உயில்ப் பத்திரங்களின் அடியில்
நேசத்தின்
உயிர்ப் பதிப்பாய் இருந்தன
தாத்தாக்களின்
பெருவிரல் பதிவுகள்.
தண்ணீர் இறைக்கும்
சணல் கயிறுகளின் இழைகளில்
ரேகைகளைத்
தொலைத்து நின்றன
அம்மாக்களின் பெருவிரல்கள்.
பீடி சுருட்டியும்
பட்டாசு திணித்தும்
பெருமூச்சுகளின் அழுகுரல்களாகின
உழைக்கும் வர்க்கத்தின்
பெருவிரல்கள்.
களைபிடுங்கிக் களைத்தவை,
மண்வெட்டியில்
மரத்துப் போனவை,
பனையேறுகையில்
நிலைமாறியவை என
பெருவிரல்கள் நீள்கின்றன.
இன்று,
பெருவிரல்களின்
தேவைகள் மாறிவிட்டன.
ஸ்மார்ட்போன்களின்
தொடுதிரை தேகம் உமிழும்
வெட்க வெளிச்சத்தில்
உலகத்தை இழுத்தும், துரத்தியும்
வேடிக்கை காட்டுகின்ற
இளசுகளின் பெருவிரல்கள்.
சேவியர்
Joseph Xavier Dasaian Tbb
No comments:
Post a Comment