Showing posts with label தேவ்பந்த் மதரஸா. Show all posts
Showing posts with label தேவ்பந்த் மதரஸா. Show all posts

Wednesday, November 20, 2013

இஸ்மாயிலை, இஸ்மாயில் நாஜி ஆக்கிய நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா

என் மீது அன்புக்கொண்டவர்கள் 'நாஜி' என்றால் என்ன நீங்கள் வாங்கிய பட்டமா! என்று கேட்கின்றனர்.

'நாஜி' என்பது என்னுடைய புனைப் பெயர்.

என்னுடைய தந்தை முஹம்மது யாக்கூப் வாத்தியார்(எங்கள் ஊர் மக்கள் அவ்வாறு தான் அழைப்பார்கள்).அவர் ஒரு கவிஞர்.ஆனந்த விகடன் என்ற இதழ் வெளியாவதற்கு முன்னால் ஆனந்த போதினி என்ற இதழ் வந்துக் கொண்டிருந்தது. அதிலே தன்னுடைய 17ஆவது வயதிலிருந்தே கவிதை எழுதி வந்தார்.எனவே, எனக்கும் சிறு வயதிலிருந்தே கவிதையின் மீது ஆர்வம் இருந்தது.குறிப்பாக, கண்ணதாசன் கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

  1960ஆம் ஆண்டு ஈ.வே.கி.சம்பத் தி.மு.க.வை விட்டு வெளியேறிய பொழுது கவிஞர் கண்ணதாசனும் அவருடன் இணைந்து தமிழ் தேசியக் கட்சி என்று ஒரு அமைப்பை உருவாக்கினார்கள். அந்த அமைப்பில் என்னுடைய உறவினர் ஒருவர் முக்கிய பொறுப்பில் இருந்தார். அந்த கட்சியின் மாநாடு நடக்கும் இடமெல்லாம் என்னை அவர் அழைத்து செல்வார்.கண்ணதாசன் இருக்கும் அறைக்கு சென்று அவரது அருகில் நின்று அவரது நகைச்சுவை மிக்க பேச்சை நான் ரசித்துக் கொண்டிருப்பேன்.அப்பொழுது எனக்கு வயது 13.கோவையில் நடைப் பெற்ற மாநாட்டின் போது மதியம் 3 மணிக்கு கவிஞரின் தலைமையில் கவியரங்கம்.மதிய உணவிற்கு பின்னால் கவிஞர் மாநாட்டு பந்தலின் வாசலில் நின்று பேசிக் கொண்டிருந்தார்.அங்கு வந்த சம்பத் அவர்கள் என்ன கவிஞரே! நேரம் ஆகிவிட்டதே. கவியரங்கத்திற்கு தயார் ஆகவில்லையா? என்று கேட்டார்.இதோ தயார் ஆகிவிட்டேன் என்று மேடைக்கு சென்றார்.அங்கே அமர்ந்துக் கொண்டு பேப்பரில் கவிதை எழுத ஆரம்பித்தார்.அந்தக் கவிதையின் முதல் வரி “கன்னியரின் இதழ் இரண்டை கோவை என்பார்” என தொடங்கி கோவை மாவட்டத்தின் மக்களை கவிதையிலே புகழ்ந்து தள்ளினார். அப்பொழுதிலிருந்து எனக்கும் கவிதை எழுத வேண்டுமென்று ஆசை வந்தது.