நம் சமூகத்தில் எழுதப் படாத சட்டங்கள் நிறைய இருக்கின்றன. அறிவுக்குப் பொருந்தாத பல விஷயங்கள் – “இது இப்படித் தான்! எல்லோரும் இப்படித் தான் செய்கிறார்கள், நாமும் அப்படித் தான் செய்திட வேண்டும்” என்று மக்கள் அவைகளைக் கண்ணை மூடிக் கொண்டு காலா காலமாக பின் பற்றி வருகின்றனர். அவை சரி தானா, அவைகளை இன்னும் விடாப் பிடியாக பிடித்துக் கொண்டிருக்கத் தான் வேண்டுமா
நான் சொல்ல வருவது மார்க்கம் சம்பந்தப் பட்ட – ஷிர்க் மற்றும் பித்அத் – போன்ற விஷயங்களைப் பற்றி அல்ல! அவை குறித்து நிறைய பேசப் பட்டு வருகின்றன. எழுதப் பட்டும் விவாதிக்கப் பட்டும் வருகின்றன.
இங்கே நாம் விவாதிக்க விருப்பது குடும்பம் சார்ந்த விஷயங்கள் குறித்துத் தான். இது குறித்து பல விஷயங்களை நாம் ஆழமாக விவாதிக்க வேண்டியுள்ளது. ஒவ்வொன்றாக அவைகளை அலசுவோம் இங்கே.
சான்றாக – நமது இளைஞன் ஒருவனை எடுத்துக் கொள்வோம். அவன் படிக்கிறான். படித்து முடிக்கிறான். வேலைக்குச் செல்கிறான். சம்பாதிக்கின்றான். சரி! அவன் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகின்றான்? “அன்புத் தம்பி! எப்போது உன் கல்யாணம்?” என்று கேட்டால் என்ன பதில் அவனிடமிருந்து வருகிறது?
