Friday, May 7, 2010

என்ன படிக்கலாம்? - டாப் 10 படிப்புகள்!

"ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்?" என்கிற கேள்வி எழும்போதே "எந்தப் படிப்பு 'மோஸ்ட் வான்டட்'?" என்கிற கேள்வியும் கிளம்பி விடுகிறது.
உங்களுக்கு உதவத்தான் முக்கியமான கல்வி நிறுவனங்கள், கல்வியாளர்கள்.. என்று ஒரு குழுவே இணைந்து, ஆராய்ந்து, முத்தான இந்தப் பத்து படிப்புகளையும் வரிசைப்-படுத்தியுள்ளது.
என்ஜினீயரிங் துவங்கி பி.பி.ஏ-வில் முடிகிற அந்தத் துறைகளையும் அவற்றின் முக்கியத்-து-வத்தையும் பற்றி இங்கே விளக்கமாகச் சொல்-கிறார் சேலத்தைச் சேர்ந்த கல்வி ஆலோசகர் மற்றும் திறனாய்வாளரான ஜெயபிரகாஷ் காந்தி.

''பொதுவாக பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகள் தங்களுக்கான படிப்பைத் தேர்ந்தெடுக்க வைத்திருக்கும் அளவுகோல் மிகவும் குறுகிய வட்டத்துக்குள்ளேயே முடிந்து விடுகிறது. தனக்குத் தெரிந்தவர்கள் தேர்ந்தெடுத்து வெற்றி கண்ட துறையையே தனக்குமான எதிர்காலமாக நம்புவது, பெற்றோர்களின் வற்புறுத்தலின்படி ஒரு துறையைத் தேர்ந்தெடுப்பது, நண்பர்களை விட்டுப் பிரியாமல் இருக்க அனைவரும் ஒரே கோர்ஸில் சேர்வது.. என்றெல்லாம் முடிவெடுக்கவே கூடாது.
எந்தத் துறைக்கான தேவை தற்போது அதிகமாக உள்ளது, அதில் நமக்கு விருப்பம் இருக்கிறதா, அதற்கான போட்டியில் நமக்கான இடத்தை நம் மதிப்பெண்கள் நமக்கு பெற்றுத் தந்து விடுமா.. என்பவை உள்ளிட்ட செறிவான அறிவுடனும், விசாலமான பார்வையுடனும் நமக்கான படிப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

காரணம்.. படித்து முடிக்கும்போதே.. பல நேரங்களிலும் 'கேம்பஸ் இன்டர்வியூ உபயத்தால் முடிக்கும் முன்னரே.. பல ஆயிரங்கள் சம்பளத்தோடு உடனடி வேலை.. சில வருடங்களிலேயே லட்சத்தை தொடும் அளவுக்கு சம்பள உயர்வு.. வெளிநாட்டு வேலை வாய்ப்பு.. என இத்துறையில் பெருகிக் கொண்டே இருக்கும் தேவைகள்தான்!
பி.இ படிப்பைப் பொறுத்தவரை உங்களின் கட் ஆஃப் மார்க் 180-க்கு மேலே இருந்தால், கல்லூரிக்கு முக்கியத்துவம் கொடுத்து கோர்ஸை தேர்ந்தெடுங்கள். அதற்குக் கீழ் என்றால், கோர்ஸூக்கு முக்கியத்துவம் கொடுத்து கல்லூரியை தேர்ந்தெடுங்கள்.
காலத்துக்கேற்ப அத்தனை புதிய மாற்றங்களையும் வாரி எடுத்து வளர்ந்து வரும் பொறியியல் கல்வியில், இப்போது இன்னும் புதுப் புதுத் துறைகள் வந்துள்ளன. வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை ஏற்கெனவே இருக்கும் துறைகளை விட, இன்று இவைதான் 'மோஸ்ட் வான்ட்டட்' ஆக உள்ளன.
அவை என்னென்ன என்று பார்க்கலாம்..

இதன் காரணமாக கெமிக்கல், செராமிக்ஸ், மெட்டலர்ஜி, எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் என எந்தத் துறைக்கான உற்பத்தியாக இருந்தாலும், அதில் இந்தப் பொறியாளர்களுக்கான வேலை உறுதியாக இருக்கிறது. பொறியியல் படிப்புகளிலேயே எந்தத் துறையில் வேண்டுமானாலும் பணியாற்ற முடிகிற ஒரே படிப்பு இதுதான்.
சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்தப் படிப்பு உள்ளது. தமிழ்நாடு பொது கவுன்சிலிங் மூலம் இந்தப் படிப்புக்கு மாணவர்களை தேர்ந்தெடுப்பார்கள்.

என்.ஐ.எஸ்.ஈ.ஆர்., தன் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் மூவாயிரத்தை ஸ்காலர்ஷிப்-பாக வழங்கி ஊக்குவிக்கிறது.
கிட்டத்தட்ட இருபத்தோராம் நூற்றாண்டு அறிவியல் யுகத்தின் அத்தனை புதிய அம்சங்களையும் பயிலக் கொடுக்கும் இந்த கோர்ஸில், முதல் இரண்டு செமஸ்டர்களுக்கு அடிப்படை பாடங்களும், மூன்றாவது செமஸ்டரில் இருந்து ஸ்பெஷலைஸ்டு பாடங்களும் கற்பிக்கப்படும். அடாமிக் எனர்ஜி பற்றிய ஆய்வு மற்றும் வளர்ச்சித் துறையிலும், தனியார் ஆய்வு நிலையங்களிலும் இதற்கான வேலை வாய்ப்புகள் விரிந்து கிடக்கின்றன.
இந்தப் படிப்புக்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வான 'நெஸ்ட்', 'ஹோமி பாபா சென்டர் ஃபார் சயின்ஸ் எஜுகேஷன்'-ன் மேற்பார்வையில் இந்தியாவின் பல நகரங்களிலும் நடத்தப்படுகிறது.
இந்தத் தேர்வு, பொதுப் பிரிவு, மேத்ஸ், ஃபிசிக்ஸ், கெமிஸ்ட்ரி மற்றும் பயாலஜி என ஐந்து பாகங்களாக பிரித்து நடத்தப்படும்! வினாக்கள் 'அப்ஜக்டிவ்' முறையில் அமைந்திருக்கும்.

