Saturday, January 10, 2015

நம்ம ராஜாவுக்கு .....

நம்ம ராஜாவுக்கு கடுமையான பசி. பேர்தான் ராஜாவே தவிர கையில் பத்து பைசா இல்லை. வீட்டிலும் அடித்து விரட்டி விட்டதால், இப்ப சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று கடுமையான யோசனையில் இருந்தவர் எதிரில் இருந்த அந்த ஹோட்டலுக்கு நுழைந்தார்.
சார். கடுமையான பசி. நாலு இட்லி தந்தீங்கன்னா..

அதெல்லாம் கிடையாது. நீ இடத்தை காலி செய்ப்பா. எனக்கு வேலை கிடக்கு

சார். ஒரு வடையாவது

ஏப்பா நான் என்ன அன்னசத்திரமா நடத்துறேன். நீ இப்ப போறியா சாம்பாரை தூக்கி மூஞ்சிலே ஊத்தவா

சார் நீங்க என் மூஞ்சில ஊத்துறேன்னு சொன்ன சாம்பாரை என்னிடம் கொடுங்க. குடிச்சிட்டாவது போறேன்.

டே உனக்கு ரொம்ப அதுப்புதான். போடா என்று அடித்து விரட்டினார். ஏமாற்றமும் பசியும் ஒரு சேர விரட்ட என்ன செய்வது என்று யோசித்த ராஜாவுக்கு எதிரில் உட்கார்ந்திருந்த பிச்சைக்காரன் பார்வையில் பட்டான். அவனிடம் மெதுவாக போய் பேச்சு கொடுத்தபடி அவன் தட்டில் இருந்த பழைய சாதத்தை அள்ளி லபக் லபக் என்று விழுங்கினார். அதிர்ச்சியாக பார்த்த பிச்சைக்காரன் ராஜாவை அடிக்க ராஜா அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் சாப்பிடுவதிலேயே குறியாக இருந்தார்.
பிச்சை எடுக்குமாம் பெருமாளு. தட்டிப்பறிக்குமாம் அனுமாரு என்று பிச்சைக்காரன் சொல்ல அதையெல்லாம் காதில் வாங்காத ராஜா தன் மொபைலை எடுத்து இப்படி டைப் செய்தார் 'இன்று காலை, என் உணவை பிச்சைக்காரனுடன் பகிர்ந்து உண்டேன். மனதும் வயிறும் குளிர்ந்தது'

உடனே லைக் குவிய ஆரம்பித்தது. அதை பார்த்து சிரித்த ராஜாவை குழப்பத்துடன் பார்த்தான் பிச்சைக்காரன்.

நான் எழுதிக்கொண்டிருக்கும் சமூக ஆர்வலரும் சல்லித்தனமும் என்ற புத்தகத்திலிருந்து.


 பாருக் முகம்மது


1 comment:

”தளிர் சுரேஷ்” said...

ஹாஹாஹா! செம காமெடி! பகிர்வுக்கு நன்றி!