லைலாவை எல்லோரும் காதலிக்கலாம்;
லைலா என்னைக் காதலிக்கிறாள்.
#ரமலான்_பிறை_1
என்னுள் புதைந்திருக்கும் பொக்கிஷம் நீ
உன்னால் பகிரங்கமான ரகசியம் நான்
#ரமலான்_பிறை2
நானெனப்படுவது நிழலின் கனவு
நீயாக நிலைத்திருப்பதே நிஜத்தின் செறிவு
#ரமழான்_பிறை3
நிஜமும் நிழலுமாய் இரண்டு கண்டேன்
நிஜம் அகன்றபின் ஒன்றையும் காணேன்
இருமை என்பது தோற்றப்பிழை
உள்ளது ஒன்றே பிரபஞ்ச நிஜம்
#ரமழான்_பிறை_4
நீரைப்போல நிறைந்திருக்கிறாய் நீ
காற்றைப்போலக் கலந்திருக்கிறாய் நீ
#ரமழான்_பிறை5
நிராமயமாய் நின்றிலங்கும் புராதனப் புதுமை நீ
நின்கருணை வேண்டி நிற்கும் நிறையிலி பதுமை நான்
#ரமழான்_பிறை_6
பசித்த காற்று மோதி அலையும் காலி வயிற்றைக்
காணிக்கை வைத்தேனென் கத்தனே ரஹ்மானே
#ரமழான்_பிறை_7
வெளிப்பட்ட அழகெல்லாம் உனதென்று உணர்ந்தேன்
புகழப்பட்ட புகழெலாம் உனக்கென்று தெரிந்தேன்
#ரமழான்_பிறை_8
சர்வ கோலங்களாய் வெளியான மெய்க்கோலமும் நீயே
சகல குணங்களாய் வெளியான சற்குணமும் நீயே
#ரமழான்_பிறை_9
வயிற்றின் பேச்சு ஆன்மாவுக்குப் புரியும்போது
உலர்ந்த நாவில் ருசிக்கிறது நோன்பின் சுவை
#ரமழான்_பிறை_10
தாய் அமுதூட்டுவதுபோல
நோன்பு அருளூட்டுகிறது
நான் பசியுடன் இல்லை
நோன்புடன் இருக்கிறேன்
#ரமழான்_பிறை_11
நிஷா மன்சூர்
No comments:
Post a Comment