Tuesday, June 25, 2019

கேட்டாரே ஒரு கேள்வி!

by Vavar F Habibullah

ஊரறிந்த ஞானியும்
இறை அறிந்த மெஞ்ஞானியும்
நேருக்கு நேர் எதிர்பாராத
விதமாக வழியில் சந்தித்து
கொண்டனர்.

‘எங்கய்யா வேகமாக போகிறீர்!’
ஞானி சற்று இடக்காகவே தான்
கேள்வி கேட்டார்.
“காற்று, என்னை எந்த இடம்
வரை இழுத்து செல்லுமோ
அந்த இடம் வரை போவேன்”


அமைதியாக பதிலுரைத்த
மெஞ்ஞானி அங்கிருந்து
அகன்றார்.

சற்றும் எதிர்பாராத இந்த
பதிலால் துணுக்குற்ற
ஞானியின் மனதில்
உடனடியாக வேறு கேள்விகள்
எதுவும் எழவில்லை.
சே...என்ன தடுமாற்றம் இது..
ஞானி, தன்னையே மிகவும்
குறைபட்டுக் கொண்டார்.
காற்றே வீசவில்லை....
நீ எப்படிய்யா போவாய்!
என்று கேட்டு அவரை மடக்கி
இருக்கலாமே! சரி நாளை
கவனித்துக் கொள்ளலாம்
என்று தன்னை சமாதானம்
செய்து கொண்டார்.

அடுத்த நாள்,
அதிகாலையில் எழுந்து
மெஞ்ஞானி வரும் சாலை
அருகில் நின்று அவர்
வருவதை எதிர் நோக்கி
காத்திருந்தார் ஞானி.
மெஞ்ஞானி அந்த வழியாக
மெதுவாக வந்து கொண்டிருந்தார்.
தன்னை தயார் படுத்தி கொண்ட ஞானி,மெஞ்ஞானி அருகில்
சென்று அதே கேள்வியை
மீண்டும் கேட்டார்....
‘காற்றையே இன்னைக்கு
சுத்தமா காணோம் ...
இப்போ சொல்லும் ஓய்!
எங்கய்யா போகிறீர்!!’

“என் கால்கள் எதுவரை
என்னை இட்டுச் செல்லுமோ
அதுவரை போவேன்”

சற்றும் எதிர்பாராத
மெஞ்ஞானியின் இந்த
பதிலால் அவமானமுற்ற
ஞானிக்கு உடலெல்லாம்
வேர்த்து விறுவிறுத்தது.
யாராவது இதை கவனித்து
இருப்பார்களோ என்று
ஐயமுற்ற ஞானி, சுற்று முற்றும்
பார்த்து தன் சந்தேகத்தை
போக்கிக் கொண்டார்.

சே! என்ன அவமானம் இது
எவ்வளவு திமிரான பதில்..!
வாயை அடைக்கிற மாதிரி..!
கால் இல்லாட்டி எப்படி
போவாய் என்றாவது கேட்டு
அவர் வாயை அடைத்திருக்கலாம்.
இதை இப்போ நினச்சு என்ன பயன்!
இரண்டு தடவை இப்படி
அவமானம் படறதுக்கு பேர்
தான் ஞானியா!தாழ்வு
மனப்பான்மை ஞானியை
அழ வைத்தது.

வீட்டுக்கு வந்த ஞானி
பல புத்தகங்களை புரட்டி
பார்த்தார்.பல குறிப்புகளை
தயார் படுத்தி கொண்டார்.
தன் நண்பர்கள் பலருடன்
இது பற்றி கலந்துரையாடி
அவர்களையும் துணைக்கு
அழைத்து கொண்டார்.

ஒரு நாள் காலைப் பொழுதில்,
அறிவு ஜீவிகள் புடைசூழ
தன் பரிவாரத்துடன், இரண்டில்
ஒன்று பார்த்து விடுவது என்ற
முடிவில் மெஞ்ஞானியின்
வருகையை எதிர் நோக்கி
காத்திருந்தார் ஞானி.

எப்போதும் போல்
மெஞ்ஞானி மெதுவாக நடந்து
வந்து கொண்டிருந்தார்.
சாலையில் ஞானியுடன் பலர்
நிற்பதை கவனித்த மெஞ்ஞானி
மரியாதை நிமித்தம், சற்று நின்றார்.
‘நில்லும்...ஓய்..இப்ப சொல்லும்..
இன்னைக்கு எங்கய்யா போகிறீர்!’
ஞானி சற்று இளக்காரமாகவே
கேட்டார்.

“சந்தைக்கு போய் கொஞ்சம்
காய்கறி வாங்க போகிறேன்.”
மெஞ்ஞானி, மிகவும் நிதானமாக
சொன்னார்.

மெஞ்ஞான பட்டறைகளில்
அறிவை பட்டை தீட்ட முடியாது.
பொருள் பொதிந்த பதில்களின்
தரத்தையும் வேடிக்கை
கேள்விகளால் தர நிர்ணயம்
செய்திட இயலாது

Vavar F Habibullah

No comments: