Thursday, February 12, 2015

வாழ்வு நலத்திற்கு வாழைப்பழம்!


எளிதில் கிடைக்கும் எந்த ஒன்றின் அருமையும் எளிதாய் புலப்படாது என்பார்கள். காசு பணத்திலிருந்து கீரைகள் வரை, பாச உறவுகளிலிருந்து பழங்கனிகள் வரை இந்த உண்மை அவ்வப்போது உறைக்கத் தான் செய்கிறது. அவற்றுள் ஒன்று வாழை.

வாழைப்பழம் வேண்டாத குரங்கும் உண்டோ என்று பழமொழி இருக்கிறது.  "வாழை வாழவும் வைக்கும்; தாழவும் வைக்கும்" என்பதும் ஒரு பழமொழி. அம்பணம், அரம்பை, கதலி, பனசம், மடல், கோள் என்ற பெயர்களிலும் தமிழலக்கியத்தில் வாழை வாழ்ந்து கொண்டிருக்கிறது, வாழையடி வாழையாக.

தாம்பூலப் பொருளாவதிலிருந்து  தமிழர் திருமணப் பந்தலின் முகப்புத் தூணாகி நிற்பது வரை வாழையின் பயன்கள் எண்ணில.  ஏனைய பயன்களை விடவும் சிறந்த மருத்துவப் பயன்களை எளிமையாகத் தரவல்லது வாழை என்னும் அளவில்அந்த ‘எளிய’ உண்மைகளிலிருந்து  ஒன்றை இங்கு உரைக்கப் பார்க்கிறேன்.
நாசூக்காகவும் கூர்மையாகவும் சொல்லப்படும் அங்கதக் கருத்து ஒன்றை ‘வாழைப்பழத்தில் ஊசி’ என்கிறோம். சோம்பேறிகளைச் சொல்லவும் வாழைப்பழத்தைப் பயன்படுத்துகிறோம்: ‘வாழைப்பழ சோம்பேறி’

பழமொழிகளில் பயன்படு(த்து)ம் அளவுக்கு வாழைப்பழம் உணவாக நாம் அதிகம் பயன்படுத்துகிறோமா என்று நம்மை நாமே கேட்க வேண்டிய கேள்வி.

சுவையான வாழைப்பழம் சுகாதாரத்திற்கும் பெயர் பெற்றது. எளிதில் கிடைப்பதாலோ என்னவோ, இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கு அளிக்கப்படும் மரியாதை மதிப்பில் மிகவும் இறங்குமுகமாகவே வாழைப்பழம் கருதப்படுகிறது.  ஆனால், வாழைப்பழத்தில் என்னென்ன இருக்கிறது என்று அறிய வந்தால் எவரும் மலைத்துப் போவது திண்ணம்.

உட்கொண்ட மாத்திரத்தில் நிறைவான, உடனடியான, தேவையான ஆற்றலைத் தரும் வாழைப்பழத்தில் சுக்ரோஸ், ஃப்ரக்ட்டோஸ், குளுகோஸ் ஆகிய  மூன்று இயற்கையான சர்க்கரைச் சத்துகளும் உள்ளன.

விளையாட்டு வீரர்கள், குறிப்பாக  உடற்திறன் தடகள வீரர்களின் 90 நிமிட களச் செயல்களுக்கு இரண்டே இரண்டு வாழைப்பழங்கள் தரும் ஆற்றலே போதுமானது என்று ஆய்ந்து அறிந்திருக்கிறார்கள். அவ்வளவு சக்தி அதில் இருக்கிறது. அது மட்டுமல்ல, சக்திக்கு அப்பால், பல குறைபாடுகளுக்கு மாற்றாகவும், தீர்வாகவும் வாழைப்பழம் திகழ்கிறது. ஆரோக்கியமான உடல்நிலையுடைய ஒருவர் தனது நாளாந்த உணவுப் பட்டியலில் கட்டாயம் வாழைப்பழத்தைச் சேர்த்துக் கொள்வது நலம் பயக்கும்.

