கிராமத்தின் நதிக் கரைகளில் ஓடிவிளையாடிய கோடி வர்ண வானவில் அவள். ஏழ்மையின் தாழ்வாரங்களில் பிறந்தாலும், ஒரு மச்ச அழுக்கும் தொற்றிப் பிறக்காத பேரழகுப் பெட்டகம். அவளின் ஓடிய கால்களை நிறுத்தி ஆடிய கரங்களைப் பற்றி இழுத்துவந்து மணமேடையில் ஒரு குங்குமப் பொட்டாய்க் குந்த வைத்தார்கள் அவளின் பெற்றோர்கள்.
முப்பதே நாட்கள், முத்தமும் மூச்சுக்காற்றுமாய் இருந்துவிட்டு காசுதேடி கண்ணீரோடு கடல் கடந்தான் அவன். மாதம் ஒன்றுதான் ஆனது என்றாலும், அந்தக் கற்பூரக் காதலுறவு அவளுக்குள் ஒரு புத்துயிருக்கு முன்னுரை எழுதி விட்டது.
திரைகடலோடியும் திரவியம் தேடு என்ற அறிவுரைக்குப் பின் எத்தனையெத்தனை சோகங்கள் கிடக்கின்றன என்பது அனுபவிப்பவர்களுக்குத்தான் தெரியும். அதில் ஒரு சிறு பகுதிதான் இந்தக் கவிதை, அந்தச் சூல்முகில் எழுதும் மடலாக கிராமத்து மொழியிலேயேமலர்கிறது.