==ரமீஸ் பிலாலி==
திருக்குறளில் ஓரிடத்தில்கூட தமிழ் என்னும் சொல்லை வள்ளுவர் பயன்படுத்தவே இல்லை. இப்படி ஒரு தகவலை யாரேனும் வியப்புடன் உங்களிடம் சொன்னால் உங்களுக்கு என்ன கேட்கத் தோன்றும்? அதனால் என்ன என்றுதானே?
வள்ளுவருக்குத் தமிழ் மீது பற்று இருந்திருக்கலாம். ஆனால் அதனை அவர் வெளிப்படையாகச் சொல்ல வேண்டிய அவசியம் அவரின் காலத்தில் இல்லை. அந்தத் தேவை பாரதிதாசனின் காலத்தில் வந்தது.
கனியிடை ஏறிய சுவையும் முற்றல் கழையிடை ஏறிய சாறும் நனிபசு பொழியும் பாலும் என்றெல்லாம் அடுக்கிச் சொல்லி அவற்றைவிடவும் உயிருக்கு இனிதாய் இருப்பது தமிழே என்று பாடினார் அவர்.
வள்ளுவரும் ஒரு மொழியை இனிமை என்று விதந்து போற்றுகிறார். அது ஒரு சர்வதேச மொழி. உலகில் எந்த மொழியைத் தாய் மொழியாகக் கொண்டிருந்தாலும் குழந்தைகள் பேசத் தொடங்கும்போது அந்த மொழிகள் ஒவ்வொன்றிலும் வெளிப்படும் ’மொழிகளின் மொழி’ அது. அம்மொழிக்குத் தமிழில் மழலை என்று பெயர்.
”குழலினிது யாழினிது என்பர்தம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்” (66)
என்று வள்ளுவர் சொல்கிறார். இதனையே பாரதிதாசன் பாடியிருந்தால் ’தமிழைக் கேளாதவர்’ என்றுதான் பாடியிருப்பார்.
எம் கல்லூரியில் ஒரு நிகழ்வு. ’உமறுப்புலவர் பேரவை’ தொடக்க விழா. பட்டிமன்றம். நடுவர் கணேஷ் கண்ணன் பேசிக்கொண்டிருக்கையில் ஒரு குறளை மேற்கோள் காட்டி அதில் ஒரு நயமான கருத்தை வெளிப்படுத்தினார். அந்தத் திருக்குறள் துணைக்கால் இல்லாத குறள்.
”கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக” (391)
”இந்தத் திருக்குறளை வள்ளுவர் துணைக்கால் இன்றி எழுதியது ஏன் தெரியுமா? நீ கற்க வேண்டிய முறைப்படிக் கல்வி கற்றால் எவருடைய துணையும் இன்றி வாழ்வில் சொந்தக் காலில் நிற்கலாம் என்று உணர்த்தவே துணைக்கால் இல்லாமல் எழுதியிருக்கிறார்” என்று அவர் விளக்கம் சொன்னதும் மாணவர்கள் உற்சாகமாகக் கரவொலி எழுப்பினார்கள்.
இது போல் நயமாக விளக்கம் சொல்வதை வைணவ உரை மரபில் ‘ரஸோக்தி’ என்று அழைப்பார்கள். கணேஷ் கண்ணன் சொன்னதைப் போல் வேறொரு திருக்குறளுக்கு ஓர் அற்புதமான ரஸோக்தியை நான் கேட்டிருக்கிறேன். மேலே சொன்ன ’குழலினிது யாழினிது...’ என்னும் குறளுக்கு.
”மழலை பேசும் குழந்தைகளைக் குழலுடனும் யாழுடனும் ஒப்பிட்டுப் பேசுகிறார் வள்ளுவர். ஏன் தெரியுமா? புல்லாங்குழலை உதட்டில் ஒற்றி வைத்து வாசிப்பது போல் குழந்தைகளை நாம் முத்தமிடுகிறோம். யாழை விரல்களால் தொடுவது போல் குழந்தைகளைத் தூக்கியணைத்து மகிழ்கிறோம்” என்று சொல்லி என்னை அசத்தினார் ஒருவர். ஜூனியர் கவிக்கோ என்று பட்டம் பெற்ற பேராசிரியர் தி.மு.அப்துல் காதிர் அவர்கள்தான் அந்த அறிஞர்.
பட்டிமன்றத்தில் நடுவர் துணைக்கால் இல்லாத குறளுக்கு ரஸோக்தி உரைத்துக் கொண்டிருந்தபோதே என் சிந்தையில் அதே குறளுக்கு இன்னொரு நயமான உரை பளிச்சிட்டது. பக்கத்தில் இருந்த மூத்த பேராசிரியர் ஒருவரிடம் சொல்லிப் பாராட்டுக்கள் பெற்றேன்.
அந்தக் குறளில் துணைக்கால் இல்லை என்பது மட்டுமல்ல, ஒற்றைக் கொம்பும் இரட்டைக் கொம்பும்கூட இல்லை. வள்ளுவர் ஏன் அப்படி எழுதினார்? நீ எவ்வளவு வேண்டுமானாலும் படி. ஆனால், நான் படித்தவன், அறிவாளி, என்னைப் போல் யாருண்டு? என்று அகம்பாவம் கொண்டுவிடாதே. படித்ததால் உனக்கு ஒன்றும் கொம்பு முளைத்துவிடவில்லை என்று காட்டத்தான் வள்ளுவர் அப்படி எழுதியிருக்கிறார் என்று சொல்லலாம் அல்லவா?
நாடிருக்கும் இன்றைய நிலையைக் கவனித்தால் இன்னொரு கருத்தும் சொல்லலாம். எவ்வளவு படித்தால்தான் என்ன? பட்டம் வாங்கிய பிறகு வேலை கிடைக்காமல் துணை இன்றித் தனியாகத்தான் நிற்கப் போகிறாய்! என்று இந்தக் குறள் சொல்வதாகப் பார்க்கலாம்.
உண்மையில், துணைக்காலும் கொம்புகளும் இல்லாமல் அந்தக் குறள் இருப்பது இரண்டு விஷயங்களை நாம் வாழ்வில் சமனம் (’Balance’) செய்து வாழ வேண்டும் என்று காட்டுகிறது போலும்.
அதாவது, நீ கற்கும் கல்வியால் ’சொந்தக் காலில் நிற்கும்’ தகுதி உனக்கு உண்டாகும். அதற்காக அகம்பாவம் கொண்டு, நீ நிற்க எவரின் தயவும் தேவை இல்லை என்று நினைத்துவிடாதே.
கொம்பும் காலும் இல்லாத குறள் இப்படி நமக்குத் தெம்பும் தெளிவும் தருகிறது.
திருவள்ளுவர் இந்தக் கருத்தையெல்லாம் நினைத்துத்தான் எழுதினாரா என்று கேட்டால் ஆமாம் என்று உறுதியாகச் சொல்ல இடமில்லை. ஏனெனில், அவர் காலத்தில் தமிழில் கொம்பு துணைக்கால் எல்லாம் இல்லை. அதெல்லாம் ஜோஸஃப் பெஸ்கி என்னும் வீரமாமுனிவர் தமிழுக்குக் கொண்டுவந்த குறியீடுகள். எனவே மேலே சொன்ன கருத்துக்களில் வள்ளுவர் அந்தக் குறளை எழுதியிருக்க வாய்ப்பில்லை.
ஆனால் அப்படியெல்லாம் சிந்தித்துப் பார்க்கும்போது நம் மனதிற்கு இனிமையாக இருப்பதோடு வாழ்வுக்கு வழி காட்டி வெளிச்சமிடும் உயர்ந்த கருத்துக்களும் கிடைக்கின்றன அல்லவா?.
உயர்ந்த இலக்கியம் என்றைக்குமே தீராத விருந்துதான் அல்லவா?
No comments:
Post a Comment