Thursday, May 9, 2019
காலத்தின் கட்டாயம் ...!
04.05.2019 சனிக்கிழமையன்று சென்னை மயிலாப்பூரில் உள்ள கவிக்கோ மன்றத்தில் ஒரு சிறப்பான நிகழ்வு நிகழ்ந்தேறியது.
ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் சென்னை மாநில பிரிவு இந்த நிகழ்வை நடத்தியது.
"தமிழ் சினிமாவில் முஸ்லிம்களின் வாழ்வியல் பதிவுகள்"
என்ற தலைப்பில் சுமார் 5மணிநேரம் கலந்துரையாடல் நடந்தது.
சினிமா ஷைத்தானின் கொடூரமுகம்.
பச்சையான ஹராம். நரகத்தைத் தவிர வேறு எதையும் தந்துவிட முடியாத அவலம் அது,
என்றெல்லாம் இஸ்லாமிய சமூகத்தில் உறுதிபட சொல்லித்தரப்பட்ட வாழ்வு முறைகளை ஏற்றுக்கொண்டு வாழ்ந்து வரும் ஒரு சமூகத்தில் இன்று சில அதிர்வலைகள் உருவாகி இருக்கின்றன என்ற தகவலை பகிரங்கமாக வெளிக்காட்டிய நிகழ்வுதான் இது.
சினிமாவில் ஆபாசங்கள் பொதியப்பட்டு இருக்கின்றன.
இசையில், பாடலில் சிருங்காரங்கள் திணிக்கப்பட்டு இருக்கின்றன.
அங்கே ஆடைகளும் வசனங்களும் விபச்சாரங்களுக்குத் தூண்டு கோலாகின்றன.
இந்த முழு நம்பிக்கை கொண்ட ஒரு சமூகம் இன்று ஏதோ ஒரு புதிய பார்வையினைச் சினிமாத்துறையின் மீது செலுத்தி இருக்கிறது.
சினிமா ஒரு மீடியா.
மேற்சொன்னவைகள் எல்லாம் பொய் அதில் உண்மை இல்லை என்று எவர் சொன்னாலும் அவர்தான் முதல் ஹராமை (தடுக்கப்பட்ட பிழையை) ஆரம்பித்து வைக்கிறார்.
சினிமாவில் நிச்சயம் இத்தனைக் குறைகளும் கேவலங்களும் உள்ளன.
ஆனால், சினிமாவின் இன்னொரு புறம் மகத்தான வெளிச்சங்களை வாழ்வின் வழிகாட்டிக் கரங்களைப் பெற்றும் இருக்கின்றன.
அப்படி சினிமா இல்லை என்று எவர் சொன்னாலும் அவரும் இன்னொரு ஹராமை நிகழ்த்துகிறார்.
ஒரு மீடியா அற்புதங்களாலும் நிறைந்து இருக்கும்.
அருவருப்புக்களையும் அதில் நிறைத்துக் கொண்டு இருக்கும்.
அலைபேசிகளின் , கணினிகளின் வழியில் எத்தனை அறிவியல்களை நாம் அறிகிறோம்.
எத்தனைக் கேவலங்களை நிகழ்த்துகிறோம்.
இப்போது இந்த கருவிகளின் வழியே வரும் மீடியாக்களைப் புறக்கணித்து விட முடியுமா?
அப்படிச் செய்தால் நிகழ்யுகத்தின் எல்லைகளை விட்டும் எங்கோ தூக்கி எறியப்படுவோம்.
வீதிகளில் நடக்கும் பொழுது எவ்வளவு அனுபவ அறிவுகளைப் பெறுகிறோம்.?
எவ்வளவு ஆபாசச் சுவரொட்டிகளை, முகம் சுழிக்கும் ஆடை அலங்காரங்களை நாம் சந்திக்கிறோம்?
இதனால் தெருவில் நடப்பது ஹராம் என்று சொல்லிவிடலாமா?
எடுத்த எடுப்பில் மறுதலித்து விடாமல் அதை எண்ணிப் பார்க்க வேண்டிய இடத்திற்கு காலம் கனிந்துதான் இருக்கிறது.
ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் இதை முன்னெடுத்து இருக்கிறது என்ற கவன ஈர்ப்பு மேலும் நம்மை சிந்திக்க வைக்கிறது.
என் போன்றவர்கள் இதனைக் கைதட்டி வரவேற்கிறோம்.
ஒரு சின்ன தகவல். என்போன்றோரின் இந்த வரவேற்பை மட்டும் கருத்தில் கொண்டு அந்த அமைப்பின் அனைத்துச் செயல்பாடுகளும் உடன்பாடுதான் எனக் கருதிவிட வேண்டாம்.
