Tuesday, March 5, 2019

#வெற்றி_வேண்டுமா..!


அன்றைய மதீனா நகரில் இரண்டு பள்ளி வாசல்கள் இருந்தன.. ஒன்று நகரத்தின் எல்லையில் இருந்த மஸ்ஜிதுல் குபா.. இன்னொன்று நகரத்தின் நடுவில் அமைந்திருந்த மஸ்ஜிதுன் நபவி ..

முதியவர்கள், உடல் ஊனமுற்றவர்களுக்கு இங்கு சென்று தொழ சிரமம் ஏற்படுகிறது என்று சாக்குச் சொல்லி ஒரு சிலரால் மூன்றாவதாக ஒரு பள்ளி வாசலைக் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது.

இப்படி ஒரு பள்ளிவாசல் அப்போதைக்குத் தேவையில்லா
மலிருந்தது.

இதற்கு அபூ ஆமிர் என்பவனின் ஆதரவோடு சில நயவஞ்சகர்களும் சேர்ந்து துணை நின்றார்கள்..


பள்ளிக்கட்டி முடிக்கப்பட்டதும் இங்கு தொழுகை நடத்த வரும்படி நபி(ஸல்) அவர்களுக்கு பலமுறை இவர்கள் அழைப்பு விடுத்தார்கள்..

ஆனால் நபி அவர்கள் இங்கு ஒருமுறை கூடச் செல்லவில்லை..

இங்கு இஸ்லாமியர்களுக்கு எதிராக சதி ஆலோசனைகள் இரகசியமாக பகிர்த்துக் கொள்ளப்பட்டது என்பது பிறகு தெரிய வந்தது..

இதனால் இந்த பள்ளி மஸ்ஜிதுல் ளிரார்(தீங்கு விளைவிக்கக் கூடிய மஸ்ஜித்)என்று அழைக்கப்பட்டது..

இறைவன் இதனாலேயே இப்பள்ளியில் தொழ வேண்டாம் என நபியை தடுத்து வைத்திருந்தான்..

முடிவு ஒருநாள்
நபியின் கட்டளைக்கேற்ப இப்பள்ளி இடிக்கப்பட்டதாக
வரலாறு சொல்கிறது.

உஹது போருக்கு நபி(ஸல்) 1000 வீரர்களோடு கிளம்பி சென்றுக் கொண்டிருந்த போது பாதி வழியில் நயவஞ்சகனான அப்துல்லாஹ் இப்னு உபை படையில் மூன்றில் ஒரு பகுதியினரான 300 வீரர்களை அழைத்துக் கொண்டு போர் செய்யாமல் திரும்பிச் செல்ல முரண்டு பிடித்தான்.

இந்தச் சங்கடமான நேரத்தில் அவன் இவ்வாறு செய்ததற்கான முக்கிய நோக்கமானது எதிரிகள் பார்க்குமளவுக்கு
அருகில் வந்துவிட்ட முஸ்லிம் படைகளுக்கு மத்தியில் குழப்பத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்த வேண்டும் அதனால் நபி (ஸல்) அவர்களை விட்டு மற்ற பல முஸ்லிம்களும் விலகிக் கொள்வார்கள்..

நபியவர்களுடன் மீதம் இருப்பவர்களின் வீரம் குறைந்து விடும் அப்போது எதிரிகள் இக்காட்சியைப் பார்த்து துணிவு கொண்டு நபியவர்களின் மீது தாக்குதல் தொடுத்து, வெகு விரைவில் நபியவர்களையும் அவர்களது உற்ற உண்மை தோழர்களையும் அழித்து விடுவார்கள்..

இதற்குப் பின்பு தலைமைத்துவம் அவனுக்கும் அவனது நண்பர்களுக்கும் திரும்ப கிடைத்து விடும் என்பதே அந்த நயவஞ்சகனின் நோக்கமாக இருந்தது.

உண்மையில் அந்த நயவஞ்சகன் தனது இலட்சியத்தை நிறைவேற்றுவதில் வெற்றி பெற்றான் என்று தான் சொல்ல வேண்டும்..

உஹது போர் இஸ்லாமியர்களுக்கு தோல்வியை கொடுத்தது..

காரணம் முஸ்லிம்கள் பிளவுபட்டு நின்றது.நயவஞ்சன் உபை பாதியில் சதி செய்தது.. போர் பொருட்களின் மீது
மக்கள் ஆசை கொண்டது..

இன்றும் இஸ்லாமியர்களின் நிலை சிறிதும் மாற்றமில்லாது இவ்வாறே தொடர்கிறது..

நயவஞ்சகமும்,சூழ்ச்சியும் செய்வதற்கு பெரும் கூட்டங்கள் தேவையில்லை..

வேண்டாத ஒரு துரோகி கூட இருந்து விட்டால் போதும்..

பெரும் கூட்டம் கூட தோல்வியை தழுவி விடும்..

வரலாற்று சம்பவங்கள் இதை தான் நமக்கு உணர்த்துகிறது..

சிலரின் நயவஞ்சக சதியில் சிக்கிக் கொண்டவர்கள் தோல்விகளை சந்திப்பது மட்டுமல்லாது தன் சமுதாயத்திற்கே நாசம் செய்தவர்கள் ஆவார்கள்..

இந்த சதி வலைகளை புரிந்து நடந்துக் கொண்டவர்கள் வெற்றி கனியை பறிப்பார்கள்.

அதற்கு தியாகங்கள் முக்கியம்..

பதவியும், பணமும் சமுதாயத்தை பிளவு படுத்தி விடும்..

சமுதாய வெற்றிக்காக பதவிகளை துறப்பவர்களை
பதவிகள் தேடி
வந்து கரம் பிடித்து இழுத்துச் செல்லும்..

பெரும்பாலும் இது போன்ற சதிவலைகளில் ஈடுபடும் நயவஞ்சகர்கள் கோழைகளாக இருந்ததாகவே வரலாறு வரைகிறது.

இவர்கள் முடிவும் வரலாறுகளில் அவ்விதமே பதியப்பட்டும் கிடப்பதை நயவஞ்சகர்கள் அறிந்து தெளிந்து தவ்பா செய்து திருந்திக் கொண்டு இஸ்லாமிய சமுதாய ஒற்றுமைக்கு குரல் கொடுக்க வேண்டும் என்பது இதுபோன்றவர்களின் இறுதி முடிவை வாசிக்கும் வேளையில் புரிந்து விடும்..

உபை இப்னு கலஃப்பின் கடைசி தருணங்கள் கோழைத்தனத்தின் உச்சமாகவே இருந்தது..

“முஹம்மது எங்கே! அவர் தப்பித்துக் கொண்டால் நான் தப்பிக்க முடியாது” என்று அலறியவனாக மலைக் கணவாயில் நபியவர்களைத் தேடி அலைந்தான் உபை..

அப்பொழுது அவன் நபியவர்களைப் பார்த்துவிட கொலை வெறியுடன் அவர்களை நோக்கி விரைந்து வந்தான்.

தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் சென்று அவனைத் தாக்கட்டுமா?” என்று கேட்டார்கள்.

அதற்கு நபி (ஸல்) “அவனை விட்டு விடுங்கள். அவன் என்னருகில் வரட்டும்” என்றார்கள்.

அவன் நபியவர்களுக்கு அருகில் நெருங்கிய போது ஹாரிஸ் இப்னு சிம்மாவிடமிருந்து ஒரு சிறிய ஈட்டியை வாங்கி நபியவர்கள் தனது உடலைச் சிலிர்த்தார்கள்.

எப்படி ஒட்டகம் சிலிர்க்கும் போது அதனுடைய முதுகிலிருந்து முடி பறக்குமோ, அதுபோன்று மக்கள் நபி (ஸல்) அவர்களை விட்டு பறந்தார்கள்.

பிறகு நபி (ஸல்) அவர்கள் அவனை முன்னோக்கி அவன் அணிந்திருந்த கவச ஆடைக்கும் தலைக் கவசத்திற்குமிடையே தெரிந்த அவனது கழுத்தைக் குறி பார்த்து ஈட்டியை எறிந்தார்கள்.

அந்த ஈட்டி அவனது கழுத்தை உராய்ந்து சென்று சிறிய காயத்தை மட்டுமே ஏற்படுத்தியது.

ஆனால், அதனால் ஏற்பட்ட வலியோ மிகக் கடுமையாக இருந்தது,

அவன் ஒட்டகத்தில் அமர முடியாமல் பலமுறை கீழே விழுந்து எழுந்தான்.

அந்த சிறிய காயத்துடன் குறைஷிகளிடம் திரும்பி “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! முஹம்மது என்னைக் கொன்று விட்டார்” என்று சப்தமிட்டான்.

அதற்கு குறைஷிகள் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ பயந்துவிட்டாய். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உனக்கு ஏதோ கோளாறு ஏற்பட்டுவிட்டது. இல்லையென்றால் இந்த சிறிய காயத்திற்குப் போய் இப்படி கூச்சல் போடுவாயா? என்று கூறி நகைத்தார்கள்.

அதற்கு அவன் “முஹம்மது மக்காவில் இருக்கும்போதே நான் உன்னைக் கொல்வேன்! என்று கூறியிருந்தார். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! என்மீது அவர் துப்பியிருந்தாலும் நான் செத்திருப்பேன்” என்று கூறினான்.

மாடு அலறுவது போன்று அவன் அலறினான். “எனது உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! எனக்கு இருக்கும் வேதனையை இந்த “தில்மஜாஸிலுள்ள’ அனைவருக்கும் பிரித்துக் கொடுத்தால் அவர்கள் அனைவரும் இறந்துவிடுவார்கள்” என்றான்.

மக்கா செல்லும் வழியில் ‘ஸஃப்’ என்ற
இடத்தில் அவன் இறப்பெய்தினான்..

#வரலாறுகள் வெற்றிக்கு வழியை நமக்கு
அழகாகச் சொல்லித் தருகிறது..நாம் தான் அலட்சியமாக இருந்து விட்டு கடைசியில் புலம்புகிறோம்..


Saif Saif

No comments: