Abu Haashima
நண்பர் ரஹ்மத் ராஜகுமாரனின்
நூல் வெளியீட்டு விழாவின்
ஒரு முக்கிய செய்தியை
இப்போது சொல்ல வேண்டும்...
விழா மேடையின் கீழே
ஒரு மேசையில்
விற்பனைக்காக நூல்கள் வைக்கப்பட்டிருந்தது.
விலை :120.
ஆனால் ...
விழாவை முன்னிட்டு
100 ரூபாய்க்குத்தான் கொடுத்தார்கள். அதுமட்டுமல்ல...
எவ்வளவு புத்தகங்கள் அச்சிட்டார்களோ அவ்வளவு புத்தகங்களும் விற்று வரும் மொத்த பணமும் நெல்லை மாவட்ட
மீலாது கமிட்டிக்கே என்று
ரஹ்மத் ராஜகுமாரன் கொடுத்து விட்டார்.
விழாவுக்கு வந்தவர்கள் எல்லோரும் விலை கொடுத்தே நூல் வாங்கினார்கள். நானும் வாங்கினேன்.
ஆச்சரியம் அதன் பிறகுதான் ஏற்பட்டது.
நெல்லையிலிருந்து நாகர்கோயில்
END TO END பேருந்தில் புறப்பட்டேன்.
பஸ் காவல்கிணறு பக்கம் வரும்போது நான் மடியில் வைத்திருந்த புத்தகம் தவறி கீழே விழுந்தது.
என் பக்கத்தில் இருந்த என் வயதையொத்த ஒருமனிதர் அதை குனிந்து எடுத்தார்..
என்னிடம் தருவதற்கு முன்னால்
அந்த அட்டைப் படத்தைப் பார்த்தார். என்னைப் பார்த்து புன்னகைக்கவும் செய்தார் . அவர் தாடி வைத்திருந்தார். நான் நமது பாய்தானே என்று எண்ணி
அமைதி காத்தேன்.
என்னிடம் புத்தகத்தை நீட்டியவர் அதைத் தராமல் புரட்டிப் பார்க்க ஆரம்பித்தார்.
புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தவர் அதில் ஈர்க்கப்பட்டு ஒரு கட்டுரையை படிக்க ஆரம்பித்தார்.
படிக்கட்டும் என்று நானும் சந்தோசப்பட்டேன்.
பஸ் நிலையம் வருவதற்குள் இரண்டு கட்டுரைகளை முடித்து விட்டு மூன்றாவது கட்டுரையில் பாதிவரை வந்திருந்தார்.
பஸ்ஸை விட்டு இறங்கும்போது என்னிடம் புத்தகத்தைத் தந்து
" ரொம்ப அற்புதமான புத்தகம். படிக்க படிக்க ஆச்சரியமா இருக்கு.... இது எங்கே கிடைக்கும் ?" என்று கேட்டார்.
" இந்த நூல் வெளியீட்டு விழாவுக்குத்தான் நான் போய் வருகிறேன்... உங்களுக்கு இந்த புக் வேணுமா பாய் ?" என்று கேட்டேன்.
அவர் சிரித்துக் கொண்டே சொன்னார்..."நான் பாயில்லை ...இந்து ".
எனக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. சமாளித்துக் கொண்டே ,
" இல்லே... தாடியெல்லாம் வச்சிருக்கீங்களே ... பாயோன்னு நெனச்சேன் " என்றேன்.
" உங்களுக்கு இந்த புக் வேணும்னா கொண்டு போங்க " என்று கொடுத்தேன்.
உடனே அவர்... " எவ்வளவு ரூபாய் ?" என்று கேட்டு பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்தார்.
நான் " வேண்டாம் சார்... இந்த புக்கை என்னுடைய அன்பளிப்பா வச்சுக்குங்க ... நான் வேறு புக் வாங்கிக்குவேன் "
என்று சொல்லி அவரிடமே கொடுத்தேன். அவர் லஜ்ஜையோடு வாங்கிக் கொண்டு...
" ரொம்ப சந்தோஷம் சார்... ரெண்டு கட்டுரை படிச்சேன் . ரொம்ப நன்னா இருந்தது. உங்க வேதத்திலே இப்படி சொல்லியிருப்பதை நினச்சு ஆச்சரியமா இருக்கு. உண்மையிலேயே இந்த புக்கை நீங்க எனக்கு தந்தா நல்லா இருக்குமேன்னு நினச்சேன். வெட்கப்பட்டு கேக்கலே.. நீங்களே தந்துட்டீங்க... ரொம்ப நற்றி சார் " னு வணக்கம் சொன்னாரு.
" உங்க பேரு ? நீங்க என்ன பண்றீங்க?"ன்னு கேட்டேன் .
என் பேரு முரளி. அரசு பணி செய்து ஒய்வு பெற்றாச்சு. இப்போ சொந்தமா தொழில் செய்றேன். சொந்த ஊர் திருநெல்வேலிதான் " ன்னு சொன்னாரு.
" இந்த புத்தகத்தோடு உங்களை ஒரு படம் எடுக்கட்டுமா?" என்று கேட்டதற்கு மறுத்து விட்டார்.
அவர் பேச்சிலிருந்து அவர் ஒரு பிராமணர் என்பதை புரிந்து கொண்டேன்.
அவரிடமிருந்து புத்தகத்தை வாங்கி அதன் அட்டையை ஒரு போட்டோ எடுத்து விட்டு அவரிடமே புத்தகத்தைக் கொடுத்து விட்டேன்.
என்னிடம் கைகுலுக்கிவிட்டு போகும்போது அவர் சொன்னார் ....
" முஸ்லிம்களை பற்றி மோசமா பேசிட்டு இருக்காங்க... இப்படிப்பட்ட (ரஹ்மத் ராஜகுமாரன் ) அறிவாளிகள் உள்ள சமுதாயம் உங்க சமுதாயம்னு நினச்சு மகிழ்ச்சியா இருக்கு. இந்த புத்தகம் என் மனசை மாத்திடுச்சி." அப்படின்னு.
" இந்த புக்கை படித்து விட்டு , நீங்க என்னிடம் சொன்னதை அவருக்கு ஒரு கடிதம் எழுதி சொல்லுங்க.. இல்லே ஒரு போன் பண்ணி சொல்லுங்க . சந்தோசப்படுவாரு " ன்னு சொன்னேன்.
கண்டிப்பா சொல்றேன்னு சொல்லிட்டு போனாரு.
சில நிமிடங்கள் அப்படியே நின்னேன்.
ஒரு முஸ்லிம் எழுத்தாளன் நிச்சயமா பணத்துக்கு ஆசைப்படமாட்டான்.
அவன் சொல்லும் செய்தி நாலு பேருக்கு போய் சேர்ந்தால் ...அதுதான் அவனுக்கு பெரிய வெற்றி. பெரிய சந்தோஷம். அதைத்தான் அவன் எதிர்பார்ப்பான்.
என் சகோதர எழுத்தாளன் ரஹ்மத் ராஜகுமாரன் அதை பெற்று விட்டார்.
அதை நானே பெற்றதுபோல் எனக்குள்ளும் சந்தோஷம்..
அல்ஹம்துலில்லாஹ்...
Abu Haashima
No comments:
Post a Comment