சத்தியசன் மார்க்கமதால்
சாந்திதரும் நோக்கமுடன்
உத்தமநன் நபிவந்தும்
உயர்வடையாதுள்ளோமே!
வேதங்கள் உண்டென்றோம்
விண்ணவரும் உண்டென்றோம்
போதனைகள் பெற்றபின்னும்
பொய்மைகளில் புரள்வதும்ஏன்?
தொழுகைஇலாப் பாவியராய்த்
தொலைவதுவோ? உனக்கஞ்சும்
அழுகையிலாப் பாவியராய்
அழிவதுவோ, அல்லாஹ்வே ....
உறங்குகிறோம்; எழுகின்றோம்
உன்நாட்டப் படிநாங்கள்
இறந்ததன்பின் எழுவதைஏன்
எண்ணாமல் இருக்கின்றோம்?
நன்மையெலாம் நல்கிடும்நீ
நாடிவிட்டால் சோதனையாய்த்
தின்மைகளும் தருவதைஏன்
தெரியாமல் திரிகின்றோம்?
நீவிதித்த விதிமீது
நிறைவடையும் விதியருள்வாய்!
பாவிஎமக்(கு) உன்னுதவி
வந்தடையும் மதியருள்வாய்!
எழுதியதை எளிதாக்கு!
எம்வழியை ஒளியாக்கு!
மொழிவதெலாம் நலமாக்கு
முதலோனே, யாஅல்லாஹ் ....
--- ஏம்பல் தஜம்முல் முகம்மது
No comments:
Post a Comment