Saturday, December 31, 2011

‘இப்படி எல்லாம் இருக்கும்னு தெரிஞ்சிருந்தா நான் கல்யாணமே செஞ்சிருக்க மாட்டேன்’

ஒரு பெண் தனது வாழ்க்கையில் கடந்து செல்லும் எதார்த்தமான நிலைகளை படம்பிடுத்துக்காட்டும் கட்டுரை இது!
[ ஆணும் பெண்ணும் சேர்ந்து இல்லறத்தில் ஈடுபடுவதற்கு எதற்காக வரதட்சணை? எதற்காக இத்தனை ஆடம்பரம்? பெண்ணைப் பெற்ற ஒரே காரணத்துக்காக அம்மாவும் அப்பாவும் ஏன் இத்தனை கஷ்டப்பட வேண்டும்? கேள்விகள் வந்து போனாலும் யாரிடமும் கேட்க முடியாது. மாப்பிள்ளை வீட்டார் மீது திருமணத்துக்கு முன்பே அதிருப்தியும் பயமும் ஏற்பட்டு விடும்.
அம்மா, அப்பா, தங்கை, தம்பி, தோழிகள், உறவினர், ஆசையாக வளர்த்த மரங்கள், பூச்செடிகள், வாழ்ந்த வீடு, பழகிய ஊர்... அனைத்தையும் விட்டுச் செல்லப் போவதை நினைத்து, பல இரவுகள் கண்ணீரில் கரையும்.
திருமணத்தன்று இரவே, நிறைந்திருக்கும் உறவினர் மத்தியில், பெண்ணை அலங்காரம் செய்து தனி அறைக்கு அழைத்துச் செல்லும்போது, சொல்ல முடியாத தர்மசங்கடம் நிறைந்திருக்கும். அவ்வளவாக அறிந்திராத ஓர் ஆணுடன், தனிமையில் விடப்பட்டவுடன் பயம் முழுவதும் நெஞ்சை அடைக்கும்.
புதுச்சூழல். புது வாழ்க்கை. பெண்ணை விட முதிர்ச்சி பெற்றிருக்கும் ஆண் இந்த விஷயத்தில் பக்குவமோ, பொறுமையோ காட்டுவதில்லை. ஒரு புரிதல் ஏற்பட்ட பிறகு தாம்பத்யத்தில் ஈடுபடலாம் என நினைப்பதில்லை.
திருமணம் என்றால் இன்னொரு வீட்டில் சமைப்பது, பாத்திரம் தேய்ப்பது, துணி துவைப்பது, வீட்டை நிர்வகிப்பது என்று நினைத்திருக்கும் பெண்களுக்கு இந்த விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தும். சில பெண்கள் பயத்தில் கதவைத் திறந்துகொண்டு ஓடி வந்துவிடுவார்கள். மாப்பிள்ளை எரிச்சலின் உச்சத்தில் இருப்பார். அவமானமாக நினைப்பார். பெரியவர்கள் பெண்ணுக்குப் புத்தி சொல்லி, மீண்டும் உள்ளே அனுப்பி வைப்பார்கள்...]

 ‘இப்படி எல்லாம் இருக்கும்னு தெரிஞ்சிருந்தா நான் கல்யாணமே செஞ்சிருக்க மாட்டேன்’

ஆண்கள், காதல், தாம்பத்யம் .... இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் தீண்டத்தகாத, அருவருப்பு ஊட்டக் கூடியவையாகவே சொல்லப்பட்டு பெண் குழந்தைகள் வளர்க்கப்படுகிறார்கள். அதனால் வளர்ந்த பிறகும்கூட பெண்களுக்குத் தெரிய வேண்டிய விஞ்ஞான விஷயங்களும் தெரியாமலே போய்விடுகின்றன.
பெரும்பாலான அம்மாக்கள் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல்ரீதியான மாற்றங்கள், குடும்ப வாழ்க்கை போன்ற விஷயங்களைச் சொல்லித் தருவதில்லை. ஆனால், திருமண காலம் வந்ததும் அதுவரை பெரியவர்கள் சொல்லி வந்த விஷயங்களுக்கு எதிராக நடக்க வேண்டியிருக்கிறது.
குடும்பம், படிப்பு, பொருளாதாரம் என்று ஏகப்பட்டவற்றைப் பார்த்து, மணமகனைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அதற்குப் பிறகு புகைப்படங்களின் பரிமாற்றம். இறுதியாகப் பெண் பார்க்கும் படலம். மாப்பிள்ளை, பெண்ணை எல்லோருக்கும் பிடித்த பிறகு, அந்த விஷயம் ஆரம்பமாகும். முப்பது பவுன் நகை, லட்ச ரூபாய் ரொக்கம், மாப்பிள்ளைக்கு செயின், மோதிரம், பிரேஸ்லெட். அதோடு விமரிசையாகத் திருமணம் செய்து வைக்க வேண்டும்ஸ மாப்பிள்ளை வீட்டார் கேட்கும் வரதட்சணையில் பெண் வீட்டார் வாய் அடைத்துப் போய்விடுவார்கள். இந்தச் சம்பந்தம் சரிவராது என்று முடிவெடுப்பார்கள்.
மாப்பிள்ளையின் புகைப்படம் பார்த்ததில் இருந்தே கனவுகளில் மிதந்துகொண்டிருந்த பெண்ணுக்கு ஏமாற்றமாகி விடும். அடுத்த மாப்பிள்ளை தேடும் படலம் ஆரம்பமாகும். மீண்டும் ஒரு மாப்பிள்ளையின் புகைப்படம் காண்பிக்கப்படும். சீர்வரிசை கேட்பார்கள். பெண் வீட்டார் யோசிப்பார்கள். நல்ல சம்பந்தம் எல்லாம் சீர் பிரச்னையில் கைநழுவிப் போவதை விரும்பாமல், கடன் வாங்கி, வீட்டை விற்று கல்யாணத்தை முடித்துவிட வேண்டும் என்று தீர்மானிப்பார்கள்.
பெற்றோர் படும் கஷ்டத்தைப் பார்க்கும் பெண்ணுக்கு, தனக்கு இப்படி ஒரு திருமணம் தேவையா என்ற கேள்வி வரும்.
‘வேண்டாம்மா..... இன்னும் தம்பி, தங்கச்சி எல்லாம் இருக்காங்க. எனக்கு இவ்வளவு செஞ்சீங்கன்னா அவங்களுக்கு எல்லாம் என்ன செய்வீங்க?’
‘இப்ப யாருதான் கேட்காம இருக்காங்க சொல்லு? கொஞ்சம் கஷ்டப்பட்டு செஞ்சுக் கொடுத்துட்டா, வாழ்க்கை முழுவதும் நீ கஷ்டப்படாமல் இருக்கலாமே... இதைப் பத்தி எல்லாம் நீ யோசிக்காத. நல்ல இடம்.’
ஆணும் பெண்ணும் சேர்ந்து இல்லறத்தில் ஈடுபடுவதற்கு எதற்காக வரதட்சணை? எதற்காக இத்தனை ஆடம்பரம்? பெண்ணைப் பெற்ற ஒரே காரணத்துக்காக அம்மாவும் அப்பாவும் ஏன் இத்தனை கஷ்டப்பட வேண்டும்? கேள்விகள் வந்து போனாலும் யாரிடமும் கேட்க முடியாது. மாப்பிள்ளை வீட்டார் மீது திருமணத்துக்கு முன்பே அதிருப்தியும் பயமும் ஏற்பட்டு விடும்.

