அன்புத் தம்பிக்கு,
அண்ணன் என்ற நிலையில் சிலவற்றை உன்னிடம் சொல்லியாகவேண்டும். அவை எப்போதாவது உனக்கும் எனக்கும் பயன்படலாம்:
1. அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்துவிடு.
2. பொருள் அறிந்து குர்ஆனை ஓத முயற்சி செய்.
3. தினமும் ஐந்துவேளை தவறாமல் தொழு.
4. தொப்பி அணிவது அல்லது அணியாமல் இருப்பது உனது விருப்பம்.
5. விரலை ஆட்டுவது அல்லது ஆட்டாமல் இருப்பது பற்றியும் பிரச்சனை இல்லை.
6. முடிந்தால் தராவீஹ் இருபது ரக்அத் தொழு. அல்லது எட்டு ரக்அத் தொழு. சர்ச்சை வேண்டாம். ஈசா நபி மீண்டும் இந்த உலகிற்கு வரும்வரை இந்த விவாதம் ஓயாது.
7. பெற்றோரைக் கண்கலங்காமல் பார்த்துக்கொள்.
8. பெரியோரை மதித்து நட.
9. உறவினர்களை அரவணைத்து வாழு.
10. கொள்கை, கோட்பாடு எனக்கூறி உனது குடும்பத்தைக் கூறு போடாதே.
11. சமூகத்தைப் பிளவுபடுத்தும் காரியங்களில் இறங்காதே.
12. முன்னோர்களைச் சபிக்காதே.
13. தாடி வைக்க விரும்பினால், அழகாக வைத்துக்கொள்.
14. பணம், பதவி பாகுபாடு பார்க்காதே.
15. கல்வியே உனது ஆயுதம். அதுவே உன்னைக் கரைசேர்க்கும். பாதுகாக்கும்.
16. முடிந்தவரை உனது சொந்த நாட்டிலேயே வேலைக்கு முயற்சி செய்.
17. அரபுநாடு செல்லும் சூழ்நிலைவந்தால் பரவாயில்லை. சம்பாதித்து பணத்தை மட்டும் கொண்டு வா. அரபுநாட்டுக் கலாச்சாரத்தை இறக்குமதிசெய்யாதே. அந்தக் கலாச்சாரம் நமக்கு செரிக்காது.
18. நேர்மையாக உழைத்து பொருளீட்டு.
19. எல்லா சமய மக்களிடம் சகோதரத்துவ உணர்வோடு உண்மையாகப் பழகு.
20. உனது நல்ல பண்புகளால் அடுத்தவரை உன்பால் ஈர்த்துக்கொள். அதுவே சிறந்த அழைப்புப்பணி.
21. அடுத்தவருக்கு உதவ புயலோ, வெள்ளமோ வரும்வரை காத்திருக்க வேண்டியதில்லை. அன்றாடம் நீ செல்லும் வழியில் மற்றவர்களுக்கு பல வழிகளில் உதவலாம்.
22. சமயம், இனம், மொழியைப் பார்த்து உதவும் எண்ணத்தைக் கைவிடு.
23. செய்த உதவிக்கு மனிதர்களிடம் நன்றியை எதிர்பார்க்காதே.
24. பிறருக்கு உதவ இயக்கங்களில் இணைந்திருக்க வேண்டிய அவசியமில்லை. பெரும்பாலும் இயக்கங்கள் விளம்பரப்பலகைகளாக உள்ளன.
25. சமயம், இறைவன், சொர்க்கம், போன்றவற்றின் பெயரால் பிற உயிர்களுக்கு தீங்குச்செய்யும் வகையில் மூளைச்சலவை செய்து உனது மூளையை அசுத்தமாக்க யாராவது முயன்றால் உடனே அருகிலுள்ள காவல்நிலையத்தில் புகார் செய்.
26. எல்லோரும் இறைவனால் படைக்கப்பட்டவர்கள். எல்லோரும் சகோதர சகோதரிகள் என்பதை மனதில் ஆழமாகப் பதியவைத்துக்கொள்.
27. சாதி, சமயம், குலம், கோத்திரம் பார்த்து வாக்களிக்காதே. நல்லவர்கள் எந்தக்கட்சியில் இருந்தாலும் நீ வாக்களிக்கலாம்.
28. சொந்த மண்ணையும் பண்பாட்டையும் எப்போதும் நேசி.
29. மனதிற்கு இதமான இசையைக் கேட்கவிரும்பினால் தவறில்லை.
30. நல்ல திரைப்படங்களைப் பார்க்க ஆசைப்படுவதும் எனக்குத் தவறாகத் தெரியவில்லை.
31. தேவைக்கு மட்டும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்து.
32. உன் மனைவி உன்னில் பாதி. அவளுக்கு உரிய மரியாதையைக்கொடு.
33. உன் சகோதரிக்கு நம்பிக்கையானப் பாதுகாப்பாளனாக இரு. உளவாளியாக இருக்காதே.
34. உன் பிள்ளைகளை எல்லாச் சமய மக்களும் படிக்கும் பள்ளிகளில் சேர்த்துப் படிக்கவை.
35. சிறு வயதிலிருந்தே உன் பிள்ளைகளுக்கு அறத்தைக் கற்றுக்கொடு.
36. கிடைத்ததை வைத்து மகிழ்ச்சியாக வாழக் கற்றுக்கொள்.
37. எவரையும் எப்போதும் வார்த்தையால் புண்படுத்திவிடாதே.
38. பிறரிடம் புன்முறுவலுடன் பேசு.
39. நண்பர்களிடம் எப்போதும் நம்பகத்தன்மையுடன் இரு.
40. நம்பிக்கைத்துரோகம் உன்னை ஒரு நாள் அழித்துவிடும்.
41. தீய நட்பு மகிழ்ச்சியை அபகரித்துவிடும்.
42. தீயப் பழக்கவழக்கங்களின் பக்கம் சென்றுவிடாதே.
43. கோபம், பொறாமை, வெறுப்பு, ஆணவம் போன்ற தீயப்பண்புகளைத் தூக்கி வீசு.
44. உடல் நலம் பேணு.
45. உணவையும் தண்ணீரையும் விரையம் செய்யாதே.
46. நேரத்தை வீணாக்காதே.
47. அதிகமாக புத்தகங்கள் படி.
48. கலை, இலக்கியத்தை ரசி. உனது மனம் விசாலமாகும்.
49. வாழ்வது சிறிது காலம். மகிழ்ச்சியாக வாழப் பழகு.
50. மகிழ்ச்சியுடன் மரணிக்க ஆசைப்பட்டால் மற்றவர்களுக்கு எப்போதும் மகிழ்ச்சியைக்கொடு.
No comments:
Post a Comment