம் தங்களை பாதுகாக்கும் சித்தர் இவர் என்று கருதுகிறது. அதனாலேயே அவர் பெயரை தேர்வு செய்து தங்கள் அதிகார கோட்டைக்கு செயிண்ட் ஜார்ஜ் கோட்டை என்று பெயர் சூட்டி மகிழ்ந்தது.
சுதந்திரத்திற்கு பின்னர், நமது ஆட்சியாளர்களின் அதிகார கோட்டையாக (secretariat) உருமாறியது.
எம்ஜிஆர், மரீனா கடற்கரை அருகில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதாக வாக்குறுதி அளித்தார். அது முடியாமல் போகவே, திருச்சிக்கு தலைநகரை மாற்றுவேன் என்று சூழுரைத்தார். அதுவும் நடக்கவில்லை.
ஜெயலலிதா, முதலில் வெலிங்க்டன் கல்லூரியை புதிய தலைமைச் செயலகம் கட்ட தேர்வு செய்தார். நடக்கவில்லை. பின்னர் ராணி மேரி கல்லூரியை தேர்வு செய்தார். எதிர்ப்பு வலுக்கவே அந்த திட்த்தை ஒரேயடி யாக தூக்கி எறிந்தார்.
கலைஞர் ஒருபடி மேலே போய் ஓமந்தூரார் தோட்டத்தில், பல கோடி செலவில் புதிய தலைமை(secretariat) கட்டி பிரதமரை வைத்து திறப்பு விழா நடத்தி சட்ட மன்றத்தை முறைப்படி நடத்தியும் காட்டினார்.
அது அதிக நாள் நீடிக்கவில்லை.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் அதிரடியாக தலைமைச் செயலகத்தை மீண்டும் செயிண்ட் ஜார்ஜ் கோ ட்டைக்கே கொண்டு சென்றார்.
கலைஞரின் கனவு தகர்க்கப்பட்டு புதிய செயலகம், பல் நோக்கு மருத்துவமனையாக மாற்றம் செய்யப்பட்டு பொலிவிழந்து விட்டது.
தேர்தல் களம் - சென்னை கோட்டையை மீண்டும் கைப்பற்ற முனையும் அரசியல் தரகர்களின் சூதுகளமாக இப்போது மாறி விட்டது.
போரில் வெற்றி பெற போவது யார் என்பதை தீர்மானிக்கும் உரிமை மட்டும் கோட்டை பற்றி எதுவும் அறியாத பாமர மக்களின் கைகளில் "ஓட்டுரிமை" என்ற பெயரில் ஒழிந்து கிடக்கிறது.
எது எப்படியாயினும், கோட்டையை பிடிப்போம் என்று மனக்கோட்டை கட்டுபவர்கள், கோட்டையை இழந்தால் நிலை என்னவாகும் என்பதை நினைத்தால் - பலர் கோட்டை விட்டு விடுவார்கள் என்றே இப்போது எண்ணத் தோன்றுகிறது.


Vavar F Habibullah

No comments: