மாய வாசிப்பின் இசை நாண்களில் சிக்காததோர்
ஒலி செய்யும் அந்தச் சின்னஞ்சிறு
பறவைகளின் கூட்டம் எங்கே?
சலசலப்புகளுக்கெல்லாம் எழுந்து வானில் கோலமிட்டமரும்
அந்தச் சிட்டுகளின் கூட்டமெங்கே?
அவைகளின் கிசுகிசுக்கும் ரீங்காரப் பண்னெங்கே?
மனத்தைக் கட்டி இழுக்கும் காட்டுப் பூக்களின் வாசனையும்,
வண்ணத்திலொரு நிறம் காட்டியப் பூக்களும்தான் எங்கே?
கோணல் மனம் கொண்ட எந்தவொரு மிருகமும் கூட
இப்படியொரு அழிப்புக்கு உடன்படா!
இப் பாதகங்களுக்கெல்லாம் மனிதன்தான் துணிவான்!
அவனின் கைகளுக்குத்தான் இது சாத்தியம்.
உயிர்களை இப்படி திருகிப் போட அவனுக்குத்தான் கூசாது!
நிர்மூலமான என் சமஸ்தானத்திற்காகவும்,
அங்கே துண்டாடிக் கிடக்கும் மரங்களுக்காகவும்
என் மனம் மௌன அஞ்சலி கொண்டது.
திரும்ப நினைத்தேன்.
அந்த மண்ணைவிட்டு அகல மனமில்லாமல்
கால்கள் தயக்கம் காட்டியது.
சிகரெட்டை பற்ற வைத்தப்படி,
ஸ்தலத்தில் ஆங்காங்கே
கோடாரி, வெட்டரிவாளோடு திரியும்
மனிதர்களை வெறுப்புடன் பார்த்து நின்றேன்.
*
என் சிறுகதை ஒன்றிலிருந்து சிறு கீற்று.
மழைக்காலத்து ஈரம் - சிறுகதை
- தாஜ் Taj Deen
No comments:
Post a Comment