விண்வெளி ஆய்வுத் துறைகள், பாதுகாப்புத் துறைகள், அரசு, தனியார் விமான நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையிலும் ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங் படித்தவர் களுக்கான வேலைவாய்ப்பு கொட்டிக் கிடக்கிறது.
இது சென்னை ஐ.ஐ.டி, மும்பை ஐ.ஐ.டி, கான்பூர் ஐ.ஐ.டி, கோவை, அமிர்தா யூனி வர்சிட்டி மற்றும் சென்னை, எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் போன்றவற்றில் உள்ளது. இங்கெல்லாம் இதற்கான சிறப்பு நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்களை தேர்வு செய்கின்றனர்.


பயோ சென்ஸார்ஸ், எலெக்ட்ரோ கெமிக்கல் சென்ஸார்ஸ், எரிபொருட்கள் மற்றும் பேட்டரி உற்பத்தி போன்ற சிறப்பு மிக்க துறைகளில் எலெக்ட்ரோ கெமிக்கல் என்ஜினீயர்களுக்-கான வேலை வாய்ப்புகள் உள்ளன.
இந்தக் கல்வி காரைக்குடியில் உள்ள 'சிக்ரி' (சி.இ.சி.ஆர்.ஐ - சென்ரல் எலெக்ட்ரோகெமிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்)-ல் மட்டுமே உள்ளது. தமிழ்நாடு பொது கவுன்சிலிங் மூலம் இதற்கு மாணவர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள்.

மருந்துகளை தயாரிக்கப் பயன்படுத்தும் உயிர்வேதிப் பொருட்களைப் பற்றி படிக்கும் இந்த பார்மாஸ¨ட்டிகல் என்ஜினீயரிங், ஒரு தனித்துவமான பாடப்பிரிவாகவே கருதப்படு-கிறது.
புதிய புதிய மருந்துகள் நாள்தோறும் பயன்பாட்டுக்கு வந்து கொண்டிருந்தாலும், அவற்றுக்கான தேவை அதை விட அதிகமாகவே இருப்பது நிதர்சனம். எனவேதான் இந்தப் படிப்புக்கான வேலைவாய்ப்புகளும் நிறைய இருக்கிறது.
தமிழ்நாட்டில் இந்தப் பாடப்பிரிவை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஏ.சி. காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் திருச்சி, அண்ணா யூனிவர்சிட்டி ஆகியவை வழங்குகின்றன.


வேதியியல் தொழிற்சாலைகள், தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் உற்பத்தி தொழிற்சாலைகளில் இதற்கான வேலை வாய்ப்பு நிறையவே உள்ளது. ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் இப்போது இந்தத் துறையில் கால் பதித்திருப்பது, இதற்கான எதிர்கால தேவையை உறுதி செய்கிறது.
திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகம், சென்னை, திருச்சி, அண்ணா பல்கலைக்கழகம் போன்றவற்றில் இதற்கான கோர்ஸ்கள் உள்ளன. தமிழ்நாடு பொது கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படு-வார்கள்.

இப்போது மருத்துவமனைகளில் நாம் பார்க்கிற எம்.ஆர்.ஐ. மற்றும் ஈ.சி.ஜி. உபகரணங்கள், நோய் கண்டறியும் மருத்துவ மெஷின்கள் முதலியவை இந்தத் தொழில் நுட்பத்தினால் உருவாக்கப்பட்டவையே.
இப்படியான கருவிகளை கட்டமைப்பது, அவற்றை மருத்துவமனைகளில் நிறுவுவது, அதன் கட்டுப்பாடு, பாதுகாப்பு உள்ளிட்ட பொறுப்புகள் அடங்கியது இதற்கான வேலைவாய்ப்பு. நாளுக்கு நாள் புதிய முயற்சிகள் புகுத்தப்படும் மருத்துவத் துறையில் இந்தப் படிப்பை முடித்த வர்களுக்கான தேவையும் பெருகிக் கொண்டே செல்கிறது.
தற்போது தமிழ்நாட்டில் பதினான்கு தனியார் பொறியியல் கல்லூரிகளில் அளிக்கப்படும் இந்தப் படிப்புக்கு தமிழ்நாடு பொது கவுன்ஸிலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

என்ஜினீயரிங் மேத்ஸ், மெக்கானிக்ஸ், மெஷின் காம்போனென்ட் டிசைன், தெர்மோ டைனமிக்ஸ், பவர் என்ஜினீயரிங், ரோபோடிக்ஸ் போன்ற பாடப்பிரிவுகள் அடங்கிய இந்தப் படிப்பு, கோவையில் உள்ள குமரகுரு மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரி, ஈரோட்டில் உள்ள கொங்கு பொறியியல் கல்லூரி, திருச்செங்கோட்டில் உள்ள கே.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி மற்றும் அவினாசி-யிலுள்ள மஹாராஜா பொறியியல் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் வழங்கப்படுகிறது.
அண்ணா யூனிவர்சிட்டியின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு பொது கவுன்சிலிங் மூலமும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் அவர்களால் நடத்தப்படும் நுழைவுத் தேர்வு மூலமும் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

ஆண், பெண் என இரு பாலருக்குமான இந்தப் படிப்பு, கேரளாவில் உள்ள கொச்சின் யூனிவர்சிட்டி ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்-னாலஜி, விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திரா யூனிவர்சிட்டி உள்ளிட்ட பல கல்லூரி-களில் உள்ளது. அந்தந்த கல்வி நிறுவனங்கள் சேர்க்கைக்-கான நுழைவுத் தேர்வினை நடத்து-கின்றன.

இதன் மூலம் விவசாயிகளின் பிரச்னைகளுக்-கும் ஆய்வாளர்களின் தேடல்களுக்கும் தீர்வு எடுக்க திட்டங்கள் முடுக்கப்படும். மாணவர்-களை இதற்காக தயார்படுத்தும் படிப்புதான் 'பி.டெக். அக்ரிகல்ச்சர் இன்ஃபர்மேஷன் டெக்னா-லஜி'. நாட்டில் எழுபது சதவிகிதம் வரை உள்ள விவசாய சமுதாயத்துக்கு இனி வரும் நாட்களில் இன்னும் தனி கவனம் தரப்படும் என்பதால், இதற்கான வேலை வாய்ப்புக்கும் அதிக நம்பிக்கை உள்ளது.
அக்ரிகல்ச்சுரல் இன்ஃபர்மேஷன் சிஸ்டம், டெவலப்மென்ட்டல் எகனாமிக்ஸ், மல்டிமீடியா டெக்னாலஜி, ஃபார்ம் ஆட்டோமேஷன், ஆபரேட்டிங் சிஸ்டம்ஸ் போன்ற பாடப் பிரிவுகள் உள்ளடங்கிய இந்தப் படிப்பை இந்தியாவிலேயே முதல் முறையாக சென்ற வருடத்தில் இருந்து கோவை, தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகம் அளிக்கிறது. இதற்காக தனியாக இந்த பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
நன்றி : விகடன்

Source : http://www.satyamargam.com/891 
என்ன படிக்கலாம்? - டாப் 10 படிப்புகள்!

Thursday, May 6, 2010

அந்தரத்தில் ஊசலாடும் உயிர்களுக்கு வாழ்த்துக்கள் !

எமது இப்பொழுதைய ஒவ்வொரு அசைவுக்கும் முழுக் காரணகர்த்தா நாங்களல்ல. தாயின் கருவறையிலிருந்து வெளிவருவது முதற்கொண்டு மண்ணோடு அழிந்துபோகும் வரை ஒரு மனிதனால் தனித்து வாழ்வதென்பது எப்பொழுதும் சாத்தியப்படாத ஒன்றாகவே இருக்கிறது. தெரிந்த பராயம் வரும்வரை உடல் துடைத்து, உணவூட்டி, அரவணைத்துப் பார்த்துப் பார்த்து வளர்த்தும், பிறகும் எமக்கெனவே சேவைகள் செய்துவரும் உறவுகள் முதல், நாம் இப்பொழுது அணிந்திருக்கும் ஆடை, உண்ணும் உணவு, வசிக்க இருப்பிடம் மற்றும் எல்லாவற்றிற்கும் பிறரையே சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. இவ்வாறு ஒரு மனிதன் சார்ந்திருக்கும் அனைவருமே, அவனுக்கான உழைப்பாளர்கள்தானே? ஆகவே இன்றைய உழைப்பாளர் தினத்தில் நாம் நம்மைச் சூழவிருக்கும் அனைவரையும் நினைவு கூறி, உழைப்பாளர் தின வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொள்வோம். இன்றைய தினத்தில் மாத்திரமல்லாது அவர்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும், எப்பொழுதும் தயக்கமின்றி செய்துகொடுப்போம்.

குளிரறைகளில் அமர்ந்துகொண்டு, எந்த வித உடல் களைப்புமின்றி, வேலையின் போது ஏற்படும் சிறு சிறு இடைஞ்சல்களுக்காக பெரிதும் சலித்துக் கொள்ளும் நாம், உழைப்பாளர்களெனும் பட்டியலின் கீழ் நேரடியாக உள்ளடக்கப்படக் கூடிய மனிதர்களைப் பார்த்திருக்கின்றோமா? நான் பார்த்திருக்கிறேன்.

மத்தியகிழக்கு நாடொன்றில் பணிபுரியப் போயிருந்த சமயம், பல மாடிக் கட்டிடம் ஒன்றின் உச்சியில் தொங்கிக் கொண்டு கண்ணாடி துடைக்கையில் தவறிக் கீழே விழுந்து அந்த இடத்திலேயே சிதைந்து இறந்து போன ஒரு நேபாள நாட்டுத் தொழிலாளியைப் பார்த்திருக்கிறேன். அடுத்த நாள் அவரது இடத்தில் இன்னுமொருவர் தொங்கிக் கொண்டிருந்தார்.


தினந்தோறும் காலைவேளைகளில் இது போன்ற கூலி வேலைகளுக்காக பாகிஸ்தானியர், ஆப்கானிஸ்தர்கள், நேபாளிகளெனப் பலரும் பல பிரதான தெருக்களில் கொடிய வெயிலில் வாடியபடி, தம்மை அழைத்துச் செல்பவர்களுக்காகக் காத்திருப்பதைக் காணலாம். வாழ்வதற்காக மனிதனுக்கு பணம் தேவையாக இருக்கிறது. அதனை நேர்மையாக ஈட்டும் இவர்களைப் பாராட்டலாம்.

பெருநகரங்களில் வானைத் தொடுமளவுக்கு எழும்பியிருக்கும் பிரமாண்டமான கட்டடங்களைப் பார்த்து வியந்தபடி கடந்துசெல்கிறோம். அந்த அழகு, அந்த பிரமாண்டம், அந்த நவீனத்துக்காக அந்தக் கட்டிடங்கள் எத்தனை உயிர்களைப் பலிகொண்டிருக்குமென ஒரு கணமேனும் சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா? அந்தக் கட்டட வடிவத்தை வடிவமைத்ததற்காக, நிர்மாணித்ததற்காக பல நிபுணர்கள் விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றுக்கொள்ளும் சமயத்தில், அவர்களது கனவுகள் சாத்தியப்படுவதற்காக மிக அபாயமான களத்தில் நின்று, மிகச் சிரமத்துக்கு மத்தியில் அவற்றைக் கட்டியெழுப்பியவர்களைப் பற்றி எப்பொழுதேனும் நினைவுகூறப்படுகின்றதா? இன்றைய படங்கள் அவர்களது சிரமங்களைச் சிறிதளவு தொட்டுக் காட்டுகின்றன. பாருங்கள்.






















பார்க்கும்போதே உடல் சிலிர்க்கிறதல்லவா? தாங்கள் அறிந்திராத பிற நாடுகளுக்கு தொழிலுக்காக அனுப்பப்படும் தமது பிள்ளைகள், சகோதரர்கள், துணைகள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து என்ன பாடுபடுகிறார்களென நிறையப் பேர் அறிந்திருப்பதில்லை. இது போன்ற மிகக் கடினமான பணிகளெனத் தெரிந்திருந்தால் அனுப்பியிருக்கவும் மாட்டார்கள் அல்லவா?

சிந்திப்போம். அவர்களை கௌரவிப்போம்.

எனது இந்தப் பதிவை இது போன்ற எல்லா உழைப்பாளர்களுக்கும் சமர்ப்பிக்கின்றேன் !

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.

Wednesday, May 5, 2010

விண்ணப்பம்


மலிவு விலையில்
மளிகைச் சாமான்கள்

50 ரூபாய்க்கு
10 எண்ணமாம் !

அரசே.. எப்போது
வீட்டிற்கு ஒரு
விசிறி தரப் போகிறீர்கள்?

உழவன் 







நன்றி : http://tamizhodu.blogspot.com

ஹஜ் பயண விண்ணப்ப தேதி நீட்டிப்பு!

ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் பயணம் செல்ல விரும்புவோர் விண்ணப்பங்ளைப் பூர்த்தி செய்து அனுப்ப விதிக்கப்பட்ட கெடு நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மாநில ஹஜ் குழு உறுப்பினர் செயலாளர் கா.அலாவுதீன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

இந்த ஆண்டுக்கான தற்காலிக ஹஜ் பயண விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி இந்த மாதம் 15 ந் தேதி வரை மும்பை, மத்திய ஹஜ் குழு நீட்டித்து உள்ளது.

எனவே, தமிழ்நாட்டை சேர்ந்த விருப்பமுள்ள முஸ்லிம் விண்ணப்பதாரர்கள், தேவையான அனைத்து நடைமுறைகளை பின்பற்றி, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவுக்கு சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஹஜ் விண்ணப்பங்கள் ரோஸி டவர், மூன்றாவது தளம், புதிய எண்.13., மகாத்மா காந்தி சாலை (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை) சென்னை 600034 என்ற முகவரியில் இயங்கிவரும் தமிழ்நாடு மாநில ஹஜ் அலுவலகத்துக்கு 15 5 2010 தேதிக்குள் வந்து சேரவேண்டும். ஹஜ் 2010 க்கான தேர்வு மற்றும் உறுதி செய்வது குறித்த நடைமுறைகள் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
 
ஹஜ் பயண விண்ணப்ப தேதி நீட்டிப்பு!Source : http://www.inneram.com

Monday, May 3, 2010

சண்டை ஓய்ந்தபாடில்லை!!

அஸ்ஸலாமு அலைக்கும்,

பள்ளியை இடித்தவன் எங்கோ
பல் இழிக்க;
பள்ளிவாசலுக்கே
பாதுகாப்பும் போட்டாயிற்று!!!


உடைத்தவன்
உயர்ந்த பதவியில்;
உரிமைக்கு குரல் கொடுக்க
தெருவுக்கு வந்த நாங்கள்
காவலர் கண்காணிப்பில்!!


இரத்தம் கொதிக்க
நரம்புகள் புடைக்க
கத்தி தீத்தாயிற்று!


கொடியேந்தி
கோஷமும் போட்டாயிற்று;
ஒன்று படு சகோதரா
வென்று எடு;
வருடா வருடம் எங்களுக்கே
வழக்கமாயிற்று!!


வாட்டிய வெயிலில்
வழிந்தோடிய வியர்வையை
கைகுட்டையால் வழியனுப்பி வைத்துவிட்டு;
சிந்தனையை சிறிது நாட்களுக்கு பின் ஒட்டினேன்;


எத்தனை மேடைகள்
எத்தனை பேச்சுக்கள்!
தம்பட்டம் அடித்தனர்
தாம்தான் நேர்வழி!!


சத்தியம் தெரிந்தப் பின்னும்
சண்டை ஓய்ந்தபாடில்லை!!


வேலையில்லாமல் ஆக்கிவிட்டனர்
வெளியாட்களுக்கு;
அடிப்பதும் , உதைப்பதும்
அவர்களுக்குள்ளே;
ஆனந்த தாண்டவம் R.S.S காரனுக்கு!!


ஒரே அமைப்பு என்றால்
உயிரையும் கொடுப்போம்!
மாற்று அமைப்பு என்றால்
சட்டையைப் பிடிப்போம்!!


எல்லோருக்கும் பெயரோ
அறிஞர்கள்;
மாட்டிக் கொண்டு
விழியைப் பிதிங்கிக் கொண்டு
வழியில்லாமல் நாங்கள்!!


சற்றென்று சவ்வு கனத்தது;
சிந்தனையும் கலைந்தது;
மீண்டும் ஒலிப்பெருக்கியின்
சப்தம் ரீங்காரமிட்டது....
ஒன்று படு சகோதரா
வென்று எடு!!!!!

- யாசர் அரஃபாத்

From : Faizur Hadi

Sunday, May 2, 2010

கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க !


