Tuesday, February 9, 2021

பிறந்த_ஊரைப்பற்றி_எத்தனைமுறைச்_சொன்னாலும்_திகட்டாது ../Abu Haashima

 

Abu Haashima

#பிறந்த_ஊரைப்பற்றி_எத்தனைமுறைச்_சொன்னாலும்_திகட்டாது ..

#செத்தாலும்_இந்த_மண்ணில்தான்

#சாவோம் ...

#கோட்டாறு ...

மனித நாகரீகத்தின் பிறப்பிடம்.

ஆதம் நபியின் காலடிகள் பதிந்த பூமி.

யூப்ரடீஸ் டைகிரீஸ்

நதிக்கரை நாகரீகங்களைப்போல

பெரியாறு

மேலாறு

சிற்றாறு என

எத்தனையோ ஆறுகள் ஓடிய

நாகரீக பட்டணம் கோட்டாறு.

பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்

குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள

வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு

தென்  திசை ஆண்ட தென்னவன் வாழி!

#காடுகாண்_காதை_சிலப்பதிகாரம்

சொல்லும் குமரி மாவட்டம்.

" வஞ்சி நாடதனில் நன்செய் நாடெனச்

செந்தமிழ் வழங்கும் தேயம் ஒன்றுளது - அதன்

அந்தமில் பெருவளம் அறியார் யாரே "

அப்படின்னு

#மனோன்மணியம்_சுந்தரனார் புகழ்ந்து பாடிய செழிப்பான நாடு நாஞ்சில் நாடு.

" பண்ணைப் பழுத்த பழ நாடு - சுற்றிப்

பார்த்திட கண்கள் குளிரும் நாடு " என்று #கவிமணி_தேசிக_விநாயகம் பிள்ளையும் பாடியிருக்காரு.

நாஞ்சில் நாடு என்று அழைக்கப்படும் இந்த மாவட்டம் ...

நீர்வளம் , நில வளம் , மலைவளம், கடல் வளம் என எல்லா வளமும் பெற்று எழிலோடு இலங்கும் மாவட்டம்.

ஆனி ஆடிச் சாரல் இந்த மண்ணுக்கே உரித்தான முத்தான வான் முத்து.

வாழையில் எத்தனை வகை உண்டு என்பதை இங்கேதான் கேட்க வேண்டும்.

தென்னையும் நெல்லும் தேயிலையும் கூட விளையும் நிலம்.

தேக்கும் ஈட்டியும் கரு மருதும் விளைந்த காடு.

உலக்கை அருவியும் திற்பரப்பும் வருடம் முழுவதும் வெள்ளமாய் வாரி விழுந்து சந்தோசம்தரும் குளுமை .

சுற்றிலும் கடல்... என்னென்ன மீன்கள்... அப்பப்பா அத்தனையும் அளவில்லா சுவைகள்...

தேனும் தினைமாவும் தந்து உபசரிக்கும் காணி இன மக்கள் வாழும் பேச்சிப்பாறை பெருஞ்சாணி அணைப்பகுதி .

பெரியாறும் சிற்றாறும் ஓடிக்கொண்டிருக்கும் அன்றைய பக்றுளி ஆறு ஓடிய பசுமை பெரு நிலம்.

மாதம் மும்மாரி மட்டுமா ?

மாதந்தோறும் மாரிக்காலம்தானே..

செல்வமும் செழிப்பும் நிறைந்த இந்த மண்ணை கைப்பற்ற எத்தனை போர்கள் ?

சேர சோழ பாண்டிய மன்னர்கள் போர் தொடுத்த வளமான பூமி கோட்டாறு.

" முள்ளாலும் கல்லாலும் தென்னன் ஓட

முன்னொருநாள் வாள் அபயன் முனிந்த போரில்

வெள்ளாறும் கோட்டாறும் புகையால் மூட

வெந்தவனம் இந்தவனம் ஒக்கில் ஒக்கும் "

#கலங்கத்துப்பரணியில் இடம் பெற்றுள்ள சோழ மன்னனின் வெற்றியை பற்றிய பாடல் இது.

சிலப்பதிகாரம் கூறும் பஃறுளி ஆறு ஓடிய பகுதிதான் இன்றைய கோட்டாறு.

அந்த கோட்டாறுக்கு

#இளங்கடை

#இடலாக்குடி  என பல பெயர்கள் உண்டு.

சாந்தியும்

சமாதானாமும்

சகோதரத்துவமும்

சமத்துவமும் குடிகொண்டிருக்கும்

கோட்டாறு

ஸெய்யது பாவாகாசீம் அப்பா ( வலி )

ஷெய்குஅப்துர் ரஹ்மான் ஸாஹிப் ( வலி )

குன்னாலி மன்னான் ஷெய்க் ( வலி )

ஞானியாரப்பா ( வலி )

ஒட்ட மன்னான் ஷெய்க் ( வலி )

ஹயாத் அவ்லியா தங்கள் ( வலி )

பீவி ஃபாத்திமா ( வலி )

கான் சாஹிபின் படைத் தளபதி

மாவீரன் மாலிக் கான் ஸாஹிப்

பாஷில்ஸா ( வலி )

வீரத்தளபதிகள்

செளமியாகான்

நெளமியாகான்

போன்ற ஞானிகளும் வீரப்புதல்வர்களும் வாழ்ந்து மறைந்து

நிறைந்து வாழும் மண்.

#மிஹ்ராசு_மாலை எனும்

நபிகளாரின் விண்வெளிப் பயண

அதிசயத்தை

#ஆதி_முதல்_புலவர்_ஆலிப்புலவரப்பா

அரங்கேற்றம் செய்த ஊர் கோட்டாறு.

இந்த நிகழ்வின் போதுதான்

கண்பார்வையற்ற

#பாவாடைச்_செட்டியார் என்பவருக்கு

பார்வை கிடைத்த அதிசயமும் நிகழ்ந்தது.

மலுக்குமுதலி ஞானியாரப்பாவும்

நாவலர் நெய்னா முஹம்மது ஸாஹிபும்

சதாவதானி செய்குத்தம்பி தம்பிப் பாவலரும்

எத்தனையோ அரும் புலவர்களும்

தமிழ் வளர்த்த பூமி கோட்டாறு.

கவிஞர் நாஞ்சில் ஷா

கவிஞர் ஆரிது

வித்வான் அபுபக்கர்

போன்ற பிரபலங்கள் பிறந்த பூமி இது.

இன்றும் ஏராளமான அறிஞர்கள் , கவிஞர்கள் , பல துறைகளிலும் திறமை பெற்ற சான்றோர்கள் வாழும் பூமி.

எப்போதும் மாவட்டத்தின் மிகப்பெரிய முஸ்லிம் சமுதாயம் கோட்டாறுதான்.

ஊரைச் சுற்றிலும்

வெள்ளாளர்கள்

பட்டாரியர்கள்

செட்டியார்கள்

நாடார்கள்

தலித் பெருங்குடி மக்கள்

ஆசாரிமார்கள்

செளராஷ்ட்ரா மக்கள்

கிறிஸ்தவர்கள் என எல்லா சமய மக்களும் இணைந்து வாழும்

சமய நல்லிணக்க பூமி இது.

இந்த மண்ணின் பூர்வீக மக்கள்

குயவர்கள்.

ஊரின் அருகாமையிலேயே அவர்களும்

வாழ்ந்து வருகிறார்கள்.

இன்று வாழும் முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள்  அவர்களின்

வழித் தோன்றல்களே ஆவார்கள்.

எத்தனையோ சிறப்பு வாய்ந்த இந்த

ஊரின் மேற்கே இருக்கின்ற திருமண மண்டபமும்

ஏராளமான கடைகளும் எந்நேரமும் மக்கள் சஞ்சாரமும் ரொம்பவே

கலகலப்பை தந்து கொண்டிருக்கின்றன.

மனித குலத்தின் முதல் மனிதன்

வந்து வாழ்ந்த இந்த பூமி

எங்கள் சொந்த பூமி !

ஆரியம் இங்கே தலை நீட்டுவதற்கு முன்பே உலகுக்கு திராவிட நாகரீகத்தை

கற்றுக் கொடுத்த பூமி .

முதல் தமிழ் சங்கம் வைத்து

தமிழ் வளர்த்த பூமி.

இந்த மண்ணின் பிள்ளைகளான எங்களை இந்த மண்ணை விட்டு வெளியேறச் சொல்லவோ

எங்கள் வரலாற்றின் சான்றுகளை கேட்கவோ

இங்கே வந்தேறிய ஆரியர்களுக்கு

எந்த அருகதையும் இல்லை.

நாங்கள் இங்கே பிறந்தோம்

இங்கே வாழ்கிறோம்

இங்கேதான் சாகவும் செய்வோம்...

இன்ஷா அல்லாஹ் !

படங்கள்

#கோட்டாறு_இளங்கடை





No comments: