மு.ஹாஜரா, இரண்டும் ஆண்டு ஆங்கிலம் இலக்கியம்
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி
20-11-2012 இன்று என் அத்தாவுடன் சேர்த்து, என் சந்தோஷங்களையும் அடக்கிய நாள்.
அத்தா! உங்கள் அழகு முகத்தைப் பார்த்த இறுதி நாள். நான் உங்களிடம் மனம்விட்டு பேசி. அதை நீங்கள் கவனிக்காமல் படுத்திருந்த முதல் நாள்!
என்னை முதன் முதலாக பள்ளியில் சேர்க்கும்போது, ஆசிரியரிடம் "என் மகளை அடித்துவிடாதீர்கள் !" என்று பாவமாகக் கேட்ட உங்கள் முகம் இன்னும் என் ஞாபகத்தில்! இந்த வயதிலும் என்னை சிறு பிள்ளையாக நினைத்து கொஞ்சுவீகள்.பத்து வயது வரை என்னைத் தூக்கிக் கொண்டே பள்ளிக்கூடம் போவீர்கள். அம்மா என்னைக் கடிந்து பேசும் போதெல்லாம் எனக்காகப் பரிந்து பேச வருவீர்கள், எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து என்னைத் திட்டியதோ அடித்ததோ இல்லை நீங்கள்!
பழங்களை உரித்து வாயில் ஊட்டிவிடுவீர்கள். சின்ன சிரமங்களைக் கூட எனக்குக் கொடுக்காமல் இருந்துவிட்டீர்கள். பதினெட்டு வருடம் கழித்துப் பெற்றது. இந்த தவிப்புகளை எல்லாம் எதிர் கொள்ளத்தானா அத்தா? எல்லோரும் சொல்வார்கள், நான் குழந்தையாக இருந்த பொது, என்னிடம் கேட்பீர்களாம், "எப்போது என்னை அத்தா என்று கூப்பிடுவாய் ?" என்று! இப்போது 'அத்தா அத்தா ' எனக் கதறுகிறேன் , என் கதறல்களைக் கேட்க முடியாத தூரத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை மறந்து!
சிறு வயதில்என்னைத் தூக்கிக் கொண்டு நிலா காட்டுவீர்கள். நிலா கடித்து விடும் எனப் பயந்து , உங்கள் தோளில் சாய்ந்து கொள்வேன் . அப்போதே எனக்குத் தெரிந்திருக்கிறது. எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் உறுதுணையாக உங்கள் தோள் இருக்கிறது என்று, என் வாழ்நாளில்,எதற்கும் நீங்கள் வருத்தப்பட்டோ , சோர்ந்திருந்தோ பார்த்ததில்லை. எத்தனை தொல்லைகள் வந்தாலும் , எப்பொழுதும் உங்களுக்கே உரித்தான குறும்புப் பேச்சுடன் அமைதியாக சிரித்துக் கொண்டிருப்பீர்கள்.
ஒரு நாள் இரவு கொசுக்கடியால் அவதிப்பட்டேன் . நடு இரவு என்றும் பாராமல் உங்கள் மகளுக்காக எழுந்துவந்து , போர்வை போர்த்திவிட்டீர்கள். தூங்கிக் கொண்டிருப்பது போல் நடித்துக் கொண்டு உள்ளுக்குள் எவ்வளவு பூரித்தேன் என்று தெரியுமா அத்தா? பலமுறை என்னிடம் கேட்டுள்ளீர்கள். வயதான காலங்களில் எங்களைக் கவணிப்பாயா ? என்று! நான் நக்கலாகச் சிரித்துவிட்டு, மனதிற்குள் நினைப்பேன். சொல்லில் காட்டாமல் செயலில் காட்டவேண்டும் என்று! நான் சம்பாதித்து உங்களை ராஜாவாக வாழ வைக்க வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் என் ஆசைகளை சொல்லாமல் கூட விட்டுவிட்டேன்.
நீங்கள் மும்பை போன அந்த பதினைந்து நாட்களும் நரகமாய் கழிந்தன. "நாளை வந்து விடுவீர்கள் நாளை வந்து விடுவீர்கள்" என சொல்லிக் கொண்டே நாட்களை நகர்த்தினேன். நீங்கள் என்னை நினைத்துக் கவலைப்படாதீர்கள் அத்தா ! இனியும் அதே வார்த்தைகளைச் சொல்லியே என்னை சமாதானப்படுத்திக் கொள்வேன்
"கூரிய விழிகள் உன் விழிகள்! கூர்ந்து பார்த்தால் என் விழிகள்!" என்னைப் பார்த்து கவிதைப் பாடினீர்கள் . இன்று இந்த நகல் விழிகளில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது.அசல் விழிகளோ அசைவில்லாமல் தூங்குகிறது . "சோர்ந்து போன நேரத்தில் சொத்தாய் வந்து சேர்ந்தாயே " என்று கூறுவீர்கள் என்னைப் பார்த்து ! இன்று இந்த சொத்து தன் சொத்தை இழந்து சோர்ந்து நிற்கிறது. எனக்குள் ஒரு சின்ன கர்வம் இருந்ததுண்டு . எனக்குக் கிடைத்த மாதிரி ஒரு அத்தா வேறு யாருக்கும் கிடைத்திருக்காது என்று ! கர்வம் கொண்டதாலோ என்னவோ என் கண்ணிலிருந்து அல்லாஹ் உங்களை தூரமாக்கிவிட்டான் .
அந்தக் கடைசி தருணத்தில் மருத்துவர் உங்களிடம், உங்கள் பெயர் கேட்டதும் , நீங்கள் பெயரைக் கூறாமல் ,கலிமா சொன்னதுமே நான் புரிந்து கொண்டேன் அத்தா! அம்மாவின் கண்களில் தெரிந்த பரிதவிப்பு. 'ஏதோ சூரா சொன்னார்கள் ' என்று என்னை பொய் சொல்ல வைத்தது ! நான் இறுதியாக உங்களை அத்தா என்று கூப்பிட்டபோது, என்னைத் திரும்பிப் பார்த்து கண்களாலே சிரித்தீர்கள் . கவலைப்படாதே " நான் நிம்மதியான சந்தோஷமான இடத்திற்குத்தான் போகிறேன்" என்று என்னை சமாதானம் சொல்வதுபோல் இருந்தது .
