கலைஞரோடு சில மணித்துளிகள்
by நாகூர் ரூமி
சில நாட்களுக்கு முன்பு கவிஞர் இளையபாரதி அலைபேசினார். கலைஞருக்கு வயது 90 ஆகிறது. அதன் பொருட்டு ஒரு நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. தொன்னூறு கவிஞர்களை அவர் சந்திக்க இருக்கிறார். அந்த 90-ல் ஒருவராக நீங்கள் வரச்சம்மதமா என்று கேட்டார். என்றாகிலும் ஒருநாள் கலைஞரைச் சந்திக்கவேண்டும் என்று நான் நினைத்துக்கொண்டுதான் இருந்தேன். அந்த வாய்ப்பை இறைவன் கொடுத்துவிட்டதாக நினைத்தேன். நிச்சயம் வருகிறேன் என்று சொன்னேன்.
பிறகு கொஞ்ச நேரம் கழித்தோ அல்லது மறுநாளோ கவிஞர் வைரமுத்துவிடமிருந்து அலைபேசி வந்தது. அவர்தான் இந்நிகழ்ச்சியை ஏற்பாட்டு செய்வதாகவும், நான் வரமுடியுமா, என் உடல்நிலை ஒத்துக்கொள்ளுமா என்றும் கேட்டார். இதயநாள அடைப்புக்காக நான் பாரதிராஜா சிறப்புமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது (என் தம்பி காதர் மூலமாக செய்தியறிந்து) அந்த மருத்துவமனையின் எம்.டி.க்கு அலைபேசி என்னை சிறப்பாக கவனித்துக்கொள்ளச் சொன்னவர் அவர். அவரிடமும் நாம் நிச்சயம் வருகிறேன் என்று சொன்னேன்.