தெளிவாகத் தெரிந்துவிட்டது
நீருக்கு வீதிகள் வேண்டும்
ஐயமின்றிப் புரிந்துவிட்டது
நீரின் வீடுகள்
குளங்கள் ஏரிகள் குட்டைகள்
என்று பல
நீரின் வீதிகள்
நதிகள் கால்வாய்கள் அருவிகள்
என்று சில
நீரின் வீடுகளுக்குள்
அத்துமீறிக் கட்டிக்கொண்ட
வீடுகளை இடிக்க வேண்டும்
நகர்களை அழிக்க வேண்டும்
நீரின் வீதிகளில்
சுயநலமாய்க் கட்டிக்கொண்ட
கடைகளை உடைக்க வேண்டும்
தொழிற்சாலைகளை அகற்ற வேண்டும்
முடியுமா
முடியத்தான் வேண்டும்
அரசு மாநகராட்சி கட்டிட வணிகர்
தரகர் மக்கள் எல்லோரும்
சேர்ந்து முடிக்கத்தான் வேண்டும்
புதிப்பிக்கப்படாத சென்னை
புதைகுழிதான்
மாற்றப்படாத சென்னை
மயானம்தான்
கட்டமைக்கப்படாத சென்னை
கருங்குழிதான்
மிகப் பெரிய காரியம்தான்
ஆனால்
முயன்றால் முடியாதது என்றில்லை
நம் தவறுகளை
நாம் மட்டுமே திருத்திக்கொள்ள முடியும்
உலகின் ஒவ்வொருவரிடமும்
பிச்சை கேட்டாவது
பிரித்துக் கட்டத்தான் வேண்டும்
சென்னையை
வேறு வழி?
No comments:
Post a Comment