Friday, April 24, 2015

உயிரிசை:/ தாஜுதீன்

காற்றின் மிதந்து வரும்
பேரிரைச்சல்களுக்கிடையே
கண்டுணர்ந்ததோர் கானயிழை
எங்கோ அறுபட்டுவிட்டது

பூக்களை மொய்க்கும்
வண்டுகளின் ரீங்காரமல்ல
தத்தித் தாவும் சிட்டுக்களின்
கொஞ்சிக்குழாவலுமல்ல
மரங்களின் ஆட்டமெழுப்பும்
ஆனந்த ரிதமோ
இலைகளின் படபடப்படக்கும்
சந்தோஷ தாளமோ
அங்கே மறைந்து கேட்கும்
கிளிகளின் காதல் மொழியோ
தூர கேட்கும் குயிலின்
குதூகல ஆவர்த்தனமோ அல்ல
கவிதை வயமானது அது.
மரக்கிளையில் கட்டிவிடப்பட்ட தொட்டி
காற்றில் நிதானமற ஆடுகையின்
பிடிபடாத மொழி
குழந்தை பேசும் குதூகல மழலை!

நித்தம் பொசுங்கும்
ரணங்களின் வலியோடு
செத்துச் சரிகிற போதெல்லாம்
காற்றில் மிதந்து வரும் அது
மெல்ல காதோடு வருடி
ஹிருதயத்தை தட்டி
உயிர்ப்பித்து எழுப்பும்
பறக்க இறக்கைகள் தரும்
இன்னொரு லோகத்து
ஒளிப் பிரதேசத்தில்
இன்னொரு சுடராய் என்னை
எனக்கு காட்டித் தரும்
மந்திரமொழி அது.
வறண்ட காலப் பக்கங்களில்
உதிர்ந்து கிடக்கும் மலர்களிடையே
இன்றைக்கும் அதைத் தேடித் திரிகிறேன்.

***

Taj Deen

No comments: