Friday, January 2, 2015

கல்லறை மனங்கள்..!! -நிஷா மன்சூர்

 
பத்திகள்
புகைகின்றன

ஏழு வயதிற்கும் கீழுள்ள
சிறுவன் நிற்கிறான்,
கைகட்டி
தலைகுனிந்து
அவனுக்கு முன்னேயும்
பத்திகள் புகைகின்றன.

தளர்ந்த
உள்ளிறங்கிய சமாதிகளில்
வாசமில்லா
அழகில்லா
பூக்கள் மலர்ந்திருக்கின்றன.

உடன் கழித்த நாட்கள்
நினைவடுக்குகளில் ஊஞ்சலாட,
பிரார்த்தனைகள் பிரவாகமெடுக்கின்றன
மண்வாசிகளுக்காய்.

பத்திகள் புகைகின்றன,
கிளர்ந்து.

வெளிச்சத்தைப் புதைத்திருக்கும்
திசைகளை விழுங்கிய மூலைகளில்
எந்த மூலை தன்வசமாகும்
1முதல் மனிதனின் கருவுக்கு
தன்னுடல் எப்போது இரையாகுமென
2ஆறடியைப் பகிர்ந்துகொள்ளப் போகும்
லட்சக்கணக்கான தோழர்களை நினைத்து
வெறுமையில் திளைத்துக் கிறங்குகின்றன மனங்கள்.

மெளனகோஷம் எழுகிறது,
3“உங்களுக்கு உங்கள் மார்க்கம்
எங்களுக்கு எங்கள் மார்க்கம்”

வாசம் அழித்து
வெளியெங்கும் பரப்பி
நுரையீரல் துடிப்பதிகரித்து
மூச்சடைக்க வைத்து
பத்திகள் புகைகின்றன..!!

1) முதல் மனிதர் ஆதம்நபி மண்ணால் படைக்கப்பட்டவர்,ஆதலால் மண்ணே மனிதனின் முதல்கரு.
2) ஓவ்வொரு மண்ணறையிலிருந்தும் கிட்டத்தட்ட ஒன்றேகால் லட்சம் மனிதர்கள் எழுப்பப்படுவார்கள் என்பது இஸ்லாமிய தொன்மம்
3) இறைமறை வசனம் 109.6
4) 1997 வாக்கில் மேட்டுப்பாளையத்தில் நிகழ்ந்த ஒரு மதவெறிக் கொலையில் கொல்லப்பட்ட ஒருவரை அடக்கச் சென்றபோது உருவான கவிதை.
 
 

No comments: