Showing posts with label பணம். Show all posts
Showing posts with label பணம். Show all posts

Sunday, August 31, 2014

பணம் ஒன்றே குறிக்கோளாய்

பணம் ஒன்றே குறிக்கோளாய்
ஓடித்திரிந்த என்னை
உயிலெழுதக்கூட
அவகாசமின்றி
ஒரே நாளில்
முடக்கிப்போட்டது முதுமை.

இன்னும் சில நாட்களில்
நான் இறந்து விடுவேனாம்...
இப்போதுதான் என் ஆயுள்ரேகை
குறித்துவிட்டு போகிறார்
எங்கள் குடும்ப டாக்டர்.

Wednesday, May 22, 2013

கடல் கடந்த கட்டளைகள் !

வெளிநாடு சென்று வருவதற்கு முன் அனுப்பப் பட்ட செய்தி (இப்படியும் நடக்கலாம் )

மின்சாரமில்லை இன்வர்ட்டர் வைக்க வேண்டும்
பிள்ளைகளுக்கு பள்ளிக்கூட பீஸ் கட்ட வேண்டும்
எனக்கும் எங்கள் வீட்டுக்கும் கொடுக்க வேண்டியதை தனியே எங்கள் வீட்டுக்கு அனுப்பி விடவும்
உங்கள் வீட்டுக்கு அனுப்ப வேண்டியதில் எனக்கும் பொருள் சேர்த்துக் கொள்ளவும்
ஊருக்கு வந்து அனுப்பிய பெட்டி பிரிக்கும்போது நானும் இருக்க வேண்டும்
செலவுக்கு தேவையான பணம் கொண்டு வரவும்
வந்த பின் 'அது வாங்க பணமில்லை' என்று சொல்லக் கூடாது
அங்குள்ள நகைகள் நல்ல தங்கத்தில் இருக்கும் அதில் வளையல் ,செயின் வாங்கி தனியே கொண்டு வாருங்கள்
இதற்க்கெல்லாம் பணமில்லையென்றால் கடன் வாங்கி பிள்ளைகள் படிப்புக்கும் , குடும்ப செலவிற்கும் பணம் அனுப்பி வைத்து விட்டு நான் விரும்பியது அனைத்தும் கிடைக்க வழி கிடைக்கும் வரை அங்கேயே இருந்து பணம் சேர்த்த பின் வாருங்கள் .

இரண்டு வருடம் கழித்து அனுப்பிய செய்தி
ஏன் இன்னும் ஊர் வராமல் இருக்கிறீர்கள்
'பிள்ளைகள் அப்பா எப்ப வருவார் வருவார்' என கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்
ஊருக்கு வந்து சேருங்கள் . ஒரு பொருளும் வேண்டாம் நீங்கள் வந்தால் போதும் .

கணவனின் பதில்
உன் ஆசைப்படி பிள்ளைகளுக்காக ஊர் வர முடிவு செய்து விட்டேன்.அடுத்த வாரம் வந்து விடுவேன்

Friday, February 1, 2013

ஒன்று இழந்து ஒன்று சேர்ப்பதுதான் நியதியானது

ருந்த இடம் இடிந்தாலும்
இருக்குமிடம் உயர்ந்தாலும்
இருந்த இடம் இதயத்தில்
இனிமையாய் நிலைத்து நிற்கும்

வந்த இடம் புதிமையானது
புதிய இடம் புகழைத் தந்தது
வந்தவர்கள் புகழை நாடி வந்தனர்
வந்தவர் வாயார வாழ்த்திச் சென்றனர்

வந்து போனவர் மனதில் உள்ளதனை நான் அறியேன்
வாழ்த்துச் சொன்னதில் உள்ளம் உவகைக் கொண்டது
வந்த இடத்தில இருக்க கூடி வாழ்ந்த மக்களில்லை
வசதி நாடி வகுத்த இடத்தில் இருக்க நேரமில்லை

வசதியாக கட்டிய இடத்தில சேர்க்க பொருட்கள் வேண்டும்
வசதியை உருவாக்க பணம் வேண்டும்
இருக்க வேண்டிய இடத்தில் இருக்க முடியாமல்
இல்லாளை விட்டு நிமிடமும் பிரிய மனமில்லாமல்
இல்லாளை வசதியாக கட்டிய வீட்டில் விட்டு
வேண்டிய பணம் சேர்க்க பயணம் ஓட வேண்டும்

பொருளும் பணமும் வசதியைத் தந்தது
பணம் வர வேண்டியவர் வந்தனர்
இருக்க வேண்டியோருடன் இருக்க நேரமில்லை 
ஒன்று இழந்து ஒன்று சேர்ப்பதுதான் நியதியானது

நம்மோடு நிலையாக நிற்பது நிலையானதில்லை
நம்மோடு சேர்த்து வைத்த பொருள் நம்மோடு வருவதில்லை
நம்மோடு வருவதும் நிலையாக நிற்பதும் இறைவனது வாக்கோடு
நம்மோடு வந்து சேரும் நன்மையை சேர்த்து வைத்தால்

Sunday, December 16, 2012

வேலை செய்தால் என்ன கிடைக்கும் ?

"உலகம் மண்தான். ஆனால், அது உழைப்பவருக்கு வயல். உழைக்க மறுப்பவருக்குக் சுடுகாடு. பாடுபடுபவருக்குக் கருவறை. படுக்க நினைப்பவருக்குக் கல்லறை!"
 
  வயல் வாங்கி விவசாயம் செய்தேன் ஆற்றில் நீர் வராமல் வயலுக்கு நீர் கிடைக்காமல் செடிகள் வாடின. செடிகள் வாட நான் வாடினேன்.'உழைப்பால் உயரலாம்' என்ற வாக்கு என்னை வயலில் உழைக்க வைத்தது. போட்ட பணம், உழைத்த உழைப்பு அத்தனையும் வீணானது . வாங்கிய கடன் அரசுக்கும் பாக்கி பத்து வட்டிக்கு கொடுத்த மற்றவருக்கும் பாக்கி . கடன் கொடுத்தவர் தொல்லை தாங்க முடியவில்லை 'சோடா விற்றவனுக்கு மூடி மிச்சம்' விவசாயம்  செய்தவனுக்கு வரப்பு மிச்சம்.

 கல்லணை நிற்கிறது கரிகாலனும் நிற்கிறான் என்னால் நிற்க முடியவில்லை. படுத்தால் படுத்த இடத்திலேயே கல்லறை கட்டி சமாதியாக்கி  'பூ' போடுவார்கள். கொடுத்த கடனை தள்ளுபடி செய்ய யாரும் வரமாட்டார்கள். உலகம் மண்தான் என் தலையில் இருப்பதும் மண்தானோ! அரசு கொடுக்கும் இனாமை வாங்கி ஒரு வேலையும் செய்யாமல் உண்டு படுத்து தூங்கி  இருக்கலாம்.

Monday, September 24, 2012

வேண்டாததை வேண்டி வினையில் மாட்டினேன்


கவிதை வேண்டுமென்று கவிஞர்  வைரமுத்துவுடன் போனேன்
வைரமும் முத்துவும் இருந்தால் வா! ' தருகிறேன் என்றார்

பணம் சேர்க்க வழி சொல்லுங்கள்' என கனிமொழியைக் கேட்டேன்
கனிவாக பதில்  சொல்லாமல் நகர்ந்து போனார்

கல்  வெட்டி  பணம் சேர்த்த  செல்வந்தரிடம் 'பணம் பண்ண வழி' கேட்டேன்
'பணம் சேர்த்த பின் கடுஞ்சிறையில்  போக விருப்பமானால் சொல்கின்றேன்' என்றார் 

'புகழ் வேண்டுமென்று' கலைஞரிடன் ஆலோசனை கேட்டேன் 
அதற்கு மக்கட்பேறு வேண்டுமென்று கலையாகச் சொன்னார்

வேலை வேண்டுமென்று' முதல்வரைக் கேட்டேன்
எனக்கு  ஓய்வில்லை உனக்கு பதில் சொல்ல. வேண்டுமென்றால் இனாம் தருகிறேன் வாங்கிப் போ' என்றார்

கல்வி நாடி கல்லூரி நாடினேன்
'காசைப்  போட்டால் கல்வி கிடைக்குமென்றார்'

Wednesday, June 20, 2012

ஆசையை தூண்டுகிரார்கள்!

எங்கு பார்த்தாலும் விளம்பரங்கள் . டீவியை திறந்தாலும் விளம்பரம். ஆசைப்படுவது மனித இயல்பு.அது எதில் இருக்க வேண்டும் அது எதுவரை இறுக்க வேண்டும் என்பதுதான் முக்கியம் .ஆசைப்டுவதிலும் ரசிப்பதிலும் வித்தியாசம் இருக்கிறது. ரசனயை யாரும் தடுக்க முடியாது அதுவும் மனதிற்குள் இருக்கும்வரை. ரசிப்பதை ருசிக்க நினைக்கும்போது அது நமக்கு உடமையானதாக இருக்க வேண்டும். கண்டதெற்கெல்லாம்  ஆசைப்படுவது  ஆபத்தின் விளைவாக இருக்கும். சிலவற்றில் நாம் ஆசைப்பட்டு நாம் அடைந்துவிட்டாலும் அது நம்மோடு அது நிலைத்து நிற்குமா! என்ற  முன்யோசனை வேண்டும்.
அளவான குடும்பம், நிலையான போதுமான வருமானம் இருப்பதால் நிம்மதியாக வாழ்க்கை இனிதாக,மகிழ்வாக இருக்கும் நிலையில் தூண்டுதலின் காரணத்தால் சில ஆசைகள் வந்து விட்டன.  அதனை தூண்ட வைத்தது விளம்பரங்களே. எங்கு பார்த்தாலும் விளம்பரங்கள் . டீவியை திறந்தாலும் விளம்பரம்.
வீட்டில் உள்ளவர்க்கும் ஓர் ஆசை வந்து விட்டது.

'எல்லோரும் கார் வைத்திருக்கிறார்களே நாமும் ஒரு புதிய கார் வைத்திருந்தால் வசதியாக இருக்கும் அத்துடன் சமுதாயத்தில் ஒரு மதிப்பு கிடைக்கும்'
'கார் வாங்குவதற்கு தேவையான பணமில்லையே!'
'அதான் இன்சால்மெண்டில் தருகின்றார்களே'
 'இன்சால்மெண்டில் வாங்கினால் இன்சால்வென்ட் ஆக  வேண்டிய நிலை வந்துவிடும்'
'நீங்கள் நல்லதே நினைக்க மாட்டீங்களா! விருப்பமில்லையென்றால் விடுங்கள்'
வீட்டில் நடந்த விவாதத்திற்குப் பின் ஒரே குழப்பம். நம்மீது அக்கறையுள்ள அண்ணனிடம் சென்று ஆலோசனைக் கேட்டேன்.அவருக்கு கார் வைத்திருந்த அனுபவமுண்டு.
'உனக்கு யாராவது வேண்டாதவர்கள் இருந்தால் அவருக்கு ஒரு கார் இனாமாக வாங்கிக் கொண்டு. அதிலேயே அவர் பல தொல்லைக்கு ஆளாகிவிடுவார்' என்றார். அவர் சொன்னதை வீட்டில் சொன்னேன்.
'அவங்கெல்லாம் கார் வைத்திருக்காங்க நாமும் கார் வாங்கினால் நமக்கு மதிப்பு கூடிவிடும் என்ற நினைப்போ!'
  கார் வாங்கியாச்சு. பெட்ரோல் போட்டு பணம் கரைய சிறிது சிறிதாக குடும்பத்தில் பணப் பற்றாக்குறை தொடங்கி விட்டது.கட்டுப்படுத்தாத மனது கவலையை தந்தது .  (அதிக) ஆசையே துன்பத்திற்குக் காரணம்


கார் உரிமையாளர் உண்மை செலவு
ஒரு கார் வாங்க விரும்புவர்கள் முதலில் சித்திக்க வேண்டியது.
 ஒரு கார் செலவு கொள்முதல் விலையில் முடிவடையவில்லை என்று நன்கு கவனமாக இருக்க வேண்டும். தேய்மானம், எரிபொருள் செலவுகள், காப்பீடு, பராமரிப்பு மற்றும் பழுதுபார்த்தல், மற்றும் விற்பனை வரி: இது  போன்ற கூடுதல் கவலைகளை கருத்தில் கொள்ள வேண்டும்.  வாங்கிய உடன் தகுதிவாய்ந்த சில யோசனைகளை இந்த விளக்கப்படம் விளக்கும். இந்த தகவல்  பயனுள்ளதாக அமையும்.



ஆசை

Saturday, May 26, 2012

நல்ல காலம் வருது!

வந்தாச்சு வந்தாச்சு நல்ல காலம் வந்தாச்சு
வந்தாச்சு வந்தாச்சு நல்ல ஆட்சி வந்தாச்சு

சிலர் பெட்ரோல் பண்ண சிலர் கண்ரோல் பண்ண
பைக் வாங்க கார் வாங்க பணம்  போட்டாச்சு
மைக் போட்டு வோட்டு கேட்டு வாங்கியாச்சு

பலர்  வோட்டு போட சிலர் காசு பண்ண
சிலர் கோட்டு போட  பலர் வாடி வதங்க

வந்தாச்சு வந்தாச்சு நல்ல காலம் வந்தாச்சு
வந்தாச்சு வந்தாச்சு நல்ல ஆட்சி வந்தாச்சு

நல்லவை வர அல்லவை போக
கெட்டவை வர நல்லவை போக

மகிழ்வு  வர  துயரம் போக
துயரம் வர    மகிழ்வு போக

சிலர் பாசம் காட்ட   சிலர் நேசம் காட்ட
சிலர் கோபம் காட்ட   சிலர் வேசம் காட்ட

சிலர் உதவி செய்ய  சிலர் கேடு செய்ய
சிலர் பதவி நாட       சிலர் பதவி விட

சிலர் மகிழ்வு தர    சிலர் துயரம் தர
சிலர் வேடிக்கை  காட்ட        சிலர் வேடிக்கையாகி  விட

சிலர் ஆசி தர       சிலர் தூற்றி  விட
சிலர் காசி தர    சிலர் காசி பெற

சிலர் நடிக்க   பலர் ஏமாற
சிலர் படிக்க   பலர் தத்தளிக்க

உலகம் சுற்ற  நாமும் சுற்ற
கண்டது என்ன! காணப் போவது என்ன!
கண்டவர் விண்டிலர் விண்டவர்  கண்டிலர்

Monday, April 30, 2012

நாம் அனைவரும் சமமாக இல்லை!


  பணம் பணம் பண்ணுகின்றது. முதலில் பணத்தை சேர்த்துக் கொள் பின் அனைத்தும் உன்னுடன் ஒட்டிக் கொள்ளும். பணம் பத்தும்  செய்யும். பழம் உள்ள மரத்தினை நாடி பறவைகளும் பறந்து வருவது போல் பாசமும், அன்பும் மற்ற அனைத்தும்  பணம்  வரும்போது உன்னுடன் ஓடி வரும்.
பணம் வந்தது நேர்மையான உழைப்பினால் மட்டும் வந்தது என்பது உண்மையாக இருக்க முடியாது. பணம் வர தவறான பல வகைகளும்  கையாளப்படுகின்றன. பணத்தினால் நல்ல செயல்களும் மற்றும் பாவமான செயல்களும் செய்யப்படுகின்றன. பணம் வந்த வழியினை கேட்டால் உண்மையை யாரும் சொல்லமாட்டார்கள். அது தனது திறமையால் வந்தது என பெருமை பேசுவார்கள். பணம் பேசுவதால் அதனை 'ஆமாம்' போட்டு ஒத்துக் கொள்வார்கள்.
தவறான வகையில் ஈட்டிய பணத்தினை தர்மம் செய்வதாலும் மக்களிடையே புகழை அடைய விரும்புகின்றார்கள் மற்றும் யாருக்கும் தெரியாமல் வணக்கதளத்திலுள்ள உண்டியில் போட்டு இறைவனது அருளை நாடுகின்றார்கள்.(இறைவன் ஒன்றும் அறியாதவன் என்ற நினைப்புடன்) வாழ்கையில் வெற்றி பணத்தினால் மட்டும்தான் கிடைக்கும்
என்ற குறிக்கோளுடன் தேடும் வழி தவறானது  என்பதனைப் பற்றி சிந்திப்பதில்லை.பணம் வந்த வழி எப்படி இருந்தால் என்ன அது கிடைத்த பின் வருபவர்கள் பலர் இருக்கிறார்கள் என்பதுதான் இவர்களின் குறிக்கோள்.
பணம் நல்ல பணியாள்;ஆனால் மோசமான எஜமான்.அழகு வல்லமையுடையதுதான்.ஆனால்,அதைவிட சர்வ வல்லைமையுடையது பணம்தான். பணம் பந்தியிலே குணம் குப்பையிலே.

 அனைவரும் சமமாக இல்லை. ஒருவனுக்கு இருக்க இடமில்லை மற்றவன் மாளிகையில் வாழ்கின்றான்.   ஒருவன் பசியுடன் இருக்கும் பொழுது மற்றவர் இனிப்பு உண்பதனை தடுக்கப்படும்  காலம் வருவதனை இந்த பணப் பேராசைக்காரர்கள் தடுக்க முடியாது. பணம் பகிர்ந்தளிக்கப் பட வேண்டும்.அது நேர்மையான வழியில் ஈட்டப்படவேண்டும் அது சட்டங்களால் மட்டும் வந்து விடாது. மார்க்க வழி கடைப்பிடிப்பதால் அல்லது மனதின் மாற்றங்களால் வரலாம். இல்லையென்றால் மறுமலர்ச்சி போய் புரட்சி வழி வகுத்துவிடும்   


வெற்றி பெற்றவர்கள்
 நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
-திருக்குர்ஆன் 3:104

Friday, December 17, 2010

மனம் மகிழுங்கள்! - 27 : மனதில் உறுதி வேண்டும்

மனம் மகிழுங்கள்!
27 - மனதில் உறுதி வேண்டும்
- நூருத்தீன்
னதில் உள்ளதை வாய்விட்டுச் சொன்னால் தானே நமக்குத் தெரியும்; ஏதாவது உதவலாம்.”

ஏதோ ஒரு கவலை; அதை மனதிலேயே வைத்துக் கொண்டு வெளியில் கொட்டாமல் உம்மனா மூஞ்சியாய் இருக்கும் ஒருவனைப் பார்த்து அவனது நண்பர்கள் இப்படி உரைப்பதைக் கேட்டிருப்பீர்கள். ஒருவேளை நீங்களே சொல்லியிருக்கலாம்; அல்லது உங்களுக்கே நடந்திருக்கலாம். என்ன செய்ய? அனைத்தையும் மனதில் போட்டுப் பூட்ட முடியாது. சில சமயம் மனதிலுள்ள சிந்தனைகளை வாய்விட்டுச் சொல்ல வேண்டியதும் அவசியமாகிறது.

மனதில் ஆக்கபூர்வமான – பாஸிட்டிவ் – எண்ணங்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முன்னர் பார்த்தோமல்லவா? அதை வலுவாக்கி உரமேற்றிக் கொள்ள உறுதிமொழி தேவைப்படுகிறது? என்ன உறுதிமொழி? ஒருவிதமான மன உறுதிமொழி. எதற்காக இது?

இந்த மன உறுதிமொழிதான் தரமான சிந்தனைகளை நாம் சிந்திக்கவும் அத்தகு சிந்தனைகளை ஆழ்மனதில் நிலைநாட்டவும் உதவுகிறது; நம்மை நாமே சிறப்பாய் உணர வைக்கிறது; சிறப்பாய்ச் செயல்பட வழிவகுக்கிறது. குழப்புகிறதோ? ஒன்றும் பிரச்சனை இல்லை. சற்றுப் பிரித்துப் போட்டுப் பார்ப்போம்.

ஒருநாள் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கிறீர்கள்; கடும் தலைவலி. “சீக்கிரம் வந்து தொலையாதா?” என்று நீங்கள் பேருந்திற்குக் காத்து நிற்க, தாமதமாய் வந்து சேரும் அதுவோ மக்களை அள்ளி அடைத்துக் கொண்டு வந்து நிற்கிறது. அந்நெரிசலில் முட்டிமோதி ஏறிப் பெரும் அவதியும் எரிச்சலும் தலைவலியுமாக நீங்கள் நின்று கொண்டிருக்கும் போதே ஒரு வித்தைப் புரியலாம்.

“அம்மாங் கூட்டத்தில் புகுந்து நுழைந்து, ஒற்றைக் காலில் நின்று கொண்டு பயணிப்பதே வித்தைதான். இதில் இன்னொரு வித்தையா?” என்று முறைக்காதீர்கள்.

சென்ற வாரம் வார்த்தைகளின் சக்தியைப் பற்றிப் படித்தோமில்லையா? அதையும் மனதிலுள்ள பாஸிட்டிவ் சிந்தனா சக்தியையும் ஒருங்கே உபயோகியுங்கள். அதுதான் வித்தை.

எப்படி?

“தலை அப்படி ஒன்றும் பெரிதாய் வலிக்கவில்லை; நன்றாகத்தான் இருக்கிறது; இன்னும் சற்று நேரத்தில் வலி போயே போய் விடும்.”

இதை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்ளுங்கள். “என்னடா இது அழிச்சாட்டியம்? அநியாயத்திற்குப் பொய் சொல்கிறாயே!” என்று உங்களது உள்மனம் உள்ளிருந்து உங்களை அதட்டும். அதைப் பெரிதாய் எடுத்துக் கொள்ளாமல் தவிர்த்து விட்டு, நீங்கள் பாஸிட்டிவான எண்ணத்தையே சொல்லிச் சொல்லி மனதளவில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமாம்.

மெதுவே, மெது மெதுவே, “ஆமாம்! நீ நல்லாத்தான் இருக்கே!” என்ற எண்ணம் உங்கள் ஆழ்மனதில் வேர்விட ஆரம்பித்து விடும். வலி குறைந்து போனதை உங்களையறியாமல் நீங்கள் உணர ஆரம்பிப்பீர்கள். சற்று நேரத்தில், முழுவதுமோ அல்லது பெருமளவிலோ, அந்த வலியானது மறைந்து அல்லது குறைந்து போயிருக்கும்.

இது ஓர் உதாரணம் மட்டுமே. அதற்காகக் கையில் வெந்நீரைக் கொட்டிக் கொண்டால் இதை முயலக் கூடாது. டாக்டரிடம் ஓடுவதே நல்லது. அவர் அளிக்கும் பில் உங்களது வலியை மறக்கச் செய்துவிடும்!

மேற்சொன்ன உதாரணத்தைப் போல் அந்த வித்தையைப் பலவிதங்களில் நீங்கள் பிரயோகிக்கலாம் –

“உற்றார் உறவினருக்கெல்லாம் என்மேல் மட்டற்ற அன்பும் பாசமும் உண்டு; நானும் அவர்களிடம் அன்பும் பாசமுமாய் உறவாடப் போகிறேன்.”

“அட்டகாசம்! நாளுக்குநாள் என் மன மகிழ்வு அதிகரித்து வருகிறது.”

“நான் மிகவும் ஆரோக்கியமாய் இருக்கிறேன்.”

“இன்று மேட்சில் நிச்சயம் நான் செஞ்சுரி.”

“மேனேஜர் என்ன கொம்பனா? அஞ்சாமல் அசராமல் பதில் பேசப் போகிறேன்.”

“இன்று தைரியமாய் மனைவியிடம் கைச்செலவிற்குப் பணம் கேட்கப் போகிறேன்.”

பாஸிட்டிவ் எண்ணங்கள் என்பதை வார்த்தை வடிவமாக்கி இவ்விதம் மனதால் உறுதிபடக் கூறச் சொல்கிறார்கள் உளவியலாளர்கள் . இப்படியெல்லாம் மன உறுதியிட்டுவிட்டுத் தொலைக்காட்சியில் நியூஸ் பார்க்க உட்கார்ந்து விடக்கூடாது. அது சரி வராது. அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். எதற்கான முயற்சி?

மன உறுதிமொழி என்பது நீங்கள் அடையவேண்டிய விஷயத்திற்கு உங்கள் மனதைத் தயார்படுத்தும் வழியாகும். இத்தகு மன உறுதிமொழியை ஒரு தினசரிப் பழக்கமாக நீங்கள் உருவாக்கிக் கொண்டால் அது எத்தகைய எளிய உபகரணம் என்பதையும் அதன் வலிமையும் உணர்ந்து அசந்து போவீர்கள்.

“இதென்ன? சின்னப் பிள்ளைத்தனமால்லே இருக்கு? இதையெல்லாம் நான் பின்பற்றப் போவதில்லை,” என்று நீங்கள் நினைத்தால் தேவையற்ற தலைவலி உங்கள் தலையைப் படுத்திக் கொண்டுதான் இருக்கும். உங்களது மனவலிமையின் முழு வீரியம் வெளிப்படாமல், நட்டம் உங்களது!

மன உறுதிமொழியைப் பிரயோகிப்பதற்குச் சில தந்திரங்கள் சொல்லித் தருகிறார்கள் உளவியலாளர்கள். அதையும் பார்த்து விடுவோம்.

மனமானது எப்படி நாம் நினைப்பதை நோக்கியே நகரும் தன்மையுடையது என்பதை முந்தைய அத்தியாயங்களில் பார்த்தோம். நினைவிருக்கிறதா?

“நான் இனி என் கணவன் கேட்காமலேயே கைச்செலவுக்குப் பணம் கொடுப்பேன்; நான் இனி அவரிடம் வாக்குவாதம் செய்யப் போவதில்லை.”

“எனக்கு ஞாபக மறதி இல்லை.”

என்றெல்லாம் உங்களது மனம் உறுதி எடுத்துக் கொண்டால் அதன் விளைவு என்னவாக இருக்கும்? பதில் உங்களுக்கே தெரிந்திருக்குமே? ஆம், அதேதான். “வேண்டாம்”, “இல்லை” என்பதை நோக்கி உங்கள் மனமானது வங்காள விரிகுடாவில் உண்டான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் போல் நகரத் தொடங்கியிருக்கும்.

அந்தக் காலத்தில் மாணவர்கள் தவறு செய்தால் அவர்களுக்கு ஆசிரியர்கள் ஒரு தண்டனை கொடுப்பார்கள் – imposition.

“நான் இனி பள்ளிக்குத் தாமதமாய் வரமாட்டேன்.”

“நான் இனி வகுப்பறையில் பேச மாட்டேன்.”

என்று நூறு முறை, இருநூறு முறை எழுதச் சொல்வார்கள்.

கைகடுக்க எழுதி எடுத்துவரும் மாணவன் என்ன செய்வான்?

க்ளைமேக்ஸில் திருந்தும் வில்லனைப் போல் திருந்தி விடுவானா?

அப்படிச் சுமுகமாய் வாழ்க்கை நகர்வதில்லை. அதே தவறை அதே மாணவன் மீண்டும் செய்வான். இங்கு பிரச்சனை தண்டனையில்லை; அந்த வாக்கியங்கள். தவறிலிருந்து அவனை விலக்குவதற்குப் பதிலாய் அவன் மீண்டும் மீண்டும் அந்தத் தவறை மேற்கொள்ளவே மேற்சொன்ன imposition வாக்கியங்கள் உதவியிருக்கும்.

எனவே,

நாம் என்ன செய்யப் போகிறோம், என்ன விழைகிறோம் என்பதைத்தான் நேரான முறையில் மன உறுதியாகக் கொள்ள வேண்டும். இது முதலாவது.

இரண்டாவது, இத்தகைய மன உறுதிப்பாட்டை வாய் விட்டுச் சொல்லியோ எழுதியோ வைத்துக் கொள்ள வேண்டும். இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் சொல்லியுள்ளதைப் போல் வாய்விட்டுச் சொன்னால்தான் நமது மனமே நமக்கு உதவும். மனதளவில் வெறுமே ஒரு உறுதிப்பாட்டை நீங்கள் நினைத்தால் அதை நினைத்து முடிப்பதற்கு முன்னதாகவே, “அந்தப் புடவை டிஸைன் நன்றாக இருக்கிறதே, எங்கு வாங்கியிருப்பார்கள்?”, “இன்று டின்னருக்கு சோளா பூரி சரிவருமா?” என்று மனமானது தாவி ஓடிவிடும்.

ஆனால் அதையே வாய்விட்டுச் சொல்லும் போதோ, எழுதி வைத்துக்கொள்ளும் போதோ உங்கள் புலனுணர்வுகள் இதில் ஈடுபடுகின்றன. எனவே உங்கள் மனவுறுதிப் பிரமாணம் பெரும் உறுதி பெறுகிறது.

மூன்றாவதாக மனதில் நிறுத்த வேண்டியது – கிளிப் பிள்ளை போல் மீண்டும் மீண்டும் இந்த மன உறுதிப்பாட்டைக் கூறிக் கொண்டிருக்க வேண்டும். நாம் பிறக்கும் போது நம்முடன் பிறந்தது, தொன்று தொட்டு தொடர்வது என்று நம் உள்ளும் புறமும் கலந்துவிட்ட விஷயங்களை அவ்வளவு எளிதில் நீக்குவது முடியாது. அதிலிருந்து மீள பிடிவாதமும் விடாமுயற்சியும் தேவை.

ஆக,

நல்லதை நினைப்போம்; நினைத்ததைச் சொல்வோம்; சொன்னதைச் செய்வோம்.



னம் மகிழ, தொடருவோம்...

Sunday, December 5, 2010

விவசாயம்..


வளர்ந்துவிட்டக்
கணிணி உலகத்தில்;
சாயம் போகும்
விவசாயம்!

ஒடிந்துப்போன
முதுகெலும்பால்;
படுத்தப்படுக்கையாய்
வயல்கள்!

பெருகிவரும் ஆசையால்
சுருங்கிவரும் நிலங்கள்;
அடிக்கல்லை வைத்து
அடிக்கணக்கில் விலைப்பேசி;
மடிநிறையப் பணம் கட்டும்
புது வியாபாரம்!

வாய்க்காலுக்கு
வாய் பார்த்து;
நதி நீருக்கு
விதி நொந்து;
அறுவடைச் செய்தாலும்
அடிமாட்டு விலைக்கு!

வளர்ந்து வரும் வேகத்தில்;
பள்ளிப் பாடத்தில்
மட்டும் வரும்
பின்னொருக்காலத்தில்;
விவசாயம் என்றத் தொழில்...
-யாசர் அரஃபாத்
Source : http://itzyasa.blogspot.com/2010/12/blog-post_3930.html

Tuesday, November 2, 2010

மனத்தினை நேசியுங்கள்

 நேசியுங்கள் வார்த்தைகளால் அல்ல உள்ளதால் .அகத்தின் அழகு முகத்தில். .உள்ளத்தில் இருந்து நேசம்  வெளிப்பட்டால் அதனை கொடுப்பவருக்கும்  பெருபவருக்கும்  மகிழ்வு மலரும்.  மகிழ்ச்சி என்பது ஒரு செயல் அல்ல! செயலின் விளைவுதான். தோல்வி வெற்றிக்கு வழி காட்டி.  நமக்கு மகிழ்ச்சி என்பது பொருட்களில், செயல்களில் இல்லை. அவற்றை பெறுவதில் இருக்கிறது. .உள்ளம் மகிழ்ச்சியாக இருக்கும்போது உறுதியான ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட முடியும் . வாழ்வு ஒரு முறைதான் அதனை சோகமாக்கிக் கொள்ளாதீர்கள். மகிழ்வு விலை கொடுத்து வாங்குவதல்ல. அது மனதினைச் சார்ந்தது . பணம் பெற்றவர்கள் எல்லாம் மகிழ்வில் மூழ்கி உள்ளார்கள் என்பது தவறான கற்பனை . பணம் வாழ்வின் வசதிகளை  ஏற்படுத்தி தரலாம்   அதனால் மகிழ்வினை தந்துவிட முடியாது .
 நேசம் ,அன்பு ,பாசம் அறியாதவற்கு குடும்பம் ஒரு பாரமாகும். உதட்டின் விளிம்பில் ஒரு புன்னகை இருந்து கொண்டு இருக்கும்பொழுது உங்கள் உள்ளத்தில் உற்சாகம் பிறந்து வாழ்வில் மகிழ்வு தானே வரும் .

நோய்பட்ட ஒருவருக்கு மருத்துவர் வாழ்வின் காலக்கெடு கொடுக்க வீடு திரும்புகின்றார் . அங்கே வீட்டில் தொலைகாட்சியல் சார்லி சாப்ளின்  சிரிப்பு படம் பார்த்துகொண்டு வாய்விட்டு சிரித்துக் கொண்டிருக்க இவருக்கு கோபம் வந்தாலும் தன்னை அறியாமல் தானும் அப்படத்தினை பார்க்கின்றார் . மருத்துவர் சொன்னதனை மறந்து படத்துடன் ஒன்றி வாய் விட்டு  சிரித்து மகிழ்கின்றார் . ("வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்.") இதனை தினமும் தொடர்ந்து பார்த்து மகிழ்ந்து சில நாட்கள் கழித்து மருத்துவரை பார்க்க செல்கின்றார் . அந்த  மருத்துவருக்கே ஒன்றும் புரியாமல் அதிசயப்பட்டு என்ன மருந்து சாபிட்டாய்! உடலில் நல்ல மாற்றம் தெரிகின்றதே! என்று  வினவ .
இவர் "நீங்க கொடுத்த மருந்து தான் சாபிடுகின்றேன்."
" சரி ,சரி இப்ப உன் உடம்பு நன்றாக இருக்கு கவலைப்படாதே" டாக்டர்
"நான் இப்ப கவலைப் படாமல் இருக்கத்தான்  என்னுடன் சார்லி சாப்ளின் இருக்காங்களே"
அப்பொழுதுதான் தான் மருத்துவருக்கே புலப்படுகின்றது  இவரின் உடலின் நல்ல மாற்றத்திற்கு காரணம் இவரின் மன மகிழ்வுதான் என.
எது வந்தாலும் சிரித்து மகிழு.வளமான வாழ்வுக்கு மனம்தான் முக்கியம் .