தங்கர் பச்சான்
இன்னும் மூன்று வாரங்களில் நாம் விடுதலை பெற்றதற்கான 68-ம் ஆண்டு கொண்டாட்டத்தைக் கொண்டாடி மகிழப் போகிறோம். நாம் எல்லோருமே இந்நாட்டு மன்னர்கள்தான். ஆனால், 56 சதவீத மன்னர்களுக்கு (மக்களுக்கு) சொந்த வீடுகூட இல்லை. குருவிகளுக்காவது தங்கிக்கொள்ள கூடுகள் இருக்கின்றன. மனித இனம் காட்டுமிராண்டிகளாக இருந்து, மனிதர் களாகப் பரிணமித்து ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆன பின்னும்கூட இன்னும் வீடுகள் இல்லாமல் வீதிகளிலும், மரத் தடிகளிலும் வாழ்வதைப் பற்றி இங்கே யாருக்கும் கவலையில்லை. இந்நிலை யில் ‘இந்தியா ஏழைநாடு’ என சொல் லிக் கொள்ளவும் மறுக்கிறது. அத்துடன் வெட்கமே இல்லாமல் பணக்கார நாடு களில் ஒன்றாகக் காட்டிக் கொள்ளவும், வல்லரசு நாடாகத் தன்னை பறைசாற்றிக் கொள்ளவும் படாதபாடுபடுகிறது.
இப்போதே இந்தக் குடிமகன்களின் நிலை இதுவென்றால், எதிர்காலத்தில் பிறக்கப் போகும் தலைமுறை எப்படி வாழப் போகிறதோ?
ஒருபக்கம், நாள் முழுக்க உழைத்து நமக்கெல்லாம் உணவளித்து, சுகமாக வாழ்வதற்கு வீடுகளை கட்டிக் கொடுத்து, விரைந்து செல்ல சாலைகளை அமைத் துக் கொடுத்துவிட்டு வீதியோரம் படுத்துக் கொள்ளும் மக்களும்; உழைத்த பணத்தில் பாதி பணத்தை வீட்டு வாடகைக்குக் கொடுத்துவிட்டு, வாழ்க்கைத் தேவைகளை சுருக்கிக் கொண்டு தினம்தினம் வாழ்க்கையோடு போராடிக் கொண்டிருக்கும் மக்களும் மிகுதியாக இருக்கும் நாடு இது.
மற்றொரு பக்கம், ஆட்களே இல்லாத ஆண்டுக்கொரு முறையோ, இரண்டு முறையோ சில நாட்கள் மட்டும் தங்கும் பல ஆயிரம் சதுர அடிகளைக் கொண்ட அரண்மனை வீடுகள்; இரண்டுபேர் மட்டுமே வாழ்வதற்கு பலமாடி வீடுகள்; ஆட்களே இல்லாமல் அடைத்து மூடி வைத்திருக்கும் வீடுகளும் இருக்கின்றன.
ஒரு குடும்பத்துக்கு ஒரு வீடு இல்லாத நிலையில், ஒரே குடும்பத்துக்கு 10 வீடுகள் இங்கே வைத்துக்கொள்ளலாம். பணம் இருந்தால் எந்த வீட்டையும், எத்தனை வீட்டையும் வாங்கி பூட்டி வைத்துக்கொள்ளலாம்.
ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ் நாளில் ஒரு சொந்தவீடு என்பதுதான் பெருங்கனவு. சிலருக்கு மட்டுமே பலப் போராட்டங்களுக்கு இடையில் அது நிறைவேறிவிடுகிறது. ஆனால், அதற்காக அவர்கள் கொடுக்கிற விலையும், நிம்மதி இழப்பும் வாழ் நாள் முழுக்க அவர்களைத் துரத்திக் கொண்டே இருக்கின்றன. வாழ் நாளின் இறுதிவரை வாடகை வீட்டி லேயே வாழ்பவர்களின் நிலை எல்லா வற்றையும்விடக் கொடியது. பல லட்சங்கள் செலவழித்து இடம் வாங்கி, அதேபோல் இன்னும் பல லட்சங்கள் செலவழித்து வீட்டை உருவாக்கி, அந்த வீட்டை சில ஆயிரத்துக்கு வாடகைக்குத் தருபவர்களின் நிலை இன்னும் மோசம். சொந்த வீட்டுக்கு ஆசைப்பட்டு கடன்பட்டு ஒவ்வொரு நாளும் உறக்கத்தை இழந்தவர்களும் கணக்கிலடங்காதவர்கள்.
வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் நம்மவர்கள் இரவும் பகலும் அரும்பாடுபட்டு உழைத்து, உறவுகளைப் பிரிந்து சேமித்தப் பணத்தில் மற்றவர் களுக்குத் தெரிய வேண்டும் என்பதற் காகவே கொண்டுவந்த பணத்தையெல் லாம் செலவழித்து, மாடி வீட்டைக் கட்டிக் கொண்டேயிருக்கிறார்கள்.
எழுத்துப் பணிக்காக அண்மையில் இரண்டு வாரங்கள் கொடைக்கானல் சென்று தங்கினேன். அமைதியான இடம் தேடி அலைந்தபோது எல்லா திசைகளிலும், எல்லா மலைகளிலும் திரும்பிய பக்கமெல்லாம் வீடுகள். நகரமே பரவாயில்லை என்றிருந்தது. புதுமையாக இருக்க வேண்டும் என்பதற் காக பாறைகளை உடைத்து அதில் வீட்டை உருவாக்கியிருக்கிறார்கள். தமிழர்களின் தொழில்நுட்ப அறிவை அங்கேதான் பார்க்க முடிகிறது. எப்படிப்பட்ட மலைக்கும் சாலை கள் அமைத்து கார்களை வீட் டுக்கு முன் நிறுத்தும் வசதியை உருவாக்கிவிடுகிறார்கள்.
ஆயிரக்கணக்கான வீடுகள் மலை களின் சரிவில் தொங்கிக் கொண்டி ருக்கின்றன. எங்கு திரும்பினாலும் வீடு கட்டும் பணிகளும், சாலை அமைக் கும் பணிகளும் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. இவற்றை அமைப்பதற்கான ஒவ்வொரு மூலப் பொருளும், கட்டுமான பொருட் களும் கீழேயிருந்துதான் கொடைக் கானலுக்குக் கொண்டு வர வேண்டும். இதற்காக நூற்றுக்கணக்கான லாரிகள் இயங்கிக்கொண்டே இருக்கின்றன.
நாள்தோறும் வேளாண்மை செய்து கொண்டிருக்கும் நிலங்கள் பத்திரப் பதிவு செய்யப்பட்டு வீட்டுமனை களாக வேறொரு கைக்கு மாறிக் கொண்டே இருக்கின்றன. சிறுசிறு துண்டு நிலங்களை அதிக விலைக்குக் கொடுத்துவிட்டு அம்மண்ணின் மைந் தர்கள் ஆளுக்கொரு கார் வாங்கி ஊர்ச் சுற்றிவிட்டு ஆறே மாதத்தில் அனைத்தையையும் இழந்து, மதுக்கடை வாசலில் மதியிழந்து கிடக்கிறார்கள்.
தன்னைப் பண வசதி படைத்தவன் எனக் காட்டிக்கொள்வதற்காகவும், பேரப் பிள்ளைகள் மலைக் குளிர்ப் பிரதேசங்களில் தங்களுக்கு ஒரு வீடு இல்லையா என கேட்டுவிடக் கூடாது என்பதற்காகவும் மட்டுமே ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற இடங்களில் இப்படிப்பட்ட வீடுகள் கட்டப்படுகின்றன. நூற்றுக்குத் தொண் ணூத்தைந்து வீடுகளில் ஒரே ஒரு வீட்டில் கூட உரிமையாளர் தங்குவது இல்லை. ஆண்டுக்கு இரண்டு முறை ஒரு வார காலம் வந்து குடும்பத்துடன் தங்கினாலே பெரிய காரியம். மற்ற நாட்களில் ஆண்டு முழுக்க வீடுகள் பூட்டியே கிடக்கின்றன.
இங்கே அரசியல் தொடர்புடைய, அதிகாரங்களில் இருக்கக்கூடிய, பிற துறைகளில் அங்கம் வகிக்கக்கூடிய அனைத்துப் பணக்காரர்கள் மற்றும் பெரும் வணிகர்கள் என அனைவருக் குமே அங்கே இடமும், வீடும் உண்டு.
நம் நாட்டின் பெருங்கொடைகளாக இருக்கிற இவைபோன்ற மலைப் பிரதேசங்களின் இயற்கை வளங்களும், இயற்கை அமைப்பும் விதி மீறப் பட்டு ஒவ்வொரு மணி நேரமும் அழிந்துகொண்டே இருக்கிறது. மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் வருமானம் வருகிறது என்பதற்காக இப்படிப்பட்ட இடங்கள் வணிகமயமாக்கப்பட்டு, சிதைக்கப்பட்டு, இயற்கைக்கு மாறாக அழிந்துகொண்டே இருக்கின்றன. கொடைக்கானலில் இருந்து 6 கி.மீ. தள்ளி யிருந்த சிற்றூரில்தான் நான் தங்கியிருந் தேன். ஆழ்துளை கிணறுகளை அமைக் கக்கூடாது என விதியிருந்தும் கிராம நிர்வாக அதிகாரிகளின் துணையுடன் நகர வளர்ச்சித் துறையின் ஒப்புதலுடன் நாள்தோறும் மலைகள் குடையப்பட்டு, ஆண்டுக்கு ஒருமுறை வந்து தங்கப் போகும் செல்வந்தர்களுக்காக ஆழ் துளை கிணறு உருவாகிக்கொண்டே இருக்கிறது.
இயற்கையின் அழுகை யாருக்குமே தெரியவில்லை. யார் யாரெல்லாம் சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் மேசையைத் தட்டித் தட்டி சட்டத்தை உருவாக்கினார்களோ… அவர்களா லேயே, அவர்களின் துணையுடனேயே கண்முன் இயற்கை அழிக்கப்படுகிறது. இன்னும் சில ஆண்டுகளிலேயே கோயம் புத்தூர் போலவே ஊட்டியும், திண்டுக்கல் போலவே கொடைக்கானலும், சேலம் போலவே ஏற்காடும் மாறிவிடும். காலம் முழுக்க உழைப்பவனுக்கு இங்கே வீடும் இல்லை; உழைத்து வாழ நிலமும் இல்லை. ஆனால், பணத்தை என்ன செய்வதென்று தெரியாதவர்களுக்கு கணக்கில்லாத வீடுகளும்; உல்லாசத் துக்காகப் பொழுதைக் கழிப்பவர் களுக்கு நூற்றுக்கணக்கில் ஏக்கர் தோட் டங்களும் உள்ள நாடுதான் நம் நாடு.
‘ஒருவர் பெயரில் ஒரு வீடுதான், அதற்குமேல் இருந்தால் அது அரசுக்கு சொந்தம்’ எனும் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்து அனைவருக்கும் வீடு கிடைக்க வழிவகை செய்யும் அன்றைக்குத்தான் இது சுதந்திர இந்தியா. அப்போதுதான் வீடு இல்லாத இம்மக்களுக்கும் சுதந்திரக் கொண்டாட்டம். அதுவரை, எம்மக்களுக்கு ‘ஆகஸ்ட் 15’ ஒரு விடுமுறை நாள்தான்!
- சொல்லத் தோணுது...
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: thankartamil@gmail.com
நன்றி : http://tamil.thehindu.com/
---------------
தங்கர் பச்சான்
No comments:
Post a Comment