இறுக்கம்
களையவில்லை இன்னும்
எதிர்படும் வீதிகளில் என்வீதி என்வீடு
எதுவென்று தெரியவில்லை
கடந்துபோகும் சிற்றூர்களில்
எனக்குத் தெரிந்தவர்கள்
யாராவது இருக்கலாம்
அந்த வீட்டின் வாசலிலிருந்து
வெறிப்பவளின் மேலுதட்டில்
ஒரு மச்சம்
அவள் வீடும்
அருள் பாலிக்கப்பட்டுள்ளதாதெரியவில்லை
அதிசயமாய் இந்தப் பயணத்தில்
படிக்கப் பிடிக்கவில்லை எனக்கு
தலைநீட்டிப் படிக்க முயற்சிக்கும்
பக்கத்து சீட்காரனின் கோரமுகம்
பட்டுஜிப்பாக்காரன் ஊதும்
சிகரெட் புகையில்
டாக்டரின் கண்டிப்புக்குரல்
கருப்பு உள்ளாடைக்காரி தவறவிட்ட
தம்ளர் இசையில்
தூங்கும் குழந்தை சிரிக்கிறது
வாய்பிளந்து எச்சில்வழிய
தூங்கும் இவனுக்கும்
ஏதாவது திறமைகள் இருக்கக்கூடும்
விவஸ்தை இல்லாதவர்கள்
கண்ட இடத்தில் தின்று
கண்ட இடத்தில் தூங்குகிறார்கள்
எல்லோருக்கும்
வாழப்பிடித்திருக்க வேண்டும்
நிஷா மன்சூர்
No comments:
Post a Comment