இலக்கிய செயல்பாடுகளுக்கும், அதன் தொடர்ச்சியான வரலாற்றிற்கும் பெயர்போன எகிப்தில் பல அற்புதமான பெண் கவிஞர்கள் உருவாகி இருக்கிறார்கள்.அரபுக்கவிதையின் வலிமைமிக்க மொழியை, அதன் சூட்சுமத்தை, நெகிழ்வின் சலனத்தை உள்வாங்கி பல கவிதைகள் வெளிவந்திருக்கின்றன. அவற்றில் இமான் மெர்ஷலில் கவிதைகளும் முக்கிய இடத்தை பிரதிபலிக்கின்றன. அந்த பிரதிபலிப்பு இலக்கிய வானில் பட்டுத்தெறிக்கிறது. வாழ்வின் உன்னதங்களை, மகோன்னதங்களை பேசுபவை இமான் மெர்ஷலின் கவிதைகள்.
பாரம்பரிய நதியான நைலின் டெல்டா பகுதியில் மித் அத்லா என்ற கிராமத்தில் வைதீக கிறிஸ்தவ குடும்பத்தில் 1966 ல் பிறந்தார் மெர்ஷல். மேலும் அரபு இலக்கியத்தில் பட்டப்படிப்பை முடித்த மெர்ஷல் 1988 ல் கெய்ரோவிற்கு சென்றார். அந்த தருணத்தில் நவீன அரபுகவிதை குறித்து கெய்ரோ பல்கலைகழகத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். இதன் தொடர்ச்சியில் 1999 ல் கனடாவிற்கு புலம்பெயர்ந்த அவர் அங்குள்ள அல்பர்டா பல்கலைகழகத்தில் அரபு பேராசிரியராக வேலைக்கு சேர்ந்தார். தற்போது அதை தொடர்ந்து வருகிறார்.