முரண்பாடும் இருக்கிறது,
முன்னெடுத்த இச்செயலுக்கு வரவேற்பும் இருக்கிறது.
நடந்த நிகழ்ச்சிகள் அனைத்துமே ரசிக்கத் தக்க, சிந்திக்கத் தக்க நிலைப்பாட்டில் நிகழ்ந்தேறியது.
அங்குப் பேசிய சில இயக்குனர்கள் சொல்லிக் காட்டியத் தகவல்கள் தரத்திலும் தன்மையிலும் அபாரமான செய்திகளைத் தந்தன.
இயக்குனர் அனீஸ் சில தகவல் தந்தார். "
சினிமாத்துறை மிக லெகுவாக யாரையும் ஏற்றுக்கொள்ளாது.
ஒருவரை ஒப்புக்கொள்ளப் பலப்பல ஆண்டுகள் காயப்படுத்தும்.
கையிலிருக்கும் சரக்குகளை மதிப்புக்கொடுத்து ஏற்றுக்கொண்டாலும் சினிமாவாக்க அவ்வளவு சுலபத்தில் சம்மதம் தந்து விடாது.
அங்கே 1008 தடுப்புகள், தடுப்பது மட்டுமல்ல தடுத்து தூக்கியெறிந்து விடும் தன்மையும் கொண்டன.
இவைகளைத் தாண்டித்தான். அந்த செல்லுலார் உலகத்துக்குள்ளே பிரவேசிக்க முடியும்.
அதற்குப் பின்னால் கையிருப்புச் சரக்கின் செழுமையைக் கொண்டு வென்று விடலாம்
என்ற பாணியில் பேசி ஒரு சிந்தனைக்குத் தொடக்கத்தை ஏற்படுத்தினார்.
பரியேறும் பெருமாள் இயக்குனர்
மாரி செல்வராஜ் ஒரு நல்ல பகுதியைச் சுட்டிக் காட்டினார்.
" பரியேறும் பெருமாள் ஸ்கிரிப்டைக் கையில் எடுத்துக்கொண்டு நாங்கள் அலைந்த வேதனை எங்களுக்குத்தான் தெரியும்.
இது வெற்றி பெறாது என்று சொன்னவர்கள்தாம் ஏராளமாக இருந்தார்கள்.
தளரவில்லை நாங்கள்.
நாங்கள் தோற்றுப்போகலாம் எங்கள் சிந்தனைகள் தோற்றுப் போகக் கூடாது என்ற தெளிவில் இருந்தோம்.
அதனால் காம்ப்ரமைஸ் என்பதில் சம்மதம் வைக்கவே இல்லை.
படம் வெளி வந்தது.
தோற்றுப் போய் இருந்தால் தொலைந்து போய் இருப்போம்.
ஆனால் நாங்கள் சொல்ல நினைத்த அறம் வெற்றி பெற்றது.
நாங்கள் பிழைத்திருக்கிறோம்.
நான் வெளிநாடு சென்று இருந்த போது என்னை அதிரவைத்த செய்தியை என் நண்பர்கள் சொன்னார்கள்.
அப்போதுதான் நினைத்தேன் ஜாதி எப்படி நம் அறிவில் ஆயுதமாகவே நிறைந்திருக்கிறது என்பதை.
எங்களைப் போன்று வெளிநாட்டில் இருப்பவர்கள் 4-5 பேர் நினைத்தால் போதும் தமிழகத்தில் நாங்கள் கொண்டுவர நினைக்கும் மாற்றத்தை உருவாக்கி விடுவோம்.
வெளிநாடுகளில் நாங்கள் அதிநவீன அறிவியல் கருவிகளைக் கையாளுகிறோம் சுகபோகக் கவனமான வாழ்க்கையை வாழ்கிறோம்.
இரவில் எங்கள் அறைகளுக்கு நாங்கள் வந்தால் எங்கள் ஜாதிப் பெருமைகளையும் அதன் அவசியங்களையும் கணினியில் பதிவு செய்து பரப்பிக்கொண்டு இருக்கிறோம்.
எந்த அறிவியல் கருவிகளும் எங்கள் ஜாதிய உறுதியின் முன் தோற்றுப் போய் விடுகின்றன “ என நண்பர்கள் சொன்னார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் நான் தூத்துக்குடியில் படித்துக் கொண்டு இருக்கும் காலம்.
கார்கில் போர் நடந்து முடிந்தது. அந்த போரில் தூத்துக்குடியைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.
அத்தனைக் கல்லூரி, பள்ளி மாணவர்களும் ஒன்று திரண்டு அஞ்சலி ஊர்வலம் போனோம்.
கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் ஒழிக என்று கோஷம் போட்டோம்.
கூட்டத்தின் நடுவே ஒருவன் திடீரென துலுக்கன் ஒழிக என்றான்.
ஊர்வலப் பகுதியில் சிறு பதற்றம். சலசலப்பு.
இதுதான் பொது புத்திக்குள் இருக்கும் கத்தி என்ற பாணியில் மாரி செல்வராஜ் விளக்கினார்.
இயக்குனர் மீரா கதிரவன்," தமிழ்ச் சினிமாவில் முஸ்லிம்களின் வாழ்வியல் பதிவுகள் எப்போதோ ஆரம்பித்து விட்டன.
இப்பொழுதுதான் தொடங்கியது எனக் கருத வேண்டாம்.
இந்திய சுதந்திரத்திற்கு முஸ்லிம்களின் பங்களிப்பு எப்படியோ தமிழ் சினிமாவிலும் அப்படித்தான் முஸ்லிம்களின் பங்களிப்பு இருந்தது.
அந்தக் காலத்தில் மின்னல் என்று ஒருவர் இருந்தார். நல்ல ஓவியர் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தொடக்கத்தில் நடைபெற்ற மாநாடுகளின் ஓவியங்கள் வரைந்தவர்.
பெரியாரை அண்ணாவைப் போன்ற தலைவர்களை வரைந்தார்.
அண்ணா பெரியார் போன்ற தலைவர்கள் மின்னல் வரைந்த ஓவியங்கள் கண்டுப் பிரமித்துப் போனார்கள்.
மின்னலுக்கு அண்ணா தங்கப்பதக்கம் வழங்கினார்.
ஆனாலும்
மின்னலுக்குத் தங்கப்பதக்கமும் கிடைத்தது.
தடுக்கமுடியாத பசியும் ஏழ்மையும் கூடவே இருந்தது.
அந்தக் காலங்களில் எம்.ஜி.ஆரின் வீட்டு வாசலில் காலை வேளைகளில் அவரைப் பார்ப்பதற்கு ஒரு கூட்டம் கூடி இருக்கும்.
எம்.ஜி.ஆர். கார் அவர் வீட்டை விட்டு போனவுடன் கூட்டம் கலைந்து விடும்.
அந்தக் கூட்டத்தில் மின்னலும் போய் நிற்பார்.
எம்.ஜி.ஆர். கார் சென்று விடும். கூட்டம் களைந்து விடும்.
மின்னல் மட்டும் தினம் தினம் சென்று நின்று வந்தார். எம்.ஜி.ஆர். இதைக் கவனித்து விட்டார்.
மின்னலை அழைத்து உனக்கு என்ன வேண்டும் தினம் வருகிறாய் என்று கேட்டார்.
மின்னல் சொன்னார் நான் நல்ல ஓவியன். அண்ணா கையால் தங்கப்பதக்கம் வாங்கி இருக்கிறேன் என சொன்னார்.
எம்.ஜி.ஆர். ஆச்சரிய பட்டார். " சரி நாளைக்கு காலையில் அதை எல்லாம் எடுத்துக் கொண்டு என் அலுவலகத்திற்கு வா என்று சொன்னார்.
மறுநாள் மின்னல் எம்.ஜி.ஆரைச் சந்தித்துத் தங்கப்பதக்கம் , வரைந்த படங்கள் எல்லாம் காட்டினார்.
அப்பொழுது ஒரு படப்பிடிப்பு நிகழ்ந்து கொண்டு இருந்தது.
அந்த நிறுவனத்தில் சொல்லிக் கலைப் பிரிவில் ஒரு வேலை வாங்கி கொடுத்தார்.
அந்தப் படப்பிடிப்பு வேலைச் சில மாதங்களில் முடிந்து விட்டது.
அவருக்கும் வேலை நிறைவுற்று விட்டது.
மறுபடியும் எம்.ஜி.ஆரை நாடினார். எம்.ஜி.ஆர். விளம்பரத்துறையில் இவரைச் சேர்த்து விட்டார்.
அந்தத் துறையில் நல்ல அனுபவம் பெற்று நல்ல பழக்கங்களை ஏற்படுத்திக் கொண்டார்.
படத்தயாரிப்பாளர் ஆனார்.
ஜெயகாந்தனுடைய யாருக்காக அழுதான் குறுநாவலைச் சினிமாவாக்க மின்னல் ஆசைப்பட்டார்.
ஸ்ரீதரிடம் பேசி அதைப் படமாக்க இன்னும் சில பைனான்சியரை இணைத்துக் கொண்டார்.
படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தது.
ஜெயகாந்தன் ஒரு நாள் அங்கே வந்தார்.
ஸ்ரீதருக்கும் ஜெயகாந்தனுக்கும் பேச்சுவார்த்தைக்கு நடுவிலே கடுமையான கருத்து மோதல் வந்து விட்டது.
அதோடு படம் முடிந்து விட்டது. வெளிவரவில்லை.
அடுத்து ஜெயகாந்தனுடைய உன்னைப்போல் ஒருவன் கதையினைப் படமாக்க மின்னல் கீழக்கரை யாசினிடம் சென்று பேசி அவரை பைனான்ஸ் பண்ண வைத்தார்.
ஜெயகாந்தனே டைரக்டர் ஆனார். ஜெயகாந்தனின் நெருங்கிய நண்பர் சந்திரபாபு கதாநாயகன்.
அந்தப் படம் வெளி வந்தது. அருமையான படம்.
ஆனால் தோற்றுப் போனது.
இந்தப் படப்பணியில் எடுபிடி வேலையும் ட்ரால்லி தள்ளவுமாக வேலைக்கு வந்தவர்தான் பாலு மகேந்திரா.
அந்த மின்னலின் இயற்பெயர் முஹம்மது ஷேக்.
திரையுலகில் இப்படி முஸ்லிம்களின் நிறைய கதைகள் எனக்குத் தெரியும்.
1990க்கு முந்திய, பிந்திய காலகட்டங்கள் சினிமாவில் மிக முக்கியமான காலகட்டங்கள் ஆகும்.
அமெரிக்க சிஐஏயும் இந்திய நவீன பார்ப்பனீய சிந்தனையும் கலந்து திரையுலகில் ஒரு பெரிய பிளவை ஏற்படுதிதியது .
1990 களுக்கு முந்தையக் கட்டத்து சினிமாக்களில் முஸ்லீம் கேரக்டர்கள் நியாயமாக காட்டப்பட்டன .
90- களுக்குப் பின்னால் முஸ்லீம் கேரக்டர்கள் கொலை வெறியர்களாக , மனிதாபிமானம் அற்றவர்களாக , தீவிரவாதிகளாக காட்டப் பட்டார்கள்.
அவர்கள் பேசிய தமிழும் வடமாநில ஹிந்திக்கார மார்வாரிகளின் தமிழ் உச்சரிப்பு மொழிகளாக மாறியது.
இது முழுக்க முழுக்க ஒரு மோசமான அரசியல் விளைவின் வெளிப்பாடு.
முஸ்லிம்களை இங்குள்ள சமூகத்தவர்களுக்கு அந்நியர்களாகவே காட்ட வேண்டும் என்ற அரசியல் உள்புகுத்தப்பட்டது.
இதற்குப் பயன்பட்ட கடும் கோட்பாட்டார்கள் என்று இங்கு பேசப்படுகின்ற வஹாபியிசத்தவர்களை நாம் எந்த வகையிலும் அங்கீகரித்துக் கொள்ள முடியாது.
அவர்கள் சினிமா ஹராம், இன்னும் பலவற்றை ஹராமாக்கி முடக்கினார்கள்.
தப்பான விளக்கங்கள் கொடுத்துச் சக மனிதர்களை விட்டும் நம்மை அந்நியப்படுத்தினார்கள் .
அதன் விளைவை நாம் இப்போது சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த உண்மைகளைச் சமூகம் புரிந்துக் கொள்ள வேண்டும்.
அதன் வெளிப்பாடகத்தான் சினிமா மீடியா எவ்வளவு கவனிக்கத்தக்கது என்ற உண்மையை சமூகம் உணரத் தலைப்பட்டு இருக்கறது என்ற தோரணையில் மீரா கதிரவன் பேச்சு அமைந்திருந்தது.
இயக்குனர் தாமிரா.
தாமிரா நச்சென்று ஒரு செய்தியைச் சொன்னார்.
என் மனைவி இன்றும் கூட மனக் குழப்பத்தில் என்னுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
என்னிடமே சொல்கிறார்,
உங்கள் மீது எனக்கு அளவிட முடியா அன்பு இருக்கிறது. அதனால்தான் உங்களோடு வாழ்கிறேன்.
ஆனால் என் மனசுக்குள் ஒரு அச்சம் இருக்கிறது.
நாம் உண்ணுகிற உணவுமுதல் , நமது அனைத்து செயல்பாடுகளிலும் ஹராம் கலந்து இருக்கிறது என்ற அச்சத்தோடு வாழ்கிறேன் என்று.
நான் சினிமா துறையில் வாழ்கிறேன். சினிமா ஹராமானது . இதில் சம்பாத்திக்கும் பணம் ஹராமானது. இதில் வாழ்வது அவருக்குப் பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சினிமா ஹராம் என்று அவருக்குப் போதித்து விட்டார்கள் சிறு வயதிலேயே.
அவர் நல்ல இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். ஒரு முடிவுக்கு வந்தார் .
நம் பிள்ளைகளையாவது குர்ஆன் ஓதி வளர்க்கணும் .
ஆகவே குர்ஆன் கற்றுக் கொடுக்க்கக்கூடிய இஸ்லாமியர் நடத்தும் ஆங்கிலப் பள்ளியில் படித்து வளரட்டும் என்று முடிவு செய்தார்.
சென்னை அண்ணா நகரில் நல்ல தரமான அந்த இஸ்லாமிய பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்க அழைத்து சென்றேன்.
அந்த பள்ளிக்குச் செல்லும் போது ஒரு டாஸ்மாக் கடை அருகில் இருந்தது. அதைக் கடந்துதான் பள்ளிக்குச் செல்ல வேண்டும்.
பள்ளிகு வந்தோம்.
அங்கிருந்தவர் கேட்டார், "நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று , நான் கதையெழுதுகிறவன், சினிமாக்காரன், டைரக்டர் என்று சொன்னேன். இடம் தர மறுத்து விட்டார் .
நீங்கள் செய்கிற தொழில் ஹராம் .
அதை உடனடியாக விட்டு விடுங்கள்.
அப்படி செய்தால்தான் பிள்ளைகளுக்கு இங்கு இடம் உண்டு .
அல்லாஹ் உங்களுக்கு வேறு வகையில் ரஹ்மத் செய்வான் என்றார்.
நான் சொன்னேன் , என் வேலையை ஒரு போதும் நான் விட மாட்டேன்.
நான் ஹராத்தித்திலேயே சம்பாதிக்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
என் பிள்ளைகளாவது ஹலாலான கல்வி கற்று வாழட்டும் என்றுதானே உங்களிடம் சேர்க்கிறேன் என்றேன். ஆனாலும் மறுத்துவிட்டார்கள்.
மீண்டும் சொன்னேன், என் குழந்தைகளுக்கு இடம் தர நீங்கள் மறுத்து விடலாம். என்னால் உங்கள் பள்ளியையே நான் நினைத்தால் மூடிவிட முடியும்.
டாஸ்மாக் கடையை வாசல் பக்கத்தில் வைத்துக் கொண்டு பள்ளியை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள் .
அதை அப்புறப் படுத்த இன்று வரை நீங்கள் அரசாங்கத்தை அணுகவில்லை.
ஒவ்வொரு நாளும் அந்த ஹராத்தைக் கடந்து கொண்டுதானே பிள்ளைகள் பள்ளிக்கு வருகிறார்கள்.
எங்கேயோ நான் செய்யும் தொழிலை ஹராம் என்று சொல்லிவிட்டு வாசலிலேயே ஹராத்தை வைத்துக் கொண்டிருக்கிறீர்களே என்று கேட்டேன்.
ஸ்கூல் பீஸ் என்ன என்று மறுபடிக் கேட்டேன். 40,000 ரூபாய் என்றார்கள்.
நான் சொன்னேன். உங்களுக்கு அல்லாஹ் இப்படி பரக்கத் செய்து கொண்டிருக்கிறான் என்று.
இது நடந்தது 2000 இல் . இந்தச் சிந்தனைதான் வேரூன்றபட்ட வஹாபிய சிந்தனை.
சமூகத்தை விட்டு அந்நியப் படுத்துகிற சிந்தனைகள்.
சமூகத்தில் இருந்தே கொள்ளையடிக்கக்
கூடிய மனப்போக்குகள். என தாமிர அழுத்தமாக சொல்லி முடித்தார்.
உடன்பாட்டு, எதிர்மறைக் கருத்துக்கள் மோதி அலசி ஆராயப்பட வேண்டியவை.
ஜமாத்தே இஸ்லாமி ஏற்பாடு செய்திருக்கக் கூடிய இந்த நிகழ்வை என் போன்றவர்கள் வரவேற்கின்றோம்.
இந்த
அருமையான நிகழ்விற்குப் பொறுப்பேற்று நடத்திய
சமரசம் மாதமிருமுறை இதழின் துணையாசிரியர் வி.எஸ்.முஹம்மத் அமீன்
ஆகப்பெரும் பாராட்டுதலுக்கு உரியவர்.
தகவல் தந்தவர்
Hilal Musthafa
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment