Monday, September 24, 2012

வேண்டாததை வேண்டி வினையில் மாட்டினேன்


கவிதை வேண்டுமென்று கவிஞர்  வைரமுத்துவுடன் போனேன்
வைரமும் முத்துவும் இருந்தால் வா! ' தருகிறேன் என்றார்

பணம் சேர்க்க வழி சொல்லுங்கள்' என கனிமொழியைக் கேட்டேன்
கனிவாக பதில்  சொல்லாமல் நகர்ந்து போனார்

கல்  வெட்டி  பணம் சேர்த்த  செல்வந்தரிடம் 'பணம் பண்ண வழி' கேட்டேன்
'பணம் சேர்த்த பின் கடுஞ்சிறையில்  போக விருப்பமானால் சொல்கின்றேன்' என்றார் 

'புகழ் வேண்டுமென்று' கலைஞரிடன் ஆலோசனை கேட்டேன் 
அதற்கு மக்கட்பேறு வேண்டுமென்று கலையாகச் சொன்னார்

வேலை வேண்டுமென்று' முதல்வரைக் கேட்டேன்
எனக்கு  ஓய்வில்லை உனக்கு பதில் சொல்ல. வேண்டுமென்றால் இனாம் தருகிறேன் வாங்கிப் போ' என்றார்

கல்வி நாடி கல்லூரி நாடினேன்
'காசைப்  போட்டால் கல்வி கிடைக்குமென்றார்'

ஏன் பெற்றாய் என்னருமைத் தாயே 'என்றேன்
அதை உன் தந்தையிடம் கேள்' என்றாள்

அப்பாவிடம் ஏன் அம்மாவை அடிபணியச் செய்தாய் ' என்றேன்
அதற்கு அப்பா அடிபணியவே பிறந்தவள் உன் தாய் 'என்றார்

இறைவா! இந்த உலகில் ஏன் என்னைப் படைத்தாய்! என்றேன்
'படைப்பதுதானே  என் வேலை' என்றான் இறைவன் 

பின் நான் யாரிடம் முறையிடுவேன்' என்றேன்
'உனக்கு என்னதான் வேண்டுமென்றான் '

சிந்தனை செய்தேன்
விரக்தி அடைந்தேன் 

'நான் பெற்றதை விட மற்றவருக்கு இரண்டு பங்கு கொடு '
அது எனக்கு போதுமென்றேன். 'சரி போ செய்கிறேன் 'என்றான் இறைவன்

எனக்கு ஒரு கண் பார்வை இல்லை
மட்றவர்களுக்கு  இரண்டு கண்களும் பார்வையில்லாமல் போனது  

அனைவரும் என் உதவி நாடி ஓடி வந்தனர் வழி தேடி உதவி கேட்க
என் மனம் இளகியது. அனைவருக்கும் உதவினேன்
நீ கேட்பது தருகின்றோம் எங்களுக்கு இரு கண்களிலும் பார்வை  வர இறைவனை நாடு. உனக்கு வேண்டியதை தருகின்றோம்'  என்றனர்
இளகினேன், மனம் மாறினேன் . இறைவனிடம் ' பழைய நிலைக்கு அனைவரையும் மாற்றிவிடு'  என வேண்டினேன்
இறைவன் இரக்கமுள்ளவன் . நான் கேட்டபடியே செய்து  விட்டான் .

பழைய நிலைக்கு திரும்பிய பின் அனைவரும் என்னிடம் வந்தார்கள். வந்தோர் நான் விரும்பியதைச் செய்யாமல்
என்னை நையப்  புடைத்துச் சென்றார்கள் .
கேட்பது இனி இறைவனிடம் மட்டும் இருக்கட்டும்  என்ற உறுதியான முடிவுக்கு வந்து விட்டேன்
(கற்பனையாக வந்த ஒரு கலவை. யாரையும் வருந்தும்படி எழுதும் நோக்கமல்ல)   
   

No comments: