க்ராஃபிக்ஸ் பாடத்தின் இரண்டாவது பகுதியின் மூலம் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. முதல் பகுதியில், adobe creative suite 4 ன் photoshop மற்றும் Illustrator ஆகிய இரு வடிவமைப்பு மென்பொருட்களை அறிந்தோம். இப்பகுதியிலிருந்து ஒவ்வொரு மென்பொருட்களையும் விரிவாகப் பார்க்க இருக்கிறோம். உங்கள் கணினியில் மேற்கண்ட இரு மென்பொருட்களும் நிறுவப்பட்டு, அவற்றின் முகப்புகளை நீங்கள் அறிந்துள்ளீர்கள் என்று நம்புகிறேன். முன்னர் கூறியது போன்று, ஒவ்வொரு பாடப்பகுதியில் கூறப்படுவதைப் படிப்பதோடு விட்டு விடாமல், திரும்பத் திரும்ப செய்து பார்த்துக்கொள்ளுங்கள். பாடங்களில் எழும் அனைத்துச் சந்தேகங்களையும் உடனுக்குடன் தெரிவித்து விளக்கம் பெற்றுக்கொள்ளுங்கள். இப்போது ADOBE PHOTO SHOP மென்பொருளின் முக்கியப் பகுதிகளை ஒவ்வொன்றாகக் காண்போம்.
ADOBE PHOTO SHOP - 1. The Interface
PHOTOSHOP மென்பொருளினைப் பயன்படுத்தும் பயனர்களின் வசதிக்காகப் பல இடைமுகங்கள்(Interface) இதில் காணப்படுகின்றன. அவற்றில் முக்கியமாக,
1.1 Tabbed Window
1.2 Tools
1.3 Panels
1.4 Keyboard
1.5 Custom
1.6 Screen mode
ஆகிய ஆறு இடைமுகங்களின் பயனையும் அவற்றைப் பயன்படுத்தும் முறைகளையும் இனி காண்போம்.
1.1 Tabbed Window
அடோபின் பழைய வெளியீடுகளில் இல்லாத இப்புது இடைமுகத்தின் பயன், திறக்கப்படும் ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புகளை ஒரே விண்டோவில் வரிசைப்படுத்துவதும் தேவையான பக்கத்துக்கு இலகுவாக செல்வதற்குமாகும்.
முன்பெல்லாம் ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புகள் திறந்தால் அது, ஒன்றன்பின் ஒன்றாக மறைந்திருக்கும். நாம் வேலை செய்ய வேண்டிய கோப்புக்குச் செல்ல, Menu Bar சென்று அதில் Scroll செய்து கண்டுபிடிக்க வேண்டும். இந்த இடைமுக வசதி மூலம், நேரடியாக நமக்குத் தேவையான கோப்பைத் தேர்வு செய்துகொள்ள முடியும். (Internet Browser களின் புதிய வெளியீடுகள் இதே முறையைத்தான் பயன்படுத்திவருகின்றன).
மேற்கண்ட படத்தைக் கவனியுங்கள். படத்தில் கண்டவாறு நான்கு என்றல்ல, நூற்றுக்கணக்கான கோப்புகளை இப்படி திறந்து வைக்கமுடியும். உங்கள் கணினி தற்காலிக நினைவகத்தின்(RAM Memory) அளவு எவ்வளவு உள்ளதோ அதற்குத்தகுந்தவாறு, அதிகமதிகம் பக்கங்களை எளிதில் திறந்து கையாளலாம்.