Sunday, March 22, 2015
மீட் மிஸ்டர் ‘மீடியா டெரரிஸ்ட்’ அர்னாப் கோஸ்வாமி!! – முஹம்மது ஃபைஸ்
‘டைம்ஸ் நௌவ்’ தொலைக்காட்சி – அதன் செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி. 26/11 மும்பை தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு மேற்படி ஆசாமிகள் நாடு முழுவதும் பிரபலம். அதிலும் அர்னாப் நடத்தும் ‘News Hour’ எனும் செய்தி நேரம் பற்றி நாம் அறிந்திருப்போம். அதில் அவன் போடும் காட்டுக் கூச்சலும் பங்கேற்கும் விருந்தினர்களை நடத்தும் பாங்கும் முகம் சுளிக்க வைப்பவை.
இத்தனை தெரிந்திருந்ததும் அன்று அந்த நிகழ்ச்சியை பார்க்க வேண்டியதாயிற்று. ‘ஷரியத் நீதி மன்றங்களின் தீர்ப்பு செல்லாது’ என்று சில மாதங்களுக்கு முன் ஒரு உச்ச நீதி மன்றத்தில் ஒரு தீர்ப்பு வந்தது அல்லவா? அதை ஒட்டித்தான் அன்று விவாதம்.
உண்மையில் ஷரியத் நீதி மன்றங்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத தீர்ப்பு. ஆனால் அதை வைத்து கூத்தாடினான் இந்த கோஸ்வாமி. ஆனந்தக் கூத்துதான். இரு அப்பிராணி ஆலிம்சாக்களை அன்று அழைத்து வந்து சுடு சொற்களால் அவர்களை மானபங்கப்படுத்தினான். அவர்கள் ஏதோ சொல்ல முயன்ற போதெல்லாம் அவர்களை அடக்கினான். ‘இது ஒன்றும் சவூதி அரேபியா இல்லை’ என்றான். இஸ்லாத்தை ஏன் இன்னும் தடை செய்யவில்லை? என்பது போல் இருந்தது அன்று அவன் பேச்சு.
இவன் நிகழ்ச்சி நடத்தும் விதத்திற்கு இது ஒரு சின்ன உதாரணம். பார்க்கும் நமக்கு தோன்றும் ஒரே கேள்வி இதுதான். இவன் ஊடகவியலாளனா? அல்லது பேட்டை ரவுடியா? நமக்கு மட்டுமல்ல, நாட்டில் அநேகம் பேருக்கு இந்தக் கேள்வி எழுந்துள்ளது.
அர்னாப் அமிலம் தடவிய நாக்குடையவர் என்கிறார் ‘இந்தியா லீகல்’ ஆசிரியர் இந்திரஜித் பத்வர்.
‘உங்களுக்கு இந்திய சட்டங்களின் மேல் என்ன நம்பிக்கை உள்ளது? இந்திய அரசமைப்புகளின் மேல் என்ன நம்பிக்கை உள்ளது? சொற்ப நம்பிக்கைதான் உள்ளது’. – CPI பொலிட் பீரோ உறுப்பினர் கவிதா கிருஷ்ணனிடம் அர்னாப்.
‘நான் டைம்ஸ் நௌவ்வில் பங்கேற்பதை நிறுத்தி விட்டேன். ஒவ்வொரு முறையும் அர்னாப் அதை இந்திய – பாகிஸ்தான் சண்டையாக மாற்ற முயற்சிக்கிறார்’ – இப்படி சொல்கிறார் பாகிஸ்தானின் GEO டி.வி தலைமை ஆசிரியர் ஹமீத் மீர். ( இந்தியா பாகிஸ்தான் பேச்சு வார்த்தை என்றால் கோஸ்வாமிக்கு வேப்பங்காயாக கசக்கும். அதை பிரியாணி Diplomacy என்று எள்ளி நகையாடுவான். சாதாரண பிரச்சனையையும் இரு நாட்டு சண்டையாக மாற்றுவதில் இவனுக்கு நிகர் யாருமில்லை).
‘பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவை விட்டு 1947 லேயே போய் விட்டார்கள். இன்னும் அவர்கள் பின்னால் ஏன் அலைகிறீர்கள்?. அவர்கள் உங்களுக்கு யார்?’ – ‘Green Peace’ அமைப்பின் உறுப்பினர் பிரியா பிள்ளையிடம் அர்னாப்
அமில வார்த்தைகளுக்கு சில மாதிரிகள் இவை.
கடந்த மாதம் ‘Green Peace’ அமைப்பிற்கும் மோடி அரசுக்கும் ஏற்பட்ட பிரச்னையில் அவர்களை நிகழ்ச்சிக்கு அழைத்து வைத்து ‘நீங்கள் தேச விரோதிகள்; தேச பக்தி அற்றவர்கள்’ என்று சாடினான். இது தொடர்பாக அந்த அமைப்பினர் ‘டைம்ஸ் நௌவ்’ நிறுவனத்திற்கு எழுதிய கடிததில், இந்த நிகழ்ச்சியை தாங்கள் புறக்கணிப்பதாகவும் இனி பங்கேற்பதில்லை எனவும் தெரிவித்துள்ளனர். அரசாங்கம் மற்றும் உளவுத்துறையின் அபிலாஷைகளை நிறைவேற்றும் மேடையாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினர். நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களை அதை நடத்துபவரே மட்டரகமாக இழிவு படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் எழுதி இருந்தனர்.
எப்போது மோடி போன்றவர்களை ஆதரித்து ஊடகங்கள் வேலை செய்ததோ அப்போதே இந்திய ஊடகத்தின் மனசாட்சி செத்து விட்டது. அதற்கு சாவு மணி அடித்தவர்களில் இந்த அர்னாப் முக்கியமானவன். மோடி ரசிகனான இவனுக்கு இப்போது நாயகன் மோடி ஆங்காங்கே அசிங்கப்படுவது இம்சையை தருகிறது. அதை திசை திருப்ப தன்னால் இயன்றதை செய்து வருகிறான்.
நாட்டில் நடக்கும் அநீதங்களை இவர் பொறுத்துக் கொள்ள மாட்டார் பொங்குவார். நீதி நியாயம் என்று நன்னூல் பேசுவார். ஆனால் காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல்களை பற்றி யாராவது பேசினால் தேசவெறி தலைக்கு ஏறி விடும். வலதுசாரி சாய்வு அதைப் பற்றி பேச விடாமல் தடுக்கும். முடக்கும். இன்னும் எப்படியெல்லாம் காஷ்மீரிகளை வதைக்கலாம் என்று வேண்டுமானால் மோடிக்கு பாடம் எடுப்பார். ஆமாம். காம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் ‘தீவிரவாதத்தை எதிர் கொள்வது’ என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து அதில் பிரித்து மேய்ந்தவராம். அதனால் தடா, பொடாவை விட இன்னும் கடுமையான சட்டங்கள் வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டவர்.
இவனை தொடர்ந்து கவனிப்பவர்களுக்கு ஒன்று தெரிந்திருக்கும். அது பா.ஜ.க ஆட்சி செய்யாத மாநிலங்கள் மேல் இவனுக்கு உள்ள ஒவ்வாமை. அதிலும் முஸ்லிம்களின் ஆதரவை பெற்ற அரசு என்றால் வெறுப்பு அதிகமாகும். அந்த வகையில் உ.பி.இல் யாதவ்களையும், பீகாரில் நிதீஷயும், தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ்.ஸையும் இவன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து சிறுமை படுத்திக் கொண்டிருக்கிறான்.
இவனை இப்போது பலரும் ‘மீடியா டெரரிஸ்ட்’ என்று அழைக்கின்றனர். அது சரிதான் என்பதில் சந்தேகமில்லை.
(தகவல்கள்- OUTLOOK)
முஹம்மது ஃபைஸ்
நன்றி :http://www.thoothuonline.com/
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment