கண்களின்
கண்ணீர் முட்டிக் கொண்டிருக்கும்
சிந்தினால்
தலைபாரம் வேற
தனியாகக்
கொல்லுமேயென
கட்டுப்படுத்திக்
கொள்ளும்
இல்லத்தரசிகளுக்கு
இந்த
கவிதை
வேலைகளை
வேகமாய் முடித்து விட்டு
வீட்டாரின்
பசியை ஆற்றி விட்டுத்
திரும்பிப்
பார்ப்போம்
வயிற்றைக்
கிள்ளும் பசி
சட்டியில்
ஏதுமிருக்காது
சந்தோஷமாய் ஏற்றுக் கொள்வோம்...
எல்லாருக்கும்
நல்ல துணிகளை எடுத்து விட்டு
மிச்சமென்ன
இருக்கு பர்ஸில் என்று
தேடும்
போது ஒரு மலிவான காட்டன்
புடவை
நம்மை வா வென்று அழைக்கும்...
காட்டன்
தான் வெய்யிலுக்கு நல்லதென்று
நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்வோம்...
எதிர்பார்க்காமலே
எல்லாமே செய்வோம்
அம்மான்னா
சும்மாவா என
நம்முள்
நாமே சந்தோஷம் கொள்வோம்...
மாய்ந்து
மாய்ந்து பாடுபடுவோம்
மாய மகிழ்ச்சியில் நீந்தித் திளைப்போம்
காய்ந்து
போன தலைக்கு
எண்ணெய்
தேய்க்கக் கூட நேரமில்லாமல்
ஓய்ந்து
போய் ஒடுங்கிக் கொள்வோம்...
வியர்வையை
வழித்துப் போட்டு விட்டு
வேதனை உடல் முழுக்க இருக்க
எத்தனை
சலிப்பென்றாலும் கணவனின் தேடலுக்கு
முகம் சுளிக்காமல் ஈடு கொடுத்து
அதற்கு
காதலென்று நமக்கு நாமே
பெயர் வேறு சூட்டிக் கொள்வோம்...
மத்தவங்க
சந்தோஷமே நம் சந்தோஷமென
மொத்தத்தையும்
வாரிக் கொடுப்போம்...
உண்டியல்
காசைக் கூட
பிள்ளைகளுக்கு
தின்பண்டம் வாங்க
உடைத்தெடுத்து
உற்சாகமாய் தருவோம்...
வேலையாள்
வைத்தால் காசு விரயமென்று
நாலாள்
வேலையை ஓராளாக செய்வோம்...
எல்லாமே
சந்தோஷமா தான் செய்வோம்...
பாசாங்கில்லாம
தான் செய்வோம்...
பரிபூரண
மனதோடு தான் செய்வோம்...
பாவி மனசு கேட்காம தான்
செய்வோம்...
எல்லாத்தையும்
செஞ்சு போட்டு
கைகால்
சுகமில்லாமல்
உடம்பு
முடியாமல் கிடக்கும் போது
அதை சொன்னா பிறர் மனசு
வாடுமேன்னு
அதையும்
கூட சொல்லாம மறைப்போம்...
யாராவது
அவங்களாவே கண்டுக்கிட மாட்டாங்களான்னு
மனசு மட்டும் ஏங்கிக்கிட்டு இருக்கும்...
சாப்பிட்டயா...
தண்ணி குடிச்சியான்னு
கேட்கக்
கூட நாதியில்லாதப்ப தான்...
அப்ப தான்...
கண்களின்
கண்ணீர் முட்டிக் கொண்டு வரும்...
சிந்தினால்
தலைபாரம் வேற
தனியாகக்
கொல்லுமேயென
வழியாமல்
அதையும் கட்டுப்படுத்திக் கொள்ளும்
எங்களுக்கு
பெயர் தான்
இல்லத்தின் அரசிகள்...
No comments:
Post a Comment