தனிமைக் கூடு… படுத்தும் பாடு…

“இன்னுமா பல்லு தேய்ச்சு முடிக்கல ?…..”
“பால் குடிச்சாச்சா…. ?”
“சீக்கிரம் வா குளிப்பாட்டி உடறேன்..”
“நேரமாச்சும்மா…  சாப்பிடு… ஸ்கூல் வேன் இப்ப வந்துடும்…”
“யூனிபார்ஃம் போடு…. ஷூ போடு..ம்ம்….”
பள்ளிக்கூடம் போகும் சின்னக் குழந்தைகள் இருக்கும் வீட்டில் இத்தகைய உரையாடல்களளக் கேட்காமல் இருக்க முடியாது ! அம்மா காலைல எழுந்து குழந்தையை எழுப்பி காட்டுக் கத்தல் கத்திக் கொண்டிருப்பார்.  குழந்தையோ அம்மாவுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு போகோ சேனலையோ, டிஸ்கவரி சேனலையோ நைசாக பார்த்துக் கொண்டிருக்கும். அல்லது மம்மி சொன்ன பேச்சைக் கேட்காமல் அங்கும் இங்கும் ஓடியாடி ஒரு குட்டி மானைப் போலத் துள்ளிக் குதித்துத் திரியும்.
ஒரு வழியாக குளிப்பாட்டி, சாப்பாடு ஊட்டி, ஸ்கூல் வேனில் ஏற்றி பள்ளிக்கு அனுப்பி விட்டு அப்பாடா என அம்மா ஹாயாக அமரும்போது தான் அந்த வெறுமை பளாரென கன்னத்தில் அறையும்.
ஐந்து நிமிடத்துக்கு முன்பு வரை ஏக களேபரமாய் இருந்த வீடு இப்போது மிக மிக வெறுமையாய் பயமுறுத்தும். வெறும் கல்லும் மண்ணும் கொண்டு கட்டிய ஒரு கூடாய்க் தோன்ற ஆரம்பிக்கும். அடடா…. எப்போ ஸ்கூல் முடியும், குழந்தை எப்போ வீட்டுக்கு வரும் என ஏங்க ஆரம்பித்து விடும் அந்த பாசமுள்ள மனசு.
“வீட்டை எத்தனை வாட்டி தான் கிளீன் பன்றது ? கழுதைங்க.. ஒரு பொருளையாவது ஒழுங்கா ஒரு இடத்துல வெச்சிருக்குதா?” அம்மாவின் திட்டு தினமும் குழந்தைகளை துரத்தோ துரத்தென்று துரத்தும்.
ஆண்டு இறுதி விடுமுறை வரும். குழந்தைகள் பாட்டி வீட்டிலோ, தூரத்துச் சொந்தக் காரர்கள் வீட்டிற்கோ போகும். இப்போது வீடு ரொம்ப சுத்தமாய் இருக்கும். வைத்த பொருளெல்லாம் அதே இடத்தில் அப்படியே இருக்கும். அம்மாவுக்கு அந்த சுத்தம் மிகப்பெரிய பாரமாகத் தோன்றும். கலையாமல் இருக்கும் பொருட்களைப் பார்த்தால் கோபம் கோபமாக வரும். அந்த ஏக்கம் கலந்த வெறுமை அவளை நிலை குலைய வைக்கும். எப்படா குழந்தைங்க திரும்பி வீட்டுக்கு வருமோ.. என மனசு துடிக்கும்.
பிள்ளை வளர்ந்து கல்லூரிக்குப் போகும் காலத்தில் இந்த ஏக்கம் அடுத்த நிலையை எட்டும். அதுவும் தூரமான இடத்தில் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கச் சென்று விட்டாலோ, வேலைக்காக வெளிநாடு போனாலோ… அவ்வளவு தான் மனசு ரொம்பவே ஏங்க ஆரம்பிக்கும்.
அதன் பிறகு வரும் திருமணம். ! தனிக்குடித்தனம், அல்லது புகுந்த வீடு இப்படி ஏதோ ஒரு பிரிவு பெற்றோருக்குக் காத்திருக்கும்.  அந்த நீளமான வெறுமை அசுரத்தனமாக அவர்களைத் தாக்கும். எந்த அளவுக்கு பெற்றோர் குழந்தையை நேசிக்கிறார்களோ அந்த அளவுக்கு வெறுமை அவர்களை ஆட்டிப் படைக்கும். ஒரு வகையில் நியூட்டனின் மூன்றாவது விதி என வைத்துக் கொள்ளுங்கள்.
நேற்று வரை எல்லாவற்றுக்கும் அப்பா, அம்மா என்று நின்ற பிள்ளைகள் இன்று அப்பா அம்மாவை சார்ந்து வாழத் தேவையில்லாமல் கிளம்பி விடும்போது பெற்றோரிடம் உருவாகும் இந்த வெறுமை நிலையை எம்ட்டி நெஸ்ட் சிண்ட்ரோம் என்கிறார்கள்.  வெறுமைக் கூடு பாதிப்பு என்று தமிழில் சொல்லாமா ? தவறெனில் தமிழறிஞர்கள் மன்னிப்பார்களாக !
இந்த வெறுமையின் உச்சகட்ட நிகழ்வு என்பது பிள்ளைகள் பெற்றோரைக் கொண்டு காப்பகங்களிலோ, ஏதாவது அனாதை விடுதிகளிலோ சேர்க்கும் போது நேர்ந்து விடுகிறது. அது மிக மிக அரிதான நிகழ்வு என்பதால் அதைக் கொஞ்சம் ஒதுக்கியே வைக்கலாம்.
வயது ஆக ஆக, இந்த வெறுமையின் ஆழமும் அதிகரிக்கும். முதுமை வயது தனது பிள்ளைகளின் அன்பான கரத்தைப் பற்றிக் கொண்டு வீட்டில் அமைதியாய் இருக்க பிரியப்படும். துரதிர்ஷ்ட வசமாக பலருக்கும் அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. அவர்களை தனியே தவிக்க விடும் பிள்ளைகளையும் வாழ்க்கை ஒரு நாள் அந்த வட்டத்தில் கொண்டு வந்து நிறுத்தும் என்பது தான் வாழ்க்கையின் பரமபத விளையாட்டு !
இத்தகைய வெறுமை பெண்களை மட்டுமல்ல ஆண்களையும் அதே வீரியத்துடன் தாக்குகிறது. சொல்லப் போனால் ஆண்களை இது கொஞ்சம் அதிகமாகவே தாக்குகிறது. காரணம், குழந்தையுடன் தேவையான அளவு நேரம் செலவிடவில்லையே எனும் ஏக்கம் தந்தைக்கு மிக அதிகம் இருக்கும் என்கிறார் அமெரிக்காவின் வீட்டென் கல்லூரியில் உளவியல் பேராசிரியராக இருக்கும் ஹெலன் எம். டிவிரிஸ் குழந்தைகள் விலகும்போது நிகழும் வெறுமை இயல்பானது தான். அதைக் கண்டு அதிகம் பயப்படத் தேவையில்லை. எப்போது பயப்படவேண்டும் ?
வாரம் பத்து நாள் அழுதுகொண்டு இருந்தால் பரவாயில்லை. ஆனால் அந்த அழுகை வாரக்கணக்கில் நீண்டு கொண்டே இருந்தால் அவர்களைக் கவனிக்க வேண்டும். அது இந்தப் பாதிப்பின் அறிகுறி.
ரொம்ப மன அழுத்தமாக உணர்கிறார்களெனில் கவனிக்க வேண்டும். அது மிகப்பெரிய ஆபத்தான அறிகுறி. யாருடனும் பேசாமல், சமூகத்தை விட்டே கொஞ்சம் விலகி  எங்கேயோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்களெனில் நிச்சயம் கவனிப்பது அவசியம்.
“இனிமே என்னத்த…” எனும் சிந்தனைக்கு வந்து அதையே பேசிக் கொண்டிருப்பவர்களையும் கவனிக்க வேண்டும். குழந்தைகளுக்காக வாழ்ந்துட்டோம். அவங்க போயிட்டாங்க, இனிமே நாம என்னத்த பண்ண என தம்பதியராய் சேர்ந்து புலம்பிக் கொண்டிருப்பவர்களுக்கும் இந்த சிக்கல் இருக்கக் கூடும் !
இந்தச் சிக்கலைப் பொறுத்தவரை இரண்டு விஷயங்களைக் கவனிக்க வேண்டும். முதலாவது, இந்தச் சிக்கல் எல்லோருக்கும் வந்தாக வேண்டிய கட்டாயம் இல்லை. சில பெற்றோர் குழந்தைகளை தனியே நிற்கப் பழக்குவார்கள். அவர்கள் பழகிவிட்டால் சந்தோசப்படுவார்கள்.
“அப்பாடா பையனை கரையேத்திட்டேன்”, “அப்பாடா… பொண்ணை வழி அனுப்பி வெச்சுட்டேன்.. இனிமே நிம்மதி” என தங்கள் விருப்பமான வேலைகளைப் பார்க்க உற்சாகமாய்க் கிளம்பி விடும் பெற்றோரும் உண்டு. அவர்கள் ஒரு வகையில் பாக்கியவான்கள். அவர்கள் கீழே உள்ளதைப் படிக்காமல் தாவி விடலாம்.
இந்த தனிமைச் சிக்கலில் சிக்கிக் கொண்டவர்களை என்ன செய்வது ? அவர்களுக்குத் தான்  இந்த ஆலோசனைகள்.
1. ஆனந்தம், சோகம், அருகாமை, பிரிவு எல்லாம் கலந்தது தான் வாழ்க்கை எனும் உண்மையை மனதில் ஆழமாக எழுதிக் கொள்ளுங்கள். இனிமேல் பிள்ளைகள் நம்மை முழுமையாய் சார்ந்து இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள்.
2. இனிமேல் வரும் வாழ்க்கை வித்தியாசமானது என்பது மட்டும் தான் உண்மை. ஆனால் அது அழகானது அல்ல என்பது நீங்களாக உருவாக்கிக் கொள்ளும் கற்பனை என்பதை புரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கை எப்போதுமே அழகானது தான். ஒவ்வொரு காலகட்டத்திலும் அதற்கே உரிய சுவாரஸ்யங்கள் நிரம்பியிருக்கும்.
3. பிள்ளைகளுடன் சேர்ந்து வாழும் போதே, ஒரு நாள் இவர்களெல்லாம் தனியே வாழக் கிளம்பி விடுவார்கள் எனும் எண்ணம் மனதில் இருக்கட்டும். அது தான் வாழ்க்கையின் நியதி என்பதை உங்கள் கடந்த கால வாழ்க்கையே சொல்லியிருக்கக் கூடும்.
4. இன்றைய உலகம் ஹை டெக் உலகம். உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் நீங்கள் உங்கள் பிரியத்துக்குரியவர்களுடன் தொடர்பில் இருக்க முடியும். எனவே இ-மெயில், 3G, வெப் கேம் இப்படி எல்லா டெக்னாலஜி விஷயங்களையும் உங்கள் தனிமைக்குத் துணையாய் அழையுங்கள்.
5. உங்கள் பழைய ஹாபி ஏதேனும் ஒன்றைத் தூசு தட்டி எடுங்கள். சிலருக்கு எழுதுவது, சிலருக்கு இசை கேட்பது, சிலருக்கு வாசிப்பது, தோட்டம் வைப்பது இப்படி ஏதோ ஒன்று சிந்தனைகளின் பரணில் இருக்கும். அதைத் திரும்ப எடுங்கள். உங்கள் சுவாரஸ்யமான செயல்களைச் செய்யத் தான் இந்த தனிமை தரப்பட்டிருக்கிறது என பாசிடிவ் ஆக நினையுங்கள்.
6. உங்கள் உதவி இல்லாமலேயே உங்கள் பிள்ளையால் தனியே வாழமுடியும், சமாளிக்க முடியும் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள். அந்த நிலைக்கு உங்கள் பிள்ளைகளை திறமை சாலிகளாக வளர்த்ததில் பெருமிதமும் கொள்ளுங்கள்.
7. உங்களைப் பிரிந்து வாழும் பிள்ளைகளுக்கும் வருத்தம் இருக்கக் கூடும். அவர்களை உங்கள் கவலை நிம்மதியிழக்கச் செய்யலாம். எனவே முதலில் உங்கள் கவலைகளைத் தூர எறியுங்கள்.
8. சேர்ந்து வாழும் காலத்திலேயே உங்கள் பிள்ளைகளிடம் நீங்கள் எவ்வளவு தூரம் அவர்களை நேசிக்கிறீர்கள் என்பதைச் சொல்லி விடுங்கள். அது உங்களுடைய குற்ற உணர்வுகள் பலவற்றைத் துடைத்து விடக் கூடும்.
9. இண்டர்நெட்டில் விருப்பம் இருப்பவர்கள் ஒரு பிளாக் ஆரம்பித்து தங்கள் அனுபவங்களை எழுதுங்கள். உலகத் தொடர்பும் கிட்டும், தனிமை வாட்டுதலும் நிற்கும்.
10. உங்கள் பழங்கால நண்பர்கள், உங்கள் நலம் விரும்பிகள், உறவினர்கள் இப்படி யாருடனாவது உங்கள் உரையாடல் வாழ்க்கையை ஆரம்பியுங்கள். ஆத்மார்த்தமான நட்பும், பேச்சும் கிடைத்தால் வெற்றிடம் நிரம்பிவிடும்.
11. மன அழுத்தமாக உணர்கிறீர்கள். வெளியே வர எவ்வளவு முயன்றும் முடியவில்லை எனில் ஒரு கவுன்சிலிங் நபரைப் பாருங்கள். அதில் வெட்கப்பட ஏதும் இல்லை.
12. விளையாட்டில் ஈடுபாடு உண்டென்றால் ரொம்ப நல்லது. உங்கள் விருப்பத்துக்குரிய விளையாட்டை ஆரம்பிக்கலாம். பலர் கேரம் போன்ற விளையாட்டுகளில் மூழ்கி விட்டால் அவர்களுடைய வெறுமை எல்லாம் பசுமை ஆகிவிடும்.
13. சில திட்டங்கள் வைத்திருங்கள். அடுத்த மாதம் அவரைச் சந்திக்க வேண்டும். அதற்கு அடுத்த மாதம் அங்கே போகவேண்டும் .. இப்படி. இவையெல்லாம் உங்களை அந்த முடிவுகளை நோக்கி சிந்திக்க வைக்கும். உங்கள் வெறுமையை நிரப்பி விடும்.
14. பிரியமான பார்ட் டைம், ஃபுல் டைம் வேலைகள் ஏதேனும் இருந்தால் தேர்ந்தெடுங்கள். பேபி சிட்டிங் போன்ற வேலைகள் இப்போது நம்பிக்கையான, அன்பான நபர்களுக்காய் காத்திருக்கின்றன.
15. கணவன் மனைவி தனியாய் இருந்தால் ரொம்ப நல்லது. முதுமையின் தனிமையை காதலுடன் அனுபவியுங்கள். காலார வாக்கிங் போவது முதல், காதல் வாழ்க்கையை அசை போடுவது வரை இது உங்களுக்கான வாய்ப்பு என்பதை உணருங்கள்.
16. உங்கள் வாழ்நாள் சாதனைகளை நினைத்து மகிழுங்கள். உங்கள் குழந்தையை வளர்த்து ஆளாக்கி திருமணம் செய்து கொடுத்தது ஒரு வாழ்நாள் சாதனை என்பது நினைவில் இருக்கட்டும்
17. அவ்வப்போது தனிமையை நினைத்து சோகமாய் இருப்பதோ, அழுவதோ தப்பில்லை. உணர்வுகள் வெளிப்படுத்துவதற்கானவையே. எனவே நீங்கள் உங்கள் மனசைத் திறப்பதைத் தவறு என கருத வேண்டாம்.
18. தியானம், பயணம், ஆன்மீக ஈடுபாடு போன்றவற்றில் விருப்பம் உள்ளவர்களுக்கு தனிமை வரப்பிரசாதம். இந்தத் தனிமையை நீங்கள் கொண்டாடலாம்.
19. பிள்ளைகளுடன் போனில் பேசுங்கள். அதுவும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் இருவருக்கும் உடன்பாடான இடைவெளியில் பேசுங்கள். உங்கள் பிள்ளை தினமும் பேச விரும்பினால் தினமும் பேசுங்கள், வாரம் ஒரு முறையெனில் அதையே பின்பற்றுங்கள்.
20. ஓய்வு எடுங்கள். வாழ்க்கையில் ஓடியாடி உழைத்தாகி விட்டது. ஓய்வாய் அமர்ந்து ஒரு படம் பார்ப்பது, இசை கேட்பது, டின்னர் சாப்பிடுவது என வாழ்க்கையை அனுபவியுங்கள்.
21. உடற்பயிற்சி செய்யுங்கள். உடற்பயிற்சி உடலில் எண்டோர்பின்களைச் சுரக்கச் செய்யும். அது மனதை ஆனந்தமாக வைத்திருக்கும். ஆரோக்கியத்தையும் கூட்டி வரும். எனவே உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்.
22. மாற்றங்களுக்கு எப்போதும் தயாராக இருங்கள். இறுக்கமான மனநிலை இல்லாமல் இயல்பாய் இருங்கள்.
23. குற்ற உணர்ச்சிகளை விட்டு விடுங்கள். ஐயோ, குழந்தையை நல்லா கொஞ்சலையே, நிறைய நேரம் செலவிடலையே என்றெல்லாம் புலம்பித் திரியாதீர்கள். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது, என மனதை இயல்பாக்குங்கள்.
24. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்ய வேண்டுமென்று விரும்பிய, ஆனால் செய்ய முடியாமல் போல விஷயங்களை, விருப்பங்களைப் பட்டியலிடுங்கள். இப்போது அதில் எதையாவது செய்ய முடியுமா என யோசியுங்கள்.
25. ரொம்ப பிஸியா இருக்க என்னென்ன செய்யலாம் என யோசியுங்கள். கணவன் மனைவியாக இருந்தால் இதை எதிர்கொண்டு வெளியே வருவது ரொம்பவே சுலபம். இல்லாவிட்டாலும் கவலையில்லை, வெளியே வருவது எளிது தான்.
இந்த சின்னச் சின்ன விஷயங்களை மனதில் கொண்டால் தனிமையின் வெறுமை என்பது சாபமல்ல, வரம் என்பதை உணர்வீர்கள். வாழ்க்கை வாழ்வதற்கே ! வாழுங்கள், வாழ்த்துக்கள்.

சேவியர்
நன்றி : பெண்ணே நீ…

கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க ! 

நன்றி  http://sirippu.wordpress.com/

Please  visit my new ISLAMIC BLOG

 

Saturday, May 1, 2010

ஒபாமாவின் 'மாற்றம்', மாறாது நிலைக்குமா?

ஒபாமாவின் அழைப்பு"இஸ்லாமியத் தீவிரவாதம்", "ஜிஹாதி பயங்கரவாதம்" தொடங்கி, "இன்னொரு சிலுவைப் போர்" வரை, இஸ்லாத்தின் மீது காழ்ப்பைக் கக்கும் சொல்லாட்சிகளை உலகுக்கு அறிமுகப் படுத்திய அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ் மூலமாக அமெரிக்காவுக்கு ஏற்பட்ட களங்கத்தை, "மாற்றம்" என்ற ஒற்றை முழக்கத்தோடு பதவிக்கு வந்திருக்கும் அதிபர் பராக ஒபாமா துடைக்க முயலுவதாகத் தெரிகிறது.

'அமெரிக்காவின் பாதுகாப்புத் தொலைநோக்கு' எனும் திட்ட வரைவுகளிலிருந்து "இஸ்லாமியத் தீவிரவாதம்" எனும் சொல்லை நீக்குவதற்கு அண்மையில் ஒபாமா ஆணை பிறப்பித்திருக்கிறார்.

"அமெரிக்கா போரிடப் போவது பயங்கரவாதிகளுடனே அன்றி, இஸ்லாத்துடனோ முஸ்லிம்களுடனோ அல்ல. ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் தீவிரவாதிகள் எனும் கண்ணோட்டத்தோடு அமெரிக்கா பார்க்காது" என்று அதிபர் பதவி ஏற்றவுடன் ஒபாமா செய்த அறிவிப்பு, இப்போது அரசு ரீதியான செயல்பாட்டுக்கு வரத் தொடங்கி இருக்கிறது என எதிர்பார்கலாம்.

மேற்காணும் ஆணை செயலுக்கு வந்தால், அரசின் உயர்மட்ட அளவில் மட்டுமின்றி, அமெரிக்காவின் 'யூத லாபி'யிலும் பெருத்த 'மாற்றம்' ஏற்படுத்தும் என நம்புவதற்கு வாய்ப்பிருக்கிறது.

முந்தைய புஷ் நிர்வாகம், தனது பாதுகாப்புக் கொள்கையில், "21ஆம் நூற்றாண்டின் மாபெரும் போராட்டமாக இஸ்லாமிய அடிப்படைவாதத்துடனான கொள்கைப்போரையே அமெரிக்கா கருதுகிறது" என்று குறிப்பிட்டிருந்தது. முஸ்லிம் நாடுகளைக் குறித்து ஒருமுறை "ரவுடி நாடுகள் (Rogue States)" என்றும் "சாத்தானின் அச்சு (Axis of Evil)" என்றும் வர்ணித்த புஷ், இஸ்லாத்தை, "கொடூரமான தீய மதம் (Evil and Wicked Religion)" என்றும் குறிப்பிட்டவராவார்.

"இஸ்லாமிய பயங்கரவாதம், இஸ்லாமிய ஜிஹாத், இஸ்லாமிய அடிப்படைவாதம் போன்ற, தீவிரவாதத்துடன் மதத்தை இணைக்கும் சொல்லாட்சிகளைத் தவிர்த்துக் கொள்ளுமாறு முந்தைய அரசுக்கு நான் பலமுறை பரிந்துரைத்தேன்; ஆனால் பயனில்லாமல் போனது. ஏனெனில், மேற்காணும் சொற்களைச் செவியுறும் ஒரு முஸ்லிம், தம் மதத்தின் மீதான தாக்குதலாகவே அவற்றைக் கருதுவார். அப்படிக் கருத வேண்டும் என்றுதான் உஸாமா பின் லேடன் விரும்புவார்" என்று கூறுகிறார் காரன் ஹ்யூகஸ். இவர் முன்னாள் அதிபர் புஷ்ஷின் அரசில் முஸ்லிம் உலகினரோடு உறவு கொண்டாடுவதற்கான மேல்மட்ட அதிகாரியாக இருமுறை பதவி வகித்தவராவார்.

அணுஆயுதக் குறைப்பு, குவாண்டனாமோ சிறை மூடுவிழா போன்ற புஷ் நிர்வாகத்துக்கு எதிரான தனது கொள்கையைப் படிப்படியாகச் செயலுக்கு கொண்டு வரும் ஒபாமாவின் திட்டங்களில், "இஸ்லாமியத் தீவிரவாதம்" என்ற சொல்லைப் பயன்படுத்தத் தடைவிதித்தல் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.


உலகளாவிய முஸ்லிம்களுடனான நேசக்கரம் நீட்டலின் ஒரு பகுதியாகவே அமெரிக்க அதிபரின் ஆணை பார்க்கப் படுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். "அமெரிக்கா முஸ்லிம்களின் எதிரி இல்லை என்றும் தீவிரவாதிகளை ஒடுக்குவதில் மட்டுமே அமெரிக்கா கடும் நடவடிக்கை எடுக்கும்" என்றும் ஒபாமா வலியுறுத்தி வருவதன் ஓர் அங்கமே இது என்றும் கூறுகிறார்கள்.

கடந்த ஜூன் 4, 2009இல் கெய்ரோவில் உரையாற்றிய ஒபாமா, "புதிய தொடக்கம்" எனும் தலைப்பில் இதே கருத்தை வலியுறுத்திய நினைவிருக்கலாம்.

"உலகின் இரண்டாவது பெரும்பான்மையினர் பின்பற்றும் இஸ்லாத்தைப் பழித்துக் கொண்டு முஸ்லிம்களுடன் நேசக்கரம் நீட்டுவதாகக் கூறுவது ஒன்றுக்கும் உதவாது" என்று ஒபாமாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவில் அங்கம் வகிக்கும் பிரதீப் ராமமூர்த்தி உருப்படியாக ஆலோசனையைக் கூறியிருப்பது இங்குக் குறிப்பிடத் தக்கது.

அமெரிக்க யூத லாபியை மீறி, 'மாற்றம்' மாறாமல் செயலுக்கு வந்தால், அமெரிக்காவைப் பற்றிய உலக முஸ்லிம்களின் மனதில் உள்ள வெறுப்பு, படிப்படியாக நீங்குவதற்கு வாய்ப்பிருக்கிறது. அந்த வாய்ப்பை வழங்குவதில் ஒபாமா உறுதியுடன் இருப்பாரா?

எதிர்காலம் பதில் சொல்லும்!
ஒபாமாவின் 'மாற்றம்', மாறாது நிலைக்குமா?
Source : http://www.satyamargam.com/1431