Sunday, December 19, 2010

முதல் புனித பயணமும், முதல் மோனோ ரயில் பயணமும்

ஆம்.. இவ்வருடம் என் வாழ்வில் கிடைக்கப்பெற்ற விலை மதிக்கமுடியா பொக்கிசம் என்றுதான் கூறவேண்டும். என் முதல் ஹஜ் பயணம் வரலாற்றுமிக்க முதல் ஹஜ் ரயில் சேவையோடு தொடர்ந்தது. நூற்றிமுப்பது வயது மூதாட்டி இந்தியாவிலிருந்து ஹஜ்ஜிற்கு வருவதாக கேள்விப்பட்டவுடன், 'அட! நமக்கு இன்னும் முப்பது வயதுகூட ஆகவில்லை ஆனால் அல்லாஹ் நமக்கு அவன் அருளை அள்ளி கொடுத்துவிட்டானே!' என்ற பிரம்மிப்பு கலந்த சந்தோசம் .



முப்பது லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஹஜ்ஜிற்கு வந்திருந்தும் அரபு நாட்டவர்களுக்கும், அந்நாட்டில் வசிப்பவர்களுக்கும் மட்டுமே இந்த மோனோ ரயில் பயணம் அல்லாஹ்வின் கிருபையால் கிடைக்கப்பெற்றது.

இந்த அனுவபத்தை பற்றி பகிர்ந்து கொள்வதற்கு முன் இந்த ரயில் ப்ராஜெக்ட் வெற்றிகரமாக செயல்படுத்திக்கொடுத்த சஊதி அரசிற்கும், அசுர வேகத்தில் அசராமல் (24x7) நம்மை அசர வைத்த சீன நண்பர்களுக்கும் என் நன்றியை தெரிவிக்கிறேன். என்னடா இவன் அதிரம்பட்டினத்துல கம்பன் எக்ஸ்பிரசை நிப்பாடிடானுங்கங்குரத்துக்காக ரயில் வண்டியையே பார்க்காதமாதிரி! சொல்றானேன்னு பார்க்காதீங்கோ காக்காமார்களா.. நம் நாட்டில் இது நடந்தேற எனக்கு தெரிஞ்சு 6-8 வருடம் இழுப்பார்கள். இடையில் கொஞ்சம் "ராஜா.., ராணி.." ஆட்டம்லாம் வேற ஆடுவாங்க. 18 கிலோ மீட்டர் ரயில் பாதை இங்கு ஒரே ஆண்டில் முடிவுற்றது. இப்ப சொல்லுங்க நான் ஆச்சர்யப்படுவது சரிதான?


இதோ அரபியில் நாலு வரியில் எழுதக்கூடிய வார்த்தையை ஏழு கட்டத்திற்குள் கிளித்தட்டில் ஏத்தம் விட கோடு போட்டமாதிரி அடக்கிவைச்சிருக்கான்களே, இங்குதான் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட சீனர்கள் இரவுபகல் வேலைபாற்குமிடம்.

சரி சரி விசயத்திற்கு வர்றேன். பயணம் ஆரம்பமாகபோகுது சீட் பெல்ட போட்டுக்கொள்ளுங்கள்..

முதல் நாள் (ஹஜ் 8):

சுபுஹுக்குப்பின் ஜித்தாவிலிருந்து மினா வரை பேருந்தில் பயணித்தோம். ஹஜ்ஜின் கடமைப்படி மினாவில் லுகரிலிருந்து ஐந்து வேலை தொழுகை நிறைவேற்றிவிட்டு சுபுஹுக்குப்பின் அரபாவிற்கு செல்ல வேண்டும். ஆனால் ரயில் அட்டவணையின்படி எங்கள் குழு விடியற்காலை 1 மணிக்கு ரயிலை பிடித்தாக வேண்டும் என்று சஊதி அரசாங்கதிடமிருந்து உத்தரவு வந்தது. எல்லாம் அல்லாஹ்வின் நாட்டம் என்று கட்டுப்பட்டு காத்திருந்தோம் . அப்போதுதான் கையில் கட்டப்பட்டது அந்த ரயில் பயணச்சீட்டு. இதை தண்ணீரில் ஊற வைத்தாலும் , வெயிலில் காய வைத்தாலும் கிழியாதாம். ஆகையால் ஒரு கரத்தில் பயண சீட்டும், மறுகரத்தில் காணாமல் போகாமல் இருக்க டென்ட் முகவரிகளும், எண்ணத்தால் சைத்தானுக்கு பூட்டும் போட்டவனாக இருந்தோம் .

பயணச்சீட்டு உங்கள் பார்வைக்காக..


இதில் நம் பயணத்தின் அனுமதிக்கப்பட்ட மொத்த நாட்கள், நாம் ஏற வேண்டிய ஸ்டேஷன் எண் மற்றும் பிரத்யேக பார்கோடு அச்சு செய்யபட்டிருந்தது.

ஸ்டேசன் எண் நம் டெண்டிற்கு அருகாமையில் இருப்பதைதான் குடுப்பார்கள்.

இரவு 12:30 மணிக்கெல்லாம் ரயிலை பிடிக்க சென்றுவிட்டோம். எனக்கு இது முதல் ஹஜ், முன்னால் ஹாஜிகளுக்கு இது முதல் ரயில் பயணம் என்று பலதரப்பட்ட மக்கள் பல்வேறு சந்தொஷங்களோடு ஒன்று, இரண்டு மணி நேரம் ரயில்வே கேட்டின் படியின் கீழ் படர்ந்திருந்தோம். படி ஏறலாம் என்று கொடி காண்பிக்கப்பட்ட அந்த நொடியில் மக்கள் திரளாக "லப்பை அல்லாஹும்ம லப்பைக்..." என்ற சத்தம் விண்ணைத்தொட்டவாரே வின்வெளிப்பயனம்போல் ரயில் பயணத்தை தொடர்ந்தோம் . படி ஏற முடியாதவர்கள் ஒரே நேரத்தில் 60 பேர் ஏறக்கூடிய லிப்டில் ஏறினார்கள்.


 3000 மக்கள் பதினைந்தே நிமிடத்தில் மீனா - அரபா சென்றடைந்தோம். ஒரு மணிநேரத்தில் 30 ஆயிரம் மக்கள் பல்வேறு ரயில் வண்டிகள் மூலம் அரபா வந்தடைந்தார்கள். ஹஜ்ஜின் முக்கிய நாளான அன்று எங்களுக்கு எல்லா விதத்திலும் வல்ல ரஹ்மான் எளிமையாக்கிதந்தான்.

இரண்டாம் நாள் (ஹஜ் 9):


அரபாவிளிருந்து மக்ரிப் தொழுகையை முடித்துக்கொண்டு முஸ்தலிபா செல்வதற்காக வெளியில் காத்திருந்தோம். இந்த ரயிலில் பெர்த், அன்ரிசெர்வ்டு , வெயிட்டிங் லிஸ்ட் எதுவும் கிடையாது. ஆனால் ஒன்று, இரண்டு மணிநேரம் 'கொஞ்சம் வெயிட் பிளீஸ்' என்ற சத்தம் மட்டும் அரபு கலந்த ஆங்கிலத்தில் (மலையாளம் கலந்த ஆங்கிலத்தை ஒப்பிடுகையில் இது கொஞ்சம் ஸ்டைலாகத்தான் இருந்தது) கேட்டுக்கொண்டே இருந்தது. பிறகு அரபா-முஸ்தலிபாவிற்கு பத்து நிமிடத்தில் சென்றடைதோம்.


இஷாவை முடித்தவண்ணம் அங்கேயே உறங்கிவிட்டு மறுநாள் காலை ஸுபுஹ் தொழுகை முடிந்த பின் ஜமராத் கற்களை அங்கயே எடுத்துக்கொண்டு மீனாவிற்கு வந்து சேர்ந்தோம். ரயில் நிலையத்தைவிட மினா டென்ட் எங்களுக்கு மிக அருகாமை என்பதால் பத்து நிமிட நடை பயணத்தில் வந்தடைந்தோம்.

மூன்று,நான்கு மற்றும் ஐந்தாம் நாள் (ஹஜ் 10 ,11 ,12 ):

இறுதி மூன்று நாட்கள் ஜமராத் கல் எறிவதற்காக மினா-ஜமராத்திற்கு தினமும் பத்து நிமிட ரயில் பயணம் மேற்கொண்டோம்.முன்புபோல் எங்கே வழிதவரிவிடுவோமோ, வெயில் சுட்டெறிக்குமோ, நம் ஒரு வயது குழந்தை தாக்குபிடிக்குமோ என்ற அச்சமெல்லாம் தணிந்து இறையச்சத்தோடு இஷ்டப்பட்ட நேரத்தில் ரயில் பயணத்தை மேற்கொண்டோம். கொஞ்சம் சொகுசாகவே நிறைவேற்றிவந்த இந்த ஹஜ்ஜில் உடலையும், மனதையும் இறைவனின் சோதனை கூடர்திற்கு அழைத்துச்சென்றது ஜமராத்-மக்கா. ஆறு கிலோமீட்டரை நடந்து கடக்க 2 -3 மணிநேரம் எடுத்தது (இன்ஷா அல்லாஹ் இனி வரும் வருடங்களில் இதற்கும் ரயில் பாதை அமைத்துவிடுவார்கலாம்). உண்மையில் இந்த கணம்தான் நம் முன்னோர்கள், நபி(ஸல்) அவர்கள் , நபித்தோழர்கள் செய்த தியாகம் என் மூளைக்கு எட்டியது(சுடு பட்டால்தான் உறைக்கும் என்பார்களே அது இதுதானோ!) .


மனம் குளிர ஒரு மழைத்துளி:

சிக்னல் இல்லாத ரயிலிற்கும், சிக்னல் கொடுக்காமல் வந்த மழைக்கும் கடும் போட்டி நிலவியது . முதல் சுற்றில் புகை இல்லா புகை வண்டியோடு வெற்றிபெற்று இறைவனின் அருட்கொடையை (ரயில்) குடையாய் பயன்படுத்திக்கொண்டு எங்கள் டென்ட் வந்தடைந்தோம். . பிறகு கஅபா முதல் மினா வரை மக்கள் யாவரும் ஒரு சுற்றும், முற்றும் சுற்றமுடியாமல் மழை சுழற்றி எடுத்தது. ரயில் பயணமும் சிறிது நேரம் ரத்தானது.

ஐந்து கடமையையும் முடித்துவிட்டோம் எங்கள் பிழைகளை மன்னித்து ஏற்றுக்கொள்ள துஅ செய்தவனாக வீடு திரும்பினோம்.


காக்காமார்களே உஷார்! உங்களுக்காக ஒரு டிப்ஸ்:

ஒரு கம்பார்மெண்டில் கிட்டத்தட்ட இருபது பேர் உட்காரும் அளவிற்கு இருக்கை இருக்கும். முட்டி மோதிக்கிட்டு கர்சீப் போட்டு முதல் ஆளாக இருக்கையில் அமர்ந்தாலும் கடைசி நபராக பெண்கள் கூட்டம் வந்தே தீரும். ஆகையால் எல்லா(மூவ்/நகரு)!! என்ற வார்த்தை தங்கள் காதுகளை துளையிடுவதற்கு முன் 'எலே.. எந்திரிலே' என்று நமக்கு நாமே சொல்லிக்கொண்டு ஏறும்போதே ஏதாவது ஒரு மூலையில் ஒதிங்கி நிப்பது புத்திசாலித்தனம்.

ஹஜ் ரயில் பயணம் ஒரு பார்வை -

1) ரயில் பயணத்தால் தினமும் மூன்று முதல் நான்கு மணி நேரம் சேமிக்கபட்டது.

2) அதிக நேரம் தங்கும் இடத்திலேயே நன்மையை பெற்றுக்கொள்ள அறிய வாய்ப்பு (இது நாம் பயன்படுத்திக்கொள்வதை பொருத்தது).

3) இயலாதோற்கு இது இறைவன் கொடுத்த வரம்.

4) தினமும் 5000 வாகனங்கள் போக்குவரத்து நேரிசலோடு சேவை செய்யவேண்டியதை, இரு தண்டவாளங்கள் சீர் செய்தது.

5) நள்ளிரவு 11 - 3 ரயில் சேவை நிறுத்தப்படும். இது முன்னறிவிப்பு இல்லாமல் நடந்தமையால் கொஞ்சம் வாக்குவாதமும், சமாதானமும் நடந்தேறியது.

6) ஹாஜிகள் வசதிக்கேற்ப அதிக ரயில் நிறுத்தங்கள், அரபா 1- 2- 3, முஸ்தலிபா 1-2-3, மீனா 1-2-3

ஹஜ்ஜை முடித்து அலுவலகத்திற்கு வந்தபோது அரபு செய்திதாளில் படித்தேன் "சீனப்போருட்களில் தரமும் இருக்கின்றது" என்றதுபோல் ஒரு கட்டுரையை.

ஹும்ம்.. சீனர்களை கண்டாவது சின்சியாரிடியை கற்றுக்கொள் என்பது புது மொழியாக இருக்கக்கூடும் .

வல்ல ரஹ்மான் இந்த புனித ஹஜ்ஜை ஏற்றுக்கொள்வானாக என்று துஆ செய்தவண்ணம் , விடைபெறுகிறேன்

-- மு.செ.மு / M.S.M. மீராஷாஹ் ரஃபியா

ஜெத்தா, சஊதி அரேபியா.
Source:http://adirainirubar.blogspot.com/2010/12/blog-post_15.html
JazakAllah Khayr (Arabic: جزاك اللهُ خيراً‎) is an Arabic term and Islamic expression of gratitude meaning "May Allâh reward you [in] goodness." Although the common Arabic word for thanks is shukran (شكراً), jazakallahu khayran is often used by Muslims instead in the belief that one cannot repay a person enough, and that Allâh Ta'ala is able to reward the person best.

No comments: