வெளிப்படுத்த முடியா
சோகங்களை உள்ளுக்குள்
ஒளித்திருக்கிறோம்;
ஆனாலும்…
நான் அழுதால்;
நீ உடைவாய் என நானும்;
நீ அழுதால்;
நான் நொறுங்குவேன் என நீயும்;
மாறி மாறி புன்னகையைப்
பூசிக்கொள்கிறோம்;
எதுவுமே நடவாததுப் போலவே
பாவனை செய்கிறோம்!
வருடங்கள் வந்துவிட்டன;
புழு பூச்சி வயிற்றில் இல்லையா
என வினவும் என் சொந்தங்களின்
முகங்களை ஒடித்துவிட்டு..
உனக்குத் தெரியாதப்படி
நான் நடைப்போட..
எங்கிருந்தோ எனைப் பார்த்தப்படி..
கண்ணீரால் மூழ்கடிக்கிறாய்;
ஆனாலும்…
புன்னகைத்தப்படியே நகர்கிறாய்!
மாப்பிள்ளை சந்தோசமாக
வைத்திருக்கிறாரா எனும்
சூட்சமம் கொண்ட
உன் உறவுகளின் கேள்வியில்..
அவர்கள் முகத்தில் ஈ ஆடவிடாமல்
செய்துவிட்டு;துரத்தியும் விட்டு..
மெல்லமாய் நகர்கிறாய்…
நான் உன்னை
பார்த்துக்கொண்டிருப்பதை
பார்க்காமலே!
மாறி மாறி..
குழந்தையாகிறோம்..
மழலை இல்லையென
மடையர்கள் மணிக்கொருமுறை
குத்திக்காட்டும்போது..
ரணமாகுகிறது மனது..
ஆனாலும்..
குணமாக்கிவிடுகிறது நம் உறவு!!
- கவிதை ஆக்கம்
யாசர் அரபாத்
No comments:
Post a Comment