Wednesday, March 18, 2015

ஜோசியமும் பலனும் /தாஜ்

ஜோசியமும் பலனும்
----------------------------
என் பள்ளிக்கூட நண்பன் கணேசனும்
இலக்கியம் + சினேகம் என்று
உடன்வந்த திருஞானமும்
ஊரில் பிரபலமடைந்துவிட்ட ஜோசியர்கள்.
இதில் திருஞானம்...
முக்கிய நாளிதழான 'தினமலர்' பத்திரிகையில்
ஜோதிடம் பகுதி எழுதும் கில்லாடி!.

சென்ற மாதத்தில் ஒருநாள்
கடைவீதியில்...
என்னைச் சந்தித்த திருஞானம்,
"ஏன் பாய் வாட்டமா இருக்கீங்க?" என்றான்.

"ஒன்றுமில்லை திருஞானம்,
என் திருமுகமே அப்படிதான்" என்றேன் நான்.

"எதா இருந்தாலும் கவலை படாதீங்க பாய்"

"யோவ் நான் கவலையே படுகிறவன் இல்லையா"

"அடுத்த மாசம், மொதோ வாரத்திற்கு பின்
உங்களுக்கு நல்ல காலம்தான் பாய்!"

"உனக்குதான் தெரியுமில்ல... இந்த மாதிரி
எதிலேயும் எனக்கு நம்பிக்கை வராதுன்னு"

"நீங்க வேணுமின்னா பாருங்க பாய்...
அடுத்த மாசம் உங்க ராசி எப்படி பேசப் போகுதுன்னு!!!"

"திருஞானம், நான் சொல்றது உனக்கு புரியலையா? இல்ல....
வேணுமுன்னே... காதுல வாங்கமாட்டேங்குறியா..?"

"பாராளுமன்ற தேர்தலுலே மோடித்தான்னு...
நான் சொன்னது நடந்துச்சா இல்லையா? இந்த அம்மா
ஜெயிலுக்கு போவாங்கன்னு சொன்னேனே
நடந்துச்சா இல்லையா?"

"சரிப்பா என்ன விடு... நான் மீன்கடைக்கு போகணும்"

"சரி பாய் நானும் வறேன்" என்றுவிட்டு
பைக்கோடு விரைந்து மறைந்தான்.

'மார்ச்சு பொறக்க இன்னும் பத்து நாள்தானே இருக்கு..
அவன் கணக்குப் பிரகாரம் அடுத்து ஒரு ஏழு நாள்.
நல்லது நடக்குமுன்னு நல்லச் செய்தியைத்தானே
சொல்லிப் போறான்..
பார்க்கலாமே...' என்று மனசு நினைத்தது.

மார்ச்சு பொறந்தது...
அடுத்த ஏழுநாள் என்றில்லாமல்...
ஐந்தாம் நாளே.....பலன் தெரிந்தது.
டாக்டரை தேடி போகவேண்டிய நிலை.
என்ன...
வழக்கத்தைவிட கூடுதலாக ஐயாயிரம் செலவு!



Taj Deen

No comments: