Monday, January 13, 2025

கல்வியை இப்படியும் அணுகுவோம்…….!


கல்வி என்பது காலத்தின் அவசியம்! கல்வி இல்லையென்றால் வாழ்வில் வெற்றிப்பெற இயலாது! கல்வி மட்டுமே வாழ்வின் தரத்தை மேம்படுத்தும்! சீனாவிற்கு சென்றேனும் கல்வி கற்று வா! இன்னும் இதுப்போல் பல மாதிரியாக கல்வியின் முக்கியத்துவத்தினை நாம் எல்லோரும் அடுத்த தலைமுறையினறை அறிவுறுத்துகிறோம். அதில் உண்மையும் இருக்கிறது. 

ஆனால் அந்த கல்வி எதன் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று கூடவே அறிவுறுத்த ஏனோ மறந்துவிடுகிறோம் மறைத்தும்விடுகிறோம். கல்வியில் நம் தரத்தினை மதிப்பீடு செய்ய ஒர் படிநிலையை நமக்கு நாமே உறுவாக்கி வைத்திருக்கிறோம் 

அதிக மதிப்பெண்கள் எடுத்தால் மருத்துவர், ஓர் அளவுக்கு எடுத்தால் பொறியாளர், இன்னும் குறைவாக எடுத்தால் கணக்காளர் என்று நமக்கு நாமே இலக்கு நிர்ணயித்துக்கொள்வது நம்முடைய இலக்கினை அடைய நாமே வகுத்த தடைகல். இதற்கு ஒருவகையில் நமது பள்ளி கல்லூரிகளும், சமுதாயத்திலும் நாட்டிலும் நிலவும் கல்வி அமைப்புகளும் முக்கிய காரணம். ஒரு மாணவனின் தரமும் திறமையும் மணப்பாடங்களும் மதிப்பெண்களும் மட்டுமே தீர்மானிப்பதில்லை என்பதனை முதலில் நன்றாக உணருவதுதான் நாம் நம் எதிர்கால வெற்றிகரமான வாழ்வின் எல்லைகளை திறந்துவிடுவதின் முதல் படி.

மாணவ மாணவிகளின் ஆற்றலும் தேடலும் கூட திறமையை தீர்மானிக்கும் முக்கிய கருவியாக இருக்க முடியும். பெற்றோர்களும் தம் பிள்ளைகளுக்கு மேற்படிப்பு தொடர்பாக அறிவுரை என்ற பெயரில் தமது விருப்பங்களை கூறும் போது இந்த பிரிவு எடுத்தால் இந்த வேளையில் சேரலாம், இந்த வேளையில் சேர்ந்தால் இவ்வளவு சம்பாதிக்கலாம், இவ்வளவு சம்பாதித்தால் இவ்வளவு சொத்துகள் வாங்களாம் சேர்க்கலாம் என்ற அடிப்படையில் மட்டும் அறிவுரைக் கூறாமல்

நீ கற்கும் கல்வி என்பது உன் ஆற்றலை வளர்க்க!

உன் கல்வி என்பது தேடலை விரிவுபடுத்த!

உன் கல்வி என்பது உலகத்தினை அறிய!

உன் கல்வி என்பது நாகரித்தினை செழுமைப்படுத்த!

உன் கல்வி என்பது உன் நட்பு வட்டத்தினை விரிவுப்படுத்த….. என்பன போன்ற நிதர்சனமாண வாழ்வியலை கூறி ஊக்கப்படுத்த வேண்டும்.

மதிப்பெண், வேலை, சம்பாத்தியம் என்ற குறுகிய அடிப்படையில் மட்டுமே நாம் கல்வியின் முக்கியத்துவத்தினை வலியுறுத்துவோமேயானால் அந்த் கல்வி நம் பிள்ளைகளின் ஆற்றலை ஒரு வட்டத்தினுல் சுறுக்கிவிடும். எல்லைகளை அடைத்துவிடும். வேலையையும் வருமானத்தினையும் மட்டுமே இலக்காக வைத்து நாம் கல்வி கற்றால் நாம் தேர்த்தெடுத்த துறையில் மட்டுமே சாதிக்க முடியும் என்ற நிலை உருவாகி விடும். 

மாறாக நாம் கற்ற கல்வி நம் அறிவு, ஆற்றல், தேடல், திறமை, பண்பாடு, நாகரிகம் போன்ற வாழ்வியலை மேம்படுத்த என்ற இலக்கில் கல்வி கற்றோமேயானால் நாம் எடுத்த துறை மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் நம்மால் சாதிக்க முடியும். நம் ஆற்றலை வெளிபடுத்த முடியும். கல்வி கற்றோர்கள் தாம் தேர்ந்தெடுத்த துறையில் தான் சம்பாதிக்க வேண்டும் என்ற கட்டாயமும் இருக்காது. தாம் சாராத துறையிலும் வெற்றிக்கொடி நாட்ட இயலும்.

எத்தனையோ மருத்துவர்கள், பொறியாளர்கள் IAS IPS ஆக தேர்வாகியிருக்கிறார்கள். மருத்துவத்திலும், பொறியியலிலும், கணக்கியலிலும் புலமை பெற்றவர்கள் அதற்கு தொடர்பில்லாத துறைகளில் வெற்றிபெறுவதும், தொழிற்கல்வி கற்ற பலர் தமது கல்வி அறிவினை பயன்படுத்தி விவசாயத்துறைகளில் சாதிப்பதையும் நம்மால் காண முடிகிறது. தாம் தேர்த்தெடுத்த துறைகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற எத்தனை எத்தனையோ நபர்கள் வியாபாரத்தில் சோபிப்பதையும், குறைந்த மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்ற பலர் நிறுவனம் சார்ந்த பணிகளில் சிறப்பாக செயல்படுவதையும் காண முடியும். 

திருக்குர்ஆனில் எல்லாம் வல்ல அல்லாஹ் மனிதர்களை நோக்கி தாம் படைத்த இவ்வுலகில் உள்ள பல்வேறு விஷயங்கள் குறித்து "சிந்திக்க மாட்டீர்களா" “ஆராய மாட்டீர்களா" என பல இடங்களில் கேல்வி கேட்கிறான்.

ஆக நாம் உணர வேண்டிய நிதர்சணம் என்னவெனில், நாம் தேத்தெடுக்கும் துறை மட்டுமே சமூகத்தில் நம்மை அடையாளபடுத்தாது, உயந்த அந்தஸ்துக்கு இழுத்து செல்லாது. நம்முடைய ஆற்றலும் நம்முடைய புலமையும், கற்ற கல்வியினை நாம் பயன்படுத்தும் விதமுமே நம்மை யார் என்று அடையாளப்படுத்தும். 

“கல்வி என்பது உண்மைகளைக் கற்பது அல்ல, சிந்திக்க மனதைப் பயிற்றுவிப்பது” என்று புகழ்பெற்று விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டின் கூறுகிறார்

எனவே இன்றை இளைய சமூகம் ஒன்றை மனதில் ஆளமாக பதிய வேண்டியது என்னவெனில் கல்வி என்பது வேலையில் சேருவது, சம்பாதிப்பதும் மட்டுமே இல்லை. மாறாக கல்வி என்பது மேலே நாம் கூறியவாறு நம் ஆற்றலை, தேடலை, நாகரித்தினை, பண்பாட்டினை, அடுத்த தலைமுறையை, சமூகத்தினை செழுமைப்படுத்தவே என்பதை உணர்ந்து கல்வி கற்க வேண்டும். கற்ற கல்வி நமக்கும் நம் சந்ததியினருக்கும், நம் குடும்பத்தார்களுக்கும், நம்மை சுற்றிய சமுதாயத்திற்கும், பரந்து விரிந்த இவ்வுலகிற்கு மட்டுமின்றி நிரந்தரமான உலகமான மதிப்பு நிர்ணயிக்க இயலாத மறுமை வாழ்விற்கும் பயன்பட வேண்டும்.

பரந்து விரிந்த உலகில் மனிதனுக்கு என்னென்ன தேவையோ அவை அத்தனையும் இறைவன் முழுமையாக கொடுத்திருக்கிறான். அது போலவே அறிவாற்றலையும் அவனுக்கு வழங்கியிருக்கிறான். தாம் கற்ற கல்வி நிலைத்து நிற்க வேண்டுமென்றால் அதைப்பற்றிய முழுமையான அறிவு அவனுக்கு வேண்டும். இல்லையென்றால் ஆற்றலோடும் புரிதலோடும் கற்காத கல்வி இக்கட்டான சூழ்நிலையில் அதை விட்டும் அவன் விலகிவிடநேரிடும்.


அல்லாஹ் கூறுகிறான், "தான் நாடுகின்றவர்களுக்கு அல்லாஹ் ஞானத்தை வழங்குகிறான். எவருக்கு ஞானம் வழங்கப்படுகிறதோ அவர்(மெய்யாகவே) எராளமான நன்மைகள் வழங்கப்பட்டவராவார். (இவற்றிலிருந்து) நல்லறிவுடையோர் தவிர வேறெவரும் சிந்தித்துப் படிப்பினை பெறமாட்டார்கள்." (2:69)



ஃபைஜூர் ஹாதி AMB


நீடூர் நெய்வாசல்