பூவுக்குள் கவியொன்றே புதைந்தி ருக்கும்
...புன்னகையின் சாந்தத்தைப் போர்த்தி ருக்கும்
நாவுக்கும் தெரியாத நாதத் தென்றல்
...நறுமுகையாய் சிறுவிதையாய் ஒளிந்தி ருக்கும்.
பாவொன்று படம்பிடித்து எழுத வந்த
...பாவலனென் கவிதையிலே இடம்பி டிக்கும்
தாவென்று கேட்போர்க்கு தந்து நிற்கும்
...தனிச்சிரிப்பின் நற்சிறப்பை பூவில் கற்போம்!
வான்சிந்தும் மழைத்துளியில் உழவர் இன்பம்
...வைத்திருக்கும் இறையோனே பூவைத் தந்தான்
தேன்சிந்தும் பூமலரும் காதல் சொல்லும்
...துணைசேரும் உலகத்தில் உயிர்கள் பூக்கும்
தானேந்தும் புன்சிரிப்பைத் தொற்ற வைக்கும்
...தன்மகிழ்வை பிறமுகத்தில் பற்றச் செய்யும்
ஏனென்று கேளாமல் எங்கும் பூக்கும்
...எல்லாமே சமமென்று எடுத்துச் சொல்லும்