நாள்கள் நெருங்க நெருங்க மரியாதை, சீர், உடை, உணவு என்று சிறுசிறு பிரச்னைகள் வந்து போகும். எப்போது என்ன நடக்கும், யார் என்ன சொல்வார்கள் என்ற பயத்தில் பெண் திருமண நாளை எதிர் நோக்கி இருப்பாள். ஒருபக்கம் புதிய வாழ்க்கையைப் பற்றி ஆர்வம் இருந்தாலும், இன்னொரு பக்கம் பிறந்த வீட்டை விட்டுச் செல்லும் துயரம் கொல்லும்.
அம்மா, அப்பா, தங்கை, தம்பி, தோழிகள், உறவினர், ஆசையாக வளர்த்த மரங்கள், பூச்செடிகள், வாழ்ந்த வீடு, பழகிய ஊர்... அனைத்தையும் விட்டுச் செல்லப் போவதை நினைத்து, பல இரவுகள் கண்ணீரில் கரையும்.
‘இது என்ன அதிசயமா இருக்கு! முளைச்ச பயிரும் பொம்பளைப் புள்ளையும் ஒரே இடத்துல இருக்க முடியுமா? வேறொரு இடத்துல நட்டாத்தான் நல்லா வளரும். ராத்திரி பஸ் ஏறினா காலையில வந்துடலாம். இதுக்குப் போயி அழுதுட்டு இருக்க?’
அம்மாவும் ஒரு காலத்தில் இப்படி அழுது, பாட்டி இதே பதிலைத்தான் சொல்லியிருப்பார்!
சடங்கு, சம்பிரதாயங்கள் முடிந்து களைத்துப் போன பிறகு, வீட்டுக்கு அழைத்து வருவார்கள்.
அன்று இரவே, நிறைந்திருக்கும் உறவினர் மத்தியில், பெண்ணை அலங்காரம் செய்து தனி அறைக்கு அழைத்துச் செல்லும்போது, சொல்ல முடியாத தர்மசங்கடம் நிறைந்திருக்கும். அவ்வளவாக அறிந்திராத ஓர் ஆணுடன், தனிமையில் விடப்பட்டவுடன் பயம் முழுவதும் நெஞ்சை அடைக்கும்.
திருமணம் என்றால் இன்னொரு வீட்டில் சமைப்பது, பாத்திரம் தேய்ப்பது, துணி துவைப்பது, வீட்டை நிர்வகிப்பது என்று நினைத்திருக்கும் பெண்களுக்கு இந்த விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தும். சில பெண்கள் பயத்தில் கதவைத் திறந்துகொண்டு ஓடி வந்துவிடுவார்கள். மாப்பிள்ளை எரிச்சலின் உச்சத்தில் இருப்பார். அவமானமாக நினைப்பார். பெரியவர்கள் பெண்ணுக்குப் புத்தி சொல்லி, மீண்டும் உள்ளே அனுப்பி வைப்பார்கள்...
திருமணத்துக்கு முன்பே பார்த்துப் பேசி, பழகும் சூழல் பெரும்பாலான பெண்களுக்கு இருப்பதில்லை. புதுச்சூழல். புது வாழ்க்கை. பெண்ணை விட முதிர்ச்சி பெற்றிருக்கும் ஆண் இந்த விஷயத்தில் பக்குவமோ, பொறுமையோ காட்டுவதில்லை. ஒரு புரிதல் ஏற்பட்ட பிறகு தாம்பத்யத்தில் ஈடுபடலாம் என நினைப்பதில்லை. திருமணம் ஆன அன்றே மனைவியுடன் சேர்வதுதான் ஆண்மை என்று நினைக்கிறார்களோ என்னவோ!
எல்லாவற்றிலும் மனைவி தன்னை விட புத்திசாலித்தனம் குறைவாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஆண்கள், இந்த விஷயத்தில் கொஞ்சம் விவரம் தெரிந்த பெண்கள் என்றால் அதிர்ச்சியடைகிறார்கள், சந்தேகப்படுகிறார்கள்!
குடும்ப வாழ்க்கை குறித்த அறிவும் இல்லாமல், பயம், வெட்கம், அவமானம் போன்ற கலவை மனநிலையில் இருக்கும் பெண்களின் உணர்வை ஆண்கள் புரிந்துகொள்வதில்லை. இப்படிக் கடுமையாக நடந்துகொள்ளும் ஆண்களால் பெண்களுக்கு வாழ்க்கை மீது மிகப்பெரிய அச்சம் ஏற்பட்டு விடுகிறது.
‘இப்படி எல்லாம் இருக்கும்னு தெரிஞ்சிருந்தா நான் கல்யாணமே செஞ்சிருக்க மாட்டேன்’ என்று சொல்லும் பெண்களிடம், யாரும் ஆறுதல் சொல்வதோ, புரிய வைக்க முயற்சிப்பதோ இல்லை. இது எல்லோரும் சொல்லும் விஷயம்தான். நான்கு நாள்களில் சரியாகி விடும் என்று விட்டுவிடுவார்கள்.
பெற்றோர், உடன்பிறப்புகள் கண்ணீருடன் வழியனுப்பி வைக்க, கொந்தளிப்பான மனநிலையில் கணவன் வீட்டுக்கு வருகிறாள் பெண்.

புது ஊர். புது வீடு. புதிய மனிதர்கள். புதிய சூழல். யார் எப்படி இருப்பார்கள் என்று ஒன்றும் புரியாது. புதுப்பெண் என்று இரண்டு நாள்கள் வேலை செய்ய விடாமல் வைத்திருப்பார்கள். பிறகு ஒவ்வொரு வேலையாகச் செய்ய ஆரம்பிக்க வேண்டும்.
‘நாங்க குக்கரில் சாதம் வைக்க மாட்டோம், காயை இவ்வளவு பெரிசா நறுக்காதே! முதலில் அரிசியை அரைச்சிட்டு உளுந்தை கிரைண்டரில் போடு, உப்பு அதிகமா சேர்த்துக்க மாட்டோம்! நீ என்ன மிளகாய்த்தூளைக் கொட்டி வச்சிட்டே., சாப்பிட முடியலை, பெரியவங்க வர்றப்ப சேர்ல உட்கார்ந்திருக்கக்கூடாது! உங்க மாமாவுக்கு எட்டு மணிக்கெல்லாம் டிபன் வச்சிடணும், பாபு ஏழு மணிக்குக் கிளம்பிடுவான், அஞ்சு மணிக்கே எழுந்திடணும்!’
இப்படி நிமிடத்துக்கு நிமிடம் பாடம் எடுக்கப்படும். யார் என்ன சொன்னாலும் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல், முடிந்தால் சிரித்தபடி, திருத்தித் திரும்பச் செய்ய வேண்டும். புகுந்த வீட்டில் யாராவது குரலிலோ, வார்த்தைகளிலோ சற்று அழுத்தம் கொடுத்துவிட்டால், கண்ணீர் வந்துவிடும். அதை வெளிக்காட்டினால் பிரச்னை ஆகிவிடும். மிகவும் பிரயத்தனப்பட்டுச் சமாளிக்க வேண்டும். சில நேரங்களில் அவர்கள் பேச்சில் காயம்படும்போது, அம்மாவுடன் எதிர்த்துப் பேசி விவாதம் செய்தது நினைவுக்கு வரும். அம்மாவிடம் நல்லபடியாக நடந்துகொண்டிருக்கலாம். அம்மாவை உட்கார வைத்து சமைத்துப் போட்டிருக்கலாம் என்று அடிக்கடி தோன்றும்.
வீட்டில் உள்ளவர்கள் மருமகளுக்குத் தெரியாமல் அவளைப் பற்றிப் பேசிக்கொள்ளும்போது, யதேச்சையாகக் கவனிக்க நேரும். முக்கியமான விஷயங்களை அவள் இல்லாதபோது பேசிக்கொள்வதையும் அறிய நேரும். அப்போது அந்த வீடு அநியாயத்துக்கு அந்நியமாகத் தோன்றும்.
ஓரிரு மாதங்களுக்குள் அடுத்த (இன்ப!) அதிர்ச்சி காத்திருக்கும்.
‘என்னம்மா, ஏன் சோர்ந்து போய் உட்கார்ந்திருக்க?’
‘என்னன்னே தெரியலை அத்தை. தலை சுத்துது. என்னவோ பண்ணுது ... ’
மருத்துவர் குழந்தை உருவாகியிருக்கும் விஷயத்தை மகிழ்ச்சியுடன் சொல்வார். குடும்பமே சந்தோஷத்தில் திளைக்கும். ‘அண்ணன் ரொம்ப ஃபாஸ்ட்’ என்று கிண்டலடிக்கும்.
இதுவே திருமணம் ஆகி நான்கு, ஐந்து மாதங்களில் குழந்தை உண்டாகவில்லை என்றால், ‘ஏதாவது விசேஷமா? மருமக முழுகாம இருக்காளா?‘ என்று கேட்க ஆரம்பித்து விடுவார்கள். ‘எங்க பரம்பரையில எல்லாருக்கும் உடனே உண்டாகிடும். இவளுக்குத்தான் இன்னும் ஒண்ணும் நடக்கலை‘ என்று சொல்வார்கள். இதுவே ஓராண்டைத் தாண்டி விட்டால், ஜோசியம், விரதம், வேண்டுதல், மருத்துவம் என்று கிளம்பி விடுவார்கள்.
கணவன் – மனைவியிடையே அன்பும் காதலும் புரிதலும் நிறைந்து, திட்டமிட்டுப் பெற்றுக்கொள்ளும் குழந்தைகள் மற்ற குழந்தைகளை விட புத்திசாலியாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பார்கள் என்கிறார்கள் மருத்துவர்கள்.
திருமணம் ஆன உடனே குழந்தை உண்டாகும் பெண்களுக்கு முதலில் அச்சம்தான் தோன்றுகிறது. குழந்தை என்றால் சந்தோஷம்தான். ஆனால், தன் வயிற்றுக்குள் ஓர் உயிர் வளர்வது என்றால் எப்படி? அது என்ன செய்யும்? எப்படிப் பிறக்கும்? கேள்விகள் துளைக்கும்.
காலை வழக்கம்போல குக்கரில் பருப்பு வைத்தால், அந்த மணம் குமட்டலைக் கொடுக்கும். வாயில் எச்சில் ஊறிக்கொண்டே இருக்கும். அதைத் துப்பிக்கொண்டே இருக்க வேண்டும். பசி எடுக்கும். ஒரு வாய் உள்ளே வைத்தாலோ, அடி வயிற்றில் இருந்து உருண்டு ஏதோ ஒன்று வாந்தியாக வெளிவரும். மயக்கமாக இருக்கும். சுருண்டு படுத்தால் தேவலாம் என்று தோன்றும். அப்படிப் படுத்தால், ‘எப்பப் பாரு தூங்கிக்கிட்டே இருக்காஸ எல்லாம் நானே செய்ய வேண்டியிருக்கு...’ என்று வாரிசுக்காகச் சந்தோஷப்பட்ட அதே மாமியார், வாரிசைச் சுமக்கும் மருமகளைக் குறை சொல்வார்.
திருமணம் ஆகி ஓரிரு மாதமே ஆனதால் ஆசையாக இருக்கும் கணவனும் மனைவி தன்னிடம் சரியாக நடந்துகொள்ள மறுக்கிறாள் என்று விரக்தியும் எரிச்சலும் அடைவான். அதை வார்த்தைகளில் சொல்லிக் காட்டுவான். பகல் முழுவதும் வேலை சரியாகச் செய்ய முடியவில்லை என்றும் இரவில் கணவனுடன் சரியாகக் குடும்பம் நடத்த முடியவில்லை என்றும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் பெண், தன் உணர்வுகளைப் புரிந்துகொள்ள மறுப்பவர்களை நினைத்து வெறுத்துப் போவாள். தம்பதியிடையே நாளாக ஆக நெருக்கம் வர வேண்டிய நேரத்தில், புரிதல் இல்லாமல் இடைவெளி விழும்.
பிறந்த வீட்டுக்குச் சென்றால் உடலுக்கு ஓய்வும் மனத்துக்குத் தெம்பும் கிடைக்கும் என்று தோன்றும். கணவனிடம் சொன்னால், ‘அதுக்குள்ளே என்ன?’ என்று விட்டுவிடுவான். அம்மாவிடம் சொன்னால், தன் மகளை அழைத்துச் செல்ல, மாமியார் – மாமனாரிடம் குழைந்து கேட்க வேண்டும்.

பிடித்ததைச் செய்து, சாப்பிட்டு, தூங்கி பொழுது இனிமையாகப் பிறந்த வீட்டில் கழிந்தாலும், கணவன் வீட்டில் என்ன நடக்கும், என்ன செய்துகொண்டிருப்பார்கள் என்ற எண்ணமே ஓடிக்கொண்டிருக்கும்.
‘அம்மா, கல்யாணம், பண்டிகைகள் செலவுன்னு உங்களுக்கு நிறையச் செலவு. இதுல குழந்தை வேற உண்டாயிருச்சு. பிரசவம் பார்த்து, குழந்தைக்கு நகை போட்டு அனுப்பணும். உங்களுக்கு நிறைய கஷ்டம்... அப்பா பாவம்!’
‘கல்யாணம் பண்ணினா இதெல்லாம் வரிசையா வரும்னு எங்களுக்குத் தெரியாதா?’
இன்னும் கொஞ்ச நாள் பிறந்த வீட்டில் இருக்கலாம் என்று தோன்றினாலும், கணவன் அழைத்த அடுத்த நொடியே கிளம்பிவிட வேண்டும்.
வயிறு நாளுக்கு நாள் பெரிதாவதாகத் தோன்றும். சட்டென திரும்பிப் படுக்க முடியாது. குழந்தையின் அசைவு தெரியும். தரையில் உட்கார்ந்து எழுவது கஷ்டமாக இருக்கும். கால் நகங்களை வெட்டுவதற்குள் போதும் போதுமென்றாகி விடும். சில நேரங்களில் கால்கள் வீங்கிக்கொள்ளும். முகம் கொஞ்சம் உப்பியது போலக் காட்சியளிக்கும்ஸ பலவித உணர்ச்சிகள்... புதுவித அனுபவங்கள்!
ஏழாவது மாதம் பிரசவத்துக்காக தாய் வீடு வந்து சேர்வாள். ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்று பட்டிமன்றம் தொடங்கும். நாள்கள் நெருங்க நெருங்க பிரசவ பயம் உண்டாகும்.
‘அம்மா, நார்மல் டெலிவரி ரொம்ப வலிக்குமா? சிசேரியன் ரொம்ப வலிக்குமா?’
‘வலிக்காம குழந்தை பிறக்குமா? உங்க மாமியாரும் மாமனாரும் எங்க மருமகளை நல்லா பார்த்துக்குங்க. எங்க வாரிசு வயிற்றில் இருக்குதுன்னு அடிக்கடி போன் பண்ணறாங்க!’
‘நம்ம வீட்டுக்கு என் குழந்தை வாரிசு இல்லையாம்மா?’
‘நம்ம ராஜா குழந்தைதான் எங்க வாரிசு. பொண்ணுங்க எல்லாம் அடுத்தவங்க வீட்டு வாரிசைத்தான் சுமக்கறாங்க....’
‘அவங்க வாரிசுன்னா அவங்களே பிரசவம் பார்க்க வேண்டியதுதானேஸ ஏன் நம்ம வீட்டுக்கு அனுப்பறாங்க?’
வலி வந்தவுடன், ‘அம்மா, எனக்கு ஏதாவது ஆனால் என் குழந்தையை நீதான் நல்லபடியா வளர்க்கணும்ஸ எனக்குப் பயமா இருக்கும்மா... வலி தாங்க முடியலை....’
‘உனக்கு ஒண்ணும் ஆகாது. தைரியமா இரு. நாங்க எல்லாம் இருக்கோம்....’
மூன்று மணி நேரப் போராட்டம். உயிர் போகிற வலி. குழந்தை பிறந்த பிறகு, ‘அம்மா, இப்பத்தான் உன்னோட அருமை முழுசா புரியுது. செத்துப் பிழைச்சது போல இருக்கு....’
முதல் வருட கல்யாண நாள்!
கணவனும் மனைவியும் இரண்டு மாதக் குழந்தையுடன் கொண்டாடுவார்கள். ஒரே ஆண்டில் மனைவி, தாய் என்ற இரட்டை பிரமோஷன்களைப் பெற்று, சூறாவளிக் காற்றில் சுழற்றியடிக்கப்பட்டு கரை ஒதுங்கும் பாய்மரம் போல ஆகிவிடுகிறாள் பெண். இதற்குள்ளாகவே பலருக்கு வாழ்க்கை கசந்து போய்விடுகிறது.
 Source : .nidur.info

2 comments:

Gobinath said...

நான் ஆணாக இருந்தாலும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. உண்மையில் வரதட்சணை திருமணத்தை வியாபாரமாக்கிவிட்டது.

Anonymous said...

நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு