-Rafeeq Friend புதுசுரபி
அண்மையில் ஒரு இணையதளம் வழியாக அமெரிக்கப் பேச்சாளர் ஒருவரின் உரையினைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அவர் பேச்சு மிக சுவாரஸ்யமாய் இருந்தது. ”நீங்கள் எதில் நிபுணத்துவம் அடைய நினைக்கிறீர்களோ, புதியதாய் கற்க நினைக்கிறீர்களோ வெறும் முப்பது நாள் போதும். நீங்கள் உங்கள் விருப்பப்படி மாறிவிடுவீர்கள், நான் உத்தரவாதம். நான் கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் கணினிப் பொறியியல் நிபுணர், ஆனால் நான் இப்போது 50,000 சொற்களைக் கொண்ட ஒரு நாவலின் நாவலாசிரியர். நாளொன்றுக்கு 1667 சொற்கள் மூலம் வெறும் முப்பது நாளில் நடந்த அதிசயம்” என்றும். இதை அவர் மாபெரும் அமெரிக்க தத்துவ ஞானி, மோர்கன் ஸ்பர்லோக்கை பின்பற்றி வெற்றி பெற்றதாயும் மேற்கோளிட்டார்.
”ஒரே நாளில் சில மாற்றங்களைக் கொண்டுவருகிறேன் என்று சிலர் மாறிவிட்டு பிறகு சிலநாட்களுக்குள் பழைய நிலைக்குத் திரும்பிவிடுகின்றனர். அதேவேளையில் மாற்றத்தினை சிறிது சிறிதாக தொடந்து 30 நாட்கள் முயற்சித்தால் 31ம் நாள் அந்த முயற்சி, அது தவிர்க்க வேண்டிய ஒரு கெட்ட பழக்கமோ அல்லது புதிதாய் பழகிக்கொள்ள வேண்டிய ஒரு நல்ல பழக்கமோ அதில் வெற்றி கண்டிருப்பீர்கள்” என்றும் 30 நாள் இரகசியத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தார்.
எனக்கென்னவோ, அவர் சொன்ன தத்துவஞானியின் வார்த்தைகள் ஆச்சர்யம் தரவில்லை. மாறாக, உடனே அல்குர்ஆனை எடுத்து புரட்டினேன்.
ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்;. ....., உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்). (அல்குர்ஆன் 2: 185)
கண்ணில் பளிச்ச்சிட்ட மேற்கண்ட இறைவசனத்தின் மூலம், இறைவன் தேர்ந்தெடுத்துள்ள கால அளவு (மாதம்), அதற்கான காரணம், அதனால் நாம் பெறப்போகும் பயன், அந்தப் பயனை நாம் சிந்தாமல் சிதறாமல் பெறுவதற்காக நம் உடலையும் மனதையும் கட்டாய நோன்பைக் கொண்டு பக்குவப்படுத்தும் அற்புதமான நேர்த்தி, அப்பப்பா... அனைத்தும் எவ்வளவு தெளிவான, துல்லியமான ஏற்பாடு. ஆனால் ஏனோ நாம் அந்த 30 நாட்களின் பயனறியாது வீணடிக்கிறோமே என எண்ணினேன். அதனால்தான் இறைவன் அதே காலத்தின் மீதே சத்தியமிட்டு மனிதன் நஷ்டவாளி என்கிறானோ? சுருக்கென்றது.
பொதுவாக ரமளான் என்றாலே நமெக்கெல்லாம் நோன்பு, நோன்புக்கஞ்சி, இஃப்தார், தராவீஹ் பயான், சஹர் உணவு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இதையெல்லாம் விட பிரியாணி, புதுதுணிமணிகள் இதுபோன்ற விஷயங்களே சட்டென நினைவுக்கு வரும்.
நோன்பு என்பது மனிதன் தோன்றிய காலந்தொட்டு பின்பற்றிய பழக்கமாய் இருந்திருக்க வேண்டும். அழகிய இறைவசனம் இவ்வாறு சொல்கிறது.
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (அல்குர்ஆன் 2:183)
அந்த முக்கிய கடமை ரமளானில் விதித்திருப்பதோ நம்மின் நற்பேறு. ரமளான் என்ற அரபிச்சொல்லுக்கு ‘சுட்டெரித்தல்’,’பொசுக்கிவிடுதல்’ என்று பொருளறியப்படுகிறது. நம்மிடையே உள்ள தீயவை களைய, நன்மைகள் பல நாளெல்லாம் நம்மோடு இணைய கவசமாகிய நோன்பு பெற்ற ரமளான் மாதம் அழகிய பயிற்சிக்களம்.
பொதுவாக பயிற்சிக்களம் என்பது நிஜக்களத்தினை விட முற்றிலும் எதிரானதாய் இருக்கும். இலகுவானதாய் இருக்கும். பயிற்சி மட்டுமே கடுமையானதாய் இருக்கும். எதிரிகளின் ஆயுதங்கள் நிறைந்த போர்க்களத்தில் சண்டையிடும் வீரர்களுக்கு பயிற்சி மைதானத்தில், நெரிசல் மிகுந்த சாலையில் வாகனம் செலுத்தவோருக்குப் பயிற்சியோ சாலையில் நெரிசலில்லாத நேரத்தில் தான்.
தீமைகளை எதிர்த்துப்போராடி துய வாழ்விற்கு வழிவகுக்கும் ரமளானின் களம் எப்படி இருக்கும்? நம்பெருமானார் (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள்:
ரமளான் மாதம் வந்துவிட்டால் சுவனத்தின் கதவுகள் திறக்கப்படும். நரகத்தின் கதவுகள் மூடப்படும், ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படும். (ஆதாரம்: புஹாரி)
ரமளான் மாதத்தின் முதல் இரவிலேயே ஷைத்தான்களுக்கும் கெட்ட ஜின்களுக்கும் விலங்கிடப்படும். நரகத்தின் கதவுகள் மூடப்படும். அதில் ஒரு கதவும் திறந்திருக்காது. சுவர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படும், அதில் ஒரு கதவும் மூடப்பட்டிருக்காது. இன்னும் ஒரு இறை அழைப்பாளர் ”நன்மை செய்பவர்களே! முன் வாருங்கள், பாவம் செய்பவர்களே! நிறுத்திக் கொள்ளுங்கள்!” என்று உரக்கச் சொல்வார் (ஆதாரம்: திர்மிதி, இப்னுமாஜா)
என்ன ஒரு அற்புதமான ஏற்பாடு, நன்மை தரும் செயல்களிலிருந்து நம்மைத் தடுக்கும் ஷைத்தான்களுக்கு விலங்கிட்டு சிறைவைத்தபின் நன்மை செய்வதிலிருந்து நம்மைத் தடுக்கப்போவது எது? நம்மைப் படைத்தவனை நினைவுகூறுவதைத் தவிர வேறேதும் சிந்தனையில் வந்துவிடுமா என்ன?
எந்த இடையூறுகளுமில்லாத இந்தப் பயிற்சிக்காலத்தில் நம்மை நாமே தூய்மைப்படுத்திக் கொள்ளவே கேடயமாக நோன்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த்க் கேடயத்தின் உதவியோடு நம்மிலிருக்கும் தீயப்பழக்கங்களை சுட்டெரிக்கவேண்டும். பொய்பேசும் பழக்கமுடையவராய் இருந்திருந்தால் இந்த ரமளானில் பெறும் பயிற்சியுடன் இனி வாழ்நாள் முழுவதும் பொய் பேசமாட்டேன் என்று உறுதியேற்க வேண்டும். புறம் பேசும் பழக்கம் நம்மிடையே இருந்திருந்தால் இந்த ரமளானில் பெறும் பயிற்சியிலிருந்து அத்தீயப்பழக்கத்தினை அழிக்க உறுதியேற்க வேண்டும்.
”யார் கெட்ட பேச்சுக்களையும், கெட்ட செயல்களையும் விட்டு விடவில்லையோ அவர் உணவை விடுவதிலும், குடிப்பை விடுவதிலும் அல்லாஹ்விற்கு எந்தத் தேவையும் இல்லை என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (ஆதாரம் புஹாரி)
ஆனால் நம்மில் அனேகர், அந்த 30 நாட்களில் மட்டும் தொழுவதும், குர்ஆன் படிப்பதும், தான தர்மங்கள் புரிவதும், தீயசெயல்களில் ஈடுபடுவதிலிருந்து விலகியிருத்தல் என்றும் இருக்கிறோம், இறைவன் சொல்லியிருப்பது போல துய்மையடைகிறோம். கடுமையான பயிற்சியின் விளைவாய் அடைந்திருக்கும் தூய்மை நிலையினை, புடம்போட்ட தங்கமாய் மாறியிருப்பதனைக் கொண்டு எஞ்சிய மாதங்களை இறையச்சத்தோடு கடத்துவதறியாது, முப்பத்தியொன்றாம் நாள் பழைய நிலைக்குத் திரும்பிவிடுகிறோம். எத்தனை ரமளானைக் கடந்திருப்போம். ஒவ்வொரு ஆண்டும் புதிய பயணத்தினை ஆரம்பித்து பிறகு அதே இடத்திற்கே திரும்பி வந்து விடுகிறோம். நம்முடைய காலத்தினை நாமே வீணடிப்பதை அறியாமலிருக்கிறோமே? இரு உலகிற்கும் தேவையான நம் முதலீட்டினைப் பெருக்காமல் நஷ்டமடைந்திருக்கிறோமே?
உயர்தர பயிற்சியின் மூலம் உரிய இலக்கினைத் தொடத் தவறவிட்டு, நன்றிகொன்றோராய் இருப்பதற்கு மாறாக நம்மீது கருணை கொண்ட கருணைமிகு வல்லோனின் கரிசனத்ததைப் போற்றி திங்கள்தோறும் புது இலக்குகளை அடைந்து தூயோராய், நன்றி கொண்டோராய் வாழ்வோம்.
நிஷா மன்சூர்
-Rafeeq Friend நிஷா மன்சூர்
No comments:
Post a Comment