பொதுவாகவே ஷாப்பிங் மோகம் குறைந்து போய்விட்டதால் மால்கள் என் கவனத்தை ஈர்ப்பதில்லை.
வாங்கியே தீரவேண்டும் என்ற பொருள்களுக்காக, தேர்வுக்குத் தயாராவதைப் போல் வீட்டில் ஹோம்வொர்க் செய்து விட்டு தேவைகளின் பட்டியலையும், நுழைய வேண்டிய கடைகளின் பெயர்களையும் மனப்பாடம் செய்து விட்டுப் போனால்கூட, திட மனத்தையும் நொடி நேரத்தில் திசை திருப்பி விடுகிறார்கள் மார்க்கெட்டிங் மேதைகள். அவசியமே
இல்லாத விஷயங்கள் கண்ணில் பட்டு, கவனத்தை ஈர்த்து, சிந்தைக்குள் போதையைத் தூவி, வீட்டிற்கு வந்து சேர்ந்தால் பட்டியலில் இல்லாத பொருள்கள் பாதியளவாவது பைகளில். போதை தெளியும்போது மனத்தில் ஆயாசம்.
இதைவிட, “கூட மாட ஒத்தாசைக்கு வந்து வாங்கிக் கொடுத்தால் என்ன? வீட்டில உட்கார்ந்து அதைவிட பெருசா என்னத்தச் சாதிக்கப் போறீங்க?” என்று வந்து விழும் செல்ல வசவுகளை ஏற்றுக் கொள்வது தேவலையாக இருக்கிறது. சில சமயம் மனம் குறுக்குக் கேள்வி கேட்டு நேர்மையைச் சோதிக்கும். “யூ ஹேட் ஷாப்பிங்? உனக்கு வயசாயிடுச்சோ?”