மனச்சோர்வுக்கு அருமருந்து:  மனதில் மகிழ்ச்சி நிறைந்து காணப்படுவதற்கு உடலில் சுரக்கும் செரட்டோனின் என்னும் நொதியம்  காரணம் ஆகிறது. வாழைப்பழத்தில் இருக்கும் ட்ரிப்ட்டோஃபான் என்னும் புரதச் சத்து  உட்கொண்டதும் செரட்டோனின் ஆக மாற்றம் பெறுவதன் மூலம் மனச் சோர்வை அகற்றி மகிழ்ச்சியான மனநிலையை உருவாக்குகிறது.  விட்டமின் B6 குறைப்பாட்டால் அவதியுறுபவர்கள் செயற்கையான மருந்து மாத்திரைகளுக்குப் பகரமாக ஒரு வாழைப்பழம் உண்ணலாம், அதன்மூலம் இரத்தத்தில் குளூக்கோஸ் அளவு சீராகிறது என்று MIND என்கிற அமைப்பின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

அனீமியா எனப்படும் இரத்தச் சோகைக்கும் வாழைப்பழம் பெரு மருந்தாகிறது.  ஹீமோகுளோபின் எனும் இரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்திக்கு ஊக்குவிக்கும் இரும்புச் சத்து வாழைப்பழத்தில் அபரிமிதமாக உள்ளது.

பொட்டாசியச் சத்து மிகுந்தும் உப்புச் சத்து குறைந்தும் காணப்படும் வாழைப்பழம் மாரடைப்பைத் தடுப்பதிலும் பெரும்பங்காற்றுகிறது. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அண்மையில் அளித்துள்ள அனுமதியில் ‘வாழைப்பழ வணிகர்கள் இந்த உண்மையை தங்கள் வாடிக்கையாளர்களிடம் பகிரலாம்’ என்று கூறப்பட்டுள்ளது.

மூளைத்திறன்: இங்கிலாந்திலுள்ள ட்விக்கன்ஹாம் என்னும் பள்ளிக்கூடம் தமது மாணவர்கள் 200 பேருக்கு வாழைப்பழ உணவுகளை காலையிலும் பகலிலும் அளித்து ஆய்ந்து கூர்ந்து பார்த்தபோது, அந்த மாணவர்கள் நல்ல கூர்மையான அறிவுத்திறனில் மிகுந்து சிறந்தனர் என்று தெரிவித்துள்ளது.

நார்ச்சத்து மிகுந்துள்ளதால் வாழைப்பழம் மலச்சிக்கலுக்குத் தீர்வாகவும் நல்ல மலமிளக்கியாகவும் செயற்படுவது நாமறிந்ததே. மட்டுமின்றி கொசுக்கடி போன்ற பூச்சிக் கடிகளுக்கு வாழைத் தோலை வைத்து தேய்த்தால் வீக்கம் சரியாவதும் குறிப்பிடத் தக்கது.

மேலும், நெஞ்செரிச்சல் எனப்படும் அமிலத் தன்மை கூடிய நிலைக்கும் வாழைப்பழம் சிறந்த மாற்று மருந்து. மருத்துவரை நாடாமல், மருந்தைத் தேடாமல், நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் ஒரு வாழைப்பழம் உண்டுப் பார்த்தால் போதும்.  அத்துடன், குடலின் சமநிலைத் தன்மை பாதிக்கப்படுகையில் அல்சர் எனப்படும் குடற்புண் உருவாகாமல் தடுக்க வாழைப்பழத்தை நம் உணவுகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆய்வறிஞர்கள் வலியுறுத்துகிறார்கள். நமது நரம்பு மண்டலத்திற்கும் வாழைப்பழத்தின் மென்மையும் குளிர்ச்சியும் ஏற்புடையதாக இருக்கிறதாம்.

கர்ப்பவதிகளின் உடலியல், உணர்வியல் வெப்பநிலைகளை சீராக வைத்திருக்கவும் உதவும் வாழைப்பழத்தை தாய்லாந்து நாட்டு கர்ப்பிணிகள் தவறாது உண்டு வருவதும் இங்கு அளிக்கப்படவேண்டிய செய்தி.

ஆப்பிளைப் போல நான்கு மடங்கு புரதமும், இருமடங்கு கார்போஹைட்ரேட் (மாவுச் சத்து)ம், மும்மடங்கு பாஸ்பரஸ், ஐந்து மடங்கு விட்டமின் A, இரும்புச் சத்தும், இருமடங்கு கனிமச் சத்துகளும் நிறைந்திருக்கும் வாழைப்பழத்தை வைத்து பழமொழியை இனியேனும் மாற்றுவோம்:

A Banana a day, Keeps the doctor away.
- இ.ஹ
 நன்றி
Source: http://inneram.com/

No comments: