"சுறுசுறுப்பாக இருங்கள் என்று அறிவுரை சொல்லிச் சொல்லி இன்று அது ஒரு நோயாகவே ஆகிவிட்டது.
ஓர் அவசரகதி கவிந்து வாழ்க்கையின் இயல்பான அழகையே கெடுத்துவைத்துள்ளது.
“உலகம் எங்கோ போய்க்கொண்டுள்ளது. எனவே நாம் ஒரு கணமும் தாமதிக்க முடியாது.” என்று எல்லோரும் ஓடுகிறார்கள்.
உலகம் எங்கே செல்கிறது என்று யோசிக்க ஒருவரும் தயாராக இல்லை.
செயல்பட்டால்தான் எதுவும் நடக்கும் என்று ஒரு தப்பான புரிதல் நம் மூளையை ஆக்கிரமித்துக் கொண்டதால்,
இயற்கை அமைப்பில் எதுவும் செய்யாமலே நடக்கக் கூடிய பல அழகான விசயங்களை,
கொடுத்து வைத்த விசயங்களை நாம் செயற்கையாக்கிக் கெடுத்து வைத்துள்ளோம்.
சுறுசுறுப்பிற்கு நாம் மிக மிக அதிகமான விலை கொடுத்துவிட்டோம்"
🌸
ரமீஸ் பிலாலி எழுதிய பிரபஞ்சக்குடில் வலைத்தள பதிவு 👇
நன்றியும் பிரியமும்
வெற்றிமாறன், சின்னஞ்சிறிய பூச்சிகளின் ரீங்காரம், இரவு வானம்...
🌸
தானாக வளரும் புல்
”வர வர சோம்பேறித்தனம் அதிகமாயிட்டே வருது. இந்த நிலைமைய மாத்துறதுக்கு என்ன செய்யலாம்?” என்று என்னிடம் கேட்டார் ஒரு நண்பர்.
”நல்ல ஆளாப் பாத்துக் கேட்டீங்களே...” என்று என் மனதில் நினைத்துக் கொண்டே சிரித்தேன்.
சில கணங்கள் யோசித்துவிட்டு அவரிடம் சொன்னேன்: “சோம்பேறிகளிடம் ஒரு தகுதி இருக்கிறது.
இறைவன்தான் செயல்படுகிறான் என்பதற்கு அவர்கள் அத்தாட்சியாக இருக்கிறார்கள்!”
இந்தக் கருத்து என் நண்பருக்கு மிகவும் வித்தியாசமாகவும் ஆறுதல் அளிப்பதாகவும் இருந்திருக்க வேண்டும்.
மனதின் சுமை இறங்கிவிட்டது போல் மிகவும் ரசித்துச் சிரித்தார்.
நான் இந்தப் பாய்ண்ட்டை மேலும் விளக்கினேன்:
“நான் அதைச் செய்தேன்,
நான் இதைச் செய்தேன்,
நான்தான் செய்கிறேன்,
என்னால்தான் நடந்தது
என்றெல்லாம் நினைத்துக் கொண்டு சுறுசுறுப்பாக இருப்பதைவிட
‘நான்’ என்பது இல்லாமல் சோம்பேறியாக இருப்பது மேலானது, நல்லது.
இப்படி ஒரு பார்வை சூஃபிகளிடம் இருக்கிறது.”
‘சோம்பேறிப்பயல்’ என்று பட்டம் வாங்கிக் கட்டிக்கொண்டவரா நீங்கள்?
உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
சோம்பேறித்தனம் என்பதும்கூட ஒரு வீரியமான மூலதனம்தான்.
அது உங்களிடம் இருக்கிறது. அதை வீணாக்கிவிடாதீர்கள்.
இது எதற்குப் பயன்படப் போகிறது என்று அபத்தமாகச் சிந்தித்து அதைத் தூக்கி எறிந்துவிடாதீர்கள்.
கோடானு மில்லியன் டாலர்கள் கொடுக்க முடியாத ஒன்றை அதனால் அடைய முடியும்!
அதனால் மட்டுமே என்றுகூடச் சொல்லலாம்!
அதை ஓஷோ தன் “வெற்றுப் படகு” என்னும் தாவோ ஞான விளக்க நூலில் மிக அருமையாக இப்படிச் சொல்கிறார்:
“சுவாங்தஸு மிகவும் வலியுறுத்துகிறார்.
விழிப்பாக இருங்கள்,
மிகவும் பயனுள்ளவராக இருக்காதீர்கள்.
இல்லையெனில் மக்கள் உங்களைப் பயன்படுத்திக் கொள்வார்கள்.
பிறகு உங்களைக் கையாள, நிர்வகிக்கத் தொடங்கி விடுவார்கள்.
பிறகு உங்களுக்குத் தொந்தரவுதான்.
உங்களால் பலன் கொடுக்க முடிகிறது என்றால் உங்கள் வாழ்க்கை முழுவதும் நீங்கள் பலன் கொடுக்க வேண்டும் என வற்புறுத்தப் படுவீர்கள்.
உங்களால் சில குறிப்பிட்டவற்றைச் செய்ய முடிகிறது என்றால், திறமையுடையவராக இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் வீணாக்கப்பட முடியாது.
அவர் சொல்கிறார், பயனற்ற தன்மை தனக்கே உரிய இயல்பான சில பயன்களையும் பெற்றுள்ளது.
நீங்கள் அடுத்தவர்களுக்குப் பயனுள்ளவர்களாய் இருக்க முடிந்தால் பிறகு நீங்கள் அடுத்தவருக்காக வாழ வேண்டும்.
பயனற்றிருந்தால் யாரும் உங்களைத் திரும்பிக்கூட பார்க்க மாட்டார்கள்,
உங்கள் இருத்தலையே யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள்.
நீங்கள் தனித்து விடப்படுவீர்கள்.
சந்தைப் பகுதியில்கூட நீங்கள் இமயமலையில் இருப்பதைப் போல் வாழ்வீர்கள். அந்தத் தனிமையில் நீங்கள் வளர்வீர்கள். உங்கள் முழுச் சக்தியும் உள்நோக்கிச் செல்லும்!”
இந்த விளக்கத்தைப் படித்த என் கல்லூரி நாட்களில் உண்மையில் நான் மாபெரும் உதவாக்கரையாகத்தான் இருந்தேன்.
யாரும் என்னிடம் வேலை சொல்லத் தயங்குவார்கள்.
அதற்கென்று உதவும்கரைகள் பலர் இருந்தார்கள்.
இயல்பிலேயே ஒரு விலகல்தன்மை என்னிடம் இருந்தது.
ஆனால் என் நேரம் என்னிடம் இருந்தது!
நான் அதைச் சுவைத்துக் கொண்டிருந்தேன்.
“நானே காலமாக இருக்கிறேன்” என்று இறைவன் சொல்வதாக ஒரு ஹதீஸ் குத்ஸி உள்ளது.
எனவே என் தனிமையில் நான் இறைவனின் சுவையை அறிந்துகொண்டேன் என்று கூறலாம்!
அதே காலகட்டத்தில் நான் படித்த ஒரு அற்புதமான நூல் “THE ESSENTIAL RUMI”.
மௌலானா ரூமியின் சூஃபி மகாகாவியமான ’மஸ்னவி’யில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட பல க(வி)தைகளின் தொகுப்பு.
அதிலிருந்து ஒரு கதையை உங்களுக்குக் கூறுகிறேன்.
“மரணப் படுக்கையில் கிடந்த ஒரு மனிதர் தன் செல்வங்களைத் தன் மூன்று மகன்களுக்குப் பகிர்ந்து கொடுப்பது எப்படி என்று நினைத்துக் கொண்டிருந்தார்.
தன் முழு வாழ்வையும் அந்த மூன்று மகன்களுக்குள் வைத்திருந்த தந்தை அவர்.
அந்த மூவரும் அவரைச் சுற்றி சைப்ரஸ் மரங்களைப் போல் நின்றார்கள், உயரமாகவும் உறுதியாகவும்.
நகர நீதிபதி வந்திருந்தார். அவரிடம் அந்தத் தந்தை சொன்னார்,
“என் மகன்களில் எவன் மிகவும் சோம்பேறியோ அவனுக்கே முழு சொத்தையும் கொடுத்துவிடுங்கள்.”
இவ்வாறு கூறிவிட்டு அவர் இறுதியாகக் கண்களை மூடிக்கொண்டார்.
நீதிபதி அந்த மூன்று சகோதரர்களின் பக்கம் திரும்பினார்.
“நீங்கள் மூவரும் உங்களுடைய சோம்பேறித்தனத்தைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள்.
நீங்கள் எவ்வளவு சோம்பேறிகள் என்பதை நான் புரிந்துகொள்ள வேண்டும்.” என்று சொன்னார்.
ஞானிகள் சோம்பேறித்தனத்தில் நிபுணர்கள்!
அவர்கள் அதைச் சார்ந்திருக்கிறார்கள்.
ஏனெனில், இறைவன் அவர்களைச் சுற்றிலும் செயல்பட்டுக் கொண்டிருப்பதை அவர்கள் பார்க்கிறார்கள்.
உண்மையில் இறைவனே செயல்படுபவன் (ஃபாயிலே ஹகீகி).
அவர்கள் நிலத்தை உழுவதே இல்லை.
ஆனால் அறுவடை வீடு வந்து சேர்ந்துகொண்டே இருக்கிறது!
“வாருங்கள், நீங்கள் எப்படிப்பட்ட சோம்பேறிகள் என்பதை எனக்குச் சொல்லுங்கள்.”
உச்சரிக்கப்படும் ஒவ்வொரு வார்த்தையும் உள்மனதின் மீதான திரையாகும்.
அந்தத் திரையில் லேசான ஒரு சிடுக்கு,
அதன் வழியே ஆயிரம் சூரியன்கள் வெடித்து வருகின்றன.
சொல்லப்படுவது அபத்தமாகவும் தவறாகவும்கூட இருக்கலாம்.
கேட்பவன் அதன் ஊற்றுக்கண்ணைப் புரிந்துகொள்கிறான்.
பூங்காவிலிருந்து ஒரு தென்றல் வீசுகிறது.
சாம்பல் மேட்டிலிருந்து இன்னொன்று.
நரியின் குரலும் சிங்கத்தின் குரலும் எப்படி வேறுபட்டுள்ளன என்பதைப் பார்.
அவை உனக்குச் சொல்லும் சேதியும்.
அடுப்பின் மீதுள்ள பானையின் மூடியை ஒருவர் திறக்கும் சத்தம் உனக்குச் சொல்லிவிடும் இன்றிரவு என்ன உணவு என்று.
இன்னும் சிலர் நீராவியின் வாசத்திலிருந்தே தெரிந்துகொள்கிறார்கள், காடி ஊற்றிக் காய்ச்சப்பட்ட காரமான சூப்பை!
பானை வாங்கும் மனிதன் அதனைத் தட்டிப் பார்க்கிறான்,
அதன் சத்தத்தை வைத்து அதில் விரிசல் இருக்கிறதா என்று தெரிந்துகொள்ள.
அந்த மூன்று சகோதரர்களில் மூத்தவன் நீதிபதியிடம் சொன்னான்,
“ஒரு மனிதனை அவன் குரலில் இருந்து நான் கண்டுகொள்வேன்.
ஒருவேளை அவன் பேசவில்லை என்றால் மூன்று நாட்கள் காத்திருப்பேன்.
அப்போது அவனை என் உள்ளுணர்வால் தெரிந்துகொள்வேன்.”
இரண்டாம் மகன் சொன்னான்,
“அவன் பேசும்போது அவனை நான் அறிவேன்.
அவன் பேசவில்லை என்றால் நானாக அவனிடம் பேச்சு கொடுப்பேன்.”
அந்த நீதிபதி கேட்டார்,
“இந்த ட்ரிக் அவனுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தால்?”
எனக்கொன்று ஞாபகம் வருகிறது. ஒரு தாய் தன் பிள்ளையிடம் சொன்னாள்,
“இடுகாட்டின் வழியாக நீ இரவில் தனியாக நடந்து செல்லும்போது பேய் வந்து நின்றால் அதைப் பார்த்து ‘ச்சூ ச்சூ’ என்று விரட்டு.
பேய் மாயமாய் மறைந்துவிடும்.”
அந்தப் பிள்ளை தன் தாயிடம் கேட்டது,
“அம்மா, அந்தப் பேயின் அம்மாவும் அதற்கு இந்த ட்ரிக்கைச் சொல்லிக் கொடுத்திருந்தால் நான் என்ன செய்வது?
பேய்களுக்கும் தாய்கள் உண்டே!” அருமையான கேள்வி!
இரண்டாம் சகோதரனால் இதற்கு விடை கூற இயலவில்லை.
நீதிபதி இளைய சகோதரனிடம் கேட்டார்,
“ஒரு மனிதனைப் பேசவைக்கவே முடியவில்லை என்றால் என்ன செய்வது?
அவனுடைய சுபாவத்தை எப்படி நீ அறிவாய்?”
“நான் அவன் முன் மௌனமாக அமர்ந்திருப்பேன்.
பொறுமை என்னும் ஏணியைச் சாத்தி வைப்பேன்.
அவனுடைய முன்னிலையில் இன்பத்தையும் துன்பத்தையும் கடந்த ஒரு பேச்சு என் மனதிலிருந்து பொங்கத் தொடங்கினால் அவனுடைய ஆன்மா யமன் தேசத்தின் மீது எழும் நட்சத்திரத்தைப் போல் பிராகசமானதும் ஆழமானதும் ஆகும் என்று அறிந்துகொள்வேன்.
அதுபோல், வலதுகரம் போன்ற வலிமையான வார்த்தைகளை நான் சரளமாகப் பேசும்போது, நான் என்ன பேசுகிறேன் என்பதில் இருந்தும், அதை எப்படிப் பேசுகிறேன் என்பதில் இருந்தும் அவனை அறிந்துகொள்வேன்.
ஏனெனில் எங்களுக்கிடையில் எங்களது ஆன்மாக்களின் இரவுக் காற்று வீசும்படி ஒரு ஜன்னல் திறந்துள்ளது!”
நிச்சயமாக, இந்த இளைய சகோதரன்தான் மகா சோம்பேறி. அவனே வெற்றிபெற்றான்.”
சோம்பேறியாக இருங்கள் என்று ஊக்கப்படுத்துவது அபத்தமாக இல்லையா?
என்று நீங்கள் நினைக்கலாம்.
உண்மையில் சுறுசுறுப்பும் சோம்பேறித்தனமும் ஒரு கழியின் இரண்டு முனைகள் போன்றவை.
வாழ்க்கை என்னும் கழைக்கூத்தில் கயிற்றின்மீது நடப்பவன் இரண்டையும் சமன்படுத்த வேண்டும்.
சுறுசுறுப்பாக இருங்கள் என்று அறிவுரை சொல்லிச் சொல்லி இன்று அது ஒரு நோயாகவே ஆகிவிட்டது.
ஓர் அவசரகதி கவிந்து வாழ்க்கையின் இயல்பான அழகையே கெடுத்துவைத்துள்ளது.
“உலகம் எங்கோ போய்க்கொண்டுள்ளது. எனவே நாம் ஒரு கணமும் தாமதிக்க முடியாது.”
என்று எல்லோரும் ஓடுகிறார்கள்.
உலகம் எங்கே செல்கிறது என்று யோசிக்க ஒருவரும் தயாராக இல்லை.
செயல்பட்டால்தான் எதுவும் நடக்கும் என்று ஒரு தப்பான புரிதல் நம் மூளையை ஆக்கிரமித்துக் கொண்டதால்,
இயற்கை அமைப்பில் எதுவும் செய்யாமலே நடக்கக் கூடிய பல அழகான விசயங்களை,
கொடுத்து வைத்த விசயங்களை நாம் செயற்கையாக்கிக் கெடுத்து வைத்துள்ளோம்.
சுறுசுறுப்பிற்கு நாம் மிக மிக அதிகமான விலை கொடுத்துவிட்டோம்.
கெடுதிகள் செய்யும் சுறுசுறுப்பை விட நன்மைகள் தரும் சோம்பேறித்தனமே நமக்குத் தேவை.
சோம்பேறித்தனத்திற்காக வாதாட ஆரம்பித்த நான் அதனைக் கொண்டு வாழ்வின் லட்சியத்தையே அடைய முடியும் என்று சொன்னேன்.
அது என்ன என்று சொல்லிவிடுகிறேன்.
ஆபிரகாம் மாஸ்லோ என்னும் உளவியல் அறிஞர் மனிதனின் தேவைகளைப் பல அடுக்குகள் கொண்ட ஒரு முக்கோணமாகக் கட்டமைத்தார்.
அதில் கீழ் நிலைத் தேவைகள் எல்லோருக்கும் அடிப்படையானவை என்றும்
அடுத்தடுத்து மேல் நிலைகளில் உள்ள தேவைகளை குறைந்த நபர்களே அடைகிறார்கள் என்றும் சொன்னார்.
உண்வு, உடை, உறையுள், காமம் போன்ற உடல் சார்ந்த தேவைகள் அனைவருக்கும் அடிப்படையானவை.
சமூக அந்தஸ்த்து, செல்வம் போன்ற தேவைகள் இடையில் உள்ளன.
முக்கோணத்தின் சிகரமுனையில் உள்ள தேவை,
மனிதனின் உச்சபட்சமான தேவை
“தன்னை அறிதல்” (SELF-REALIZATION / SELF - ACTUALIZATION) என்று ஆபிரகாம் மாஸ்லோ குறிப்பிட்டார்.
இந்தத் ’தன்னையறிதல்’ என்பதைத்தான் சூஃபிஸம் போன்ற ஞான வழிகளில் முதல் படியாக வைத்துள்ளார்கள்!
‘தன்னை அறிந்தவன் தலைவனை அறிவான்’ என்பது மிகப் பிரபலமான சூஃபிமொழி.
இங்கே தலைவன் என்பது இறைவனைக் குறிக்கும்.
தன்னை அறிவது என்பது விழிப்புணர்வு சம்பத்தப்பட்டது.
கனவில் சுறுசுறுப்பாக இயங்குவதால் என்ன பலன் வந்துவிடப் போகிறது.
ஆனால் உலகில் பெரும்பாலானோர் அப்படித்தான் இயங்கிக் கொண்டுள்ளார்கள்,
“சும்மா இருப்பதே சுகம்” என்று சொன்ன ஞானிகளைப் பார்த்து அவர்கள் சிரிக்கிறார்கள்.
ஆனால் அந்த ஞானிகள் விழித்துக்கொண்டவர்கள்.
தன்னை அறிவதற்கு உங்கள் சக்தியை உள்நோக்கிக் குவிக்கவேண்டும்.
அதனால் வெளி நோக்கி அதனைப் பாய்ச்சி நீங்கள் செய்யும் ஆயிரம் ஆயிரம் வெட்டி வேலைகளை நீங்கள் நிறுத்த வேண்டியுள்ளது.
அப்படி நீங்கள் நிறுத்திவிடும்போது பிறர் உங்களைச் சோம்பேறி என்றுதானே மெச்சுவார்கள்?!
ஆனால் நம் முயற்சியால் கெட்டுக்கொண்டிருந்த பல விசயங்கள் இயல்பாக இயற்கையாக நடப்பதை நீங்கள் பார்ப்பீர்கள்.
கடவுள் உங்களைச் சுற்றி வேலை செய்துகொண்டிருப்பார், பல வடிவங்களில்.
மனிதக் காதலாகட்டும் இறைக் காதலாகட்டும், ஒரு சூட்சுமம் உண்டு.
அவசரப்பட்டால் காரியம் கெட்டுவிடும்!
ஒப்படைத்துவிடுங்கள்.
உங்கள் வழியே காரியங்கள் நடந்தேறுவதை அனுபவியுங்கள்.
ஜென்னின் சாராம்சம் கொண்ட ஹைகூ கவிதை என்று சொல்லப்படும் கவிதை ஒன்றுண்டு.
“சும்மா இரு
வசந்தம் வருகிறது
புல் தானாக வளர்கிறது!”
*வாட்சப்பில் வந்தது
No comments:
Post a Comment