Tuesday, April 19, 2016

அரைத்த மாவையே அரைத்தெடுத்து

அரைத்த மாவையே அரைத்தெடுத்து
அவலை நினைத்து உரலை இடித்து
ஆளில்லா டீக்கடையில் அஸ்கா டீ ஆத்தி
அதோ பார் வெள்ளை காக்கா என அபாரமாய் கூவி
அடி நாக்கில் நஞ்சும் நுனிநாக்கில் அமுதமுமாய்
ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் கூறி
சுயபுத்தி இழந்து சொற்புத்தியும் களைந்து
கூரைமேலே சோறு போட்டால்
ஆயிரம் காகமென வாய்ச்சவடால் பேசி
போகாத ஊருக்கு பொறுமையாய் வழி சொல்லி
ஈறை பேனாக்கி பேனை பெருமாளாக்கி
பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால்
கொட்டை பாக்குக்கு விலை கூறித் திரிந்து
கண்டதே காட்சி கொண்டதே கோலம் என
கொடிபிடிக்கும் தொண்டர்கள் துதிபாட

கோளுஞ் சொல்லி குனிந்தவாறு கும்பிடும் போட்டு
நகத்தாலே கிள்ளுவதை கோடாரியால் வெட்டிச் சாய்த்து
நுனிக்கொம்பில் ஏறி அடிக்கொம்பு வெட்டி
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என பீதி கொண்டு
மடியிலே கனம் ஏந்தி வழியிலே பயம் கவ்வ
வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என பேசி
ஓட்டை கப்பலுக்கு ஒன்பது மாலுமியாய்
சண்டிக் குதிரையை நொண்டி சாரதி ஓட்ட
தேர்தல் நாள் வரை நெடுஞ்சுவராய் காட்சி தந்து
தேர்தல் முடிந்தபின் குட்டிச்சுவராய் காட்சிதரப் போகும்
கட்சிகளின் கூத்துக்கு மங்களம் பாட
காத்திருங்கள் இன்னும் ஒருசில வாரங்கள் !
கவலை மறந்து அமைதியாய் வேடிக்கை பாருங்கள் !!

அப்துல் கையூம்                        - அப்துல் கையூம்

No comments: