Monday, November 23, 2009

அவகாசம்


சற்று இடமும், நேரமும் கொடு
எனைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி
இளைப்பாறிக் கொள்கிறேன்

ஒரு பெரும் புதைகுழியிலிருந்து
மீண்டு வந்திருக்கிறேன்
சூழ்ந்தேயிருந்தன
நச்சில் தோய்ந்த நாக்குகளோடு
சீறும் பாம்புகள் பல

கொடும்வெப்பம் உமிழும்
விஷக் காற்றினை மட்டும் சுவாசித்தபடி
மூர்ச்சையுற்றுக் கிடந்ததென் வெளியங்கு
வண்ணத்துப் பூச்சிகள் தொட்டுச் சென்றன
அனல் கக்கும் தணல் கற்றைக்குள்
ஒரு பூப்போல இருந்தேனாம்
சிறகுகள் கருகி அவையும்
செத்துதிரும் முன் இறுதியாகச் சொல்லின

அரசகுமாரனாகிய அவனையேதான்
தன்னலவாதியென்றும் துரோகியென்றும்
சனியனென்றும் சாத்தானென்றும்
பிடாரனென்றும்
பேய் பிசாசுகளின் தலைவனென்றும்
உண்மைகளை உரக்கச் சொல்வேன்
மீளவும் கண்களைக் கட்டிக்
கடத்திப் போகும் வரையில்

அதுவரையில்
உன் கையில் ஆயுதம் ஒதுக்கி
பார்வையில் குரூரம் தவிர்த்து
சற்று இடமும் நேரமும் கொடு
எனைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி
இளைப்பாறிக் கொள்கிறேன்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
நன்றி :http://www.rishanshareefpoems.tk/

தமிழை மறப்பதோ தமிழா

தமிழை மறப்பதோ தமிழா
உன் தரமின்று தாழ்வதோ தமிழா

கற்கும் மொழிகள்
கணக்கற்றவையாயினும்
கைகூப்பித் தொழுவது
தமிழன்றி வேறோ

தமிழச்சியிடம்
தாய்ப்பால் பருகிப் பருகி
நிமிர்ந்த உன் முதுகெலும்பை
தாய்மொழிக்கன்றி
வேறெதற்கும் வளைக்கலாமோ

அடகுவைக்க
உன் உயிரை வேண்டுமானால் உரசிப்பார்
தன்மானத்தையா தொடுவாய்

தாய்மொழி இழந்தவன்
தன் முகம் இழந்தவன்
தமிழற்றுப் போனவனோ
தன் தலையற்றுப் போனவனன்றோ

கணினிக் கோட்டையிலும்
இணைய இடுக்குகளிலும்
இணைச்செங்கோல் ஏந்தி
ஏகமாய் ஒளிவீசும்
நம் செந்தமிழ் மறுப்பதோ தமிழா

நம்
மூச்சுக் காற்றிலும்
கன்னித் தமிழ் மணம்
என்றும் வீசுதல் வேண்டாமோ

நம்
இரத்தக் குழாய்களிலும்
சுத்தத் தமிழெழுத்துக்கள்
வற்றாது ஓடுதல் கூடாதோ

வா தமிழா
நல்ல தமிழில் நாம்
நாளெல்லாம் பேசுவோம்
வா

வார்த்தைகள் அவிழ்ந்து உதிரும்போது
சுற்றுப்புறமெங்கும் சுகந்தம் வீசுமே
அதற்காக

நாக்கு நர்த்தனங்களில்
நல்லோசை எழும்புமே
அதற்காக

உச்சரிப்பு ஒவ்வொன்றும்
சிற்பங்கள் செதுக்குமே
அதற்காக

எந்த இசையிலும் இயைந்து கலந்து
நெஞ்சின் மத்தியில்
நிஜமாய்க் கிசுகிசுக்குமே
அதற்காக

உள்ள உணர்வுகளை அள்ளிப் பொழிய
நல்ல வார்த்தைகள்
நயாகராவாய்ப் பொங்குமே
அதற்காக

வா தமிழா
நல்ல தமிழில் நாம்
நாளெல்லாம் பேசுவோம்
வா


நன்றி : http://anbudanbuhari.blogspo

Sunday, November 22, 2009

மனம் கவர்ந்த மலேசியா---சிங்கப்பூரு

 

கோடை விடுமுறையை கழிக்க குளிர் காலத்தில் திட்டம் வகுத்தேன். குடும்பத்துடன் கூடி மலேசியா போகலாம்னு…பட்ஜெட் போட்டுபார்த்த டெம்பரேச்சர் அதிகமா காண்பிச்சது…
இருந்தாலும் இந்த மனசு இருக்கு பாருங்க அது… நாம சொல்லுறத கேட்பதே கிடையாது. நாம சொல்லி மனம் கேட்டா நாம வளர்ந்திருப்போமில்ல…மனம்சொல்லுக்குதானே ஆடுறோம்… மனைவி சொல்லுக்கு ஆடுவது போல…( ஹி…ஹி…நான் என்ன சொல்லிக்கல)

சரி ஆன்லைன் மூலமா பட்ஜெட் விமானத்தை பிடிக்கலாம்னு டிராவல்ஸ் நண்பர் அறிவுரையை ஏற்று தேடி கண்டுப்பிடிச்சேன்…
ஜூன் 15 க்கு அப்புறம் போவதற்கு மார்ச் மாதமே டிக்கேட் ஆன்லைனில் எடுத்தாச்சு…நீங்க தங்கப்போற இடம் 5ஸ்டார் ஹோட்டலா?...ன்னு நீங்க கேட்பது என்காதுல விழுகுது… ஆமா… எனது சொந்தங்கள் அங்கே இருக்காங்க… அவங்க ஸ்டார் ஹோட்டலை விட என் மனசுல சூப்பர் ஸ்டாரா இருக்காங்க…நான் ஹோட்டல்ல தங்கினா அவங்க கோச்சிக்க மாட்டாங்களா?(ஐஸ் வைக்கிறேன்னு மட்டும் நினைச்சுடாதீங்க)அவங்க வீட்டுல தங்கலாம்னு முடிவு.

சரிபோறதுதான் போறோமே மலேசியா பக்கத்துல உள்ள சிங்கப்பூருக்கும் போய் விட்டு வந்திடலாம்னு ஒரு ஐடியா தோனுச்சு…ம்…முதல்ல சிங்கப்பூர் போய்விட்டு அங்கிருந்து ரோடு வழியாக மலேசியா போகலாம்னு திட்டம் வகுத்தேன்…(ஏதோ நாட்டையே பிடிக்கின்ற மாதிரி)

போட்ட திட்டமெல்லாம் சரிதாங்க…போற நாட்டுக்கு இங்கு (துபாயில்) விசா வாங்கனுமில்ல… முதல்ல சிங்கப்பூர் தூதரகத்துக்கு போன் செய்து விசாவைப்பற்றி விசாரித்தேன்…

விஎஸ்ஏ –என்ற தனியார் நிர்வனத்தின் மூலம் விசா அப்ளை செய்யவேண்டும்னு சொன்னாங்க. அது துபாயில ஷேக்ஜாயித் ரோட்டுல 2வது மெட்ரோ பிரிஜ் கிராஸிங் பக்கத்தில் ஹபீப் பேங் பில்டிங்கில் 14 வது மாடியில் அந்த நிருவனம் இருக்கு…கூட்டமா இருக்குமோன்னு யோசனை பண்ணிக்கிட்டு போனா நம்மளை அவங்க எதிர்பார்த்துக்கிட்டு உட்காந்திருப்பது போல இருந்தாங்க.

அப்ளிக்கேசன் ஆன்லைனில் எடுத்து புல் பண்ணி பாஸ்போர்ட் போட்டோ2 டிக்கேட் எடுத்துகிட்டு போனேன்…பாஸ்போர்ட்டை பார்த்துவிட்டு கையிலேயே கொடுத்திட்டாங்க…பாஸ்போர்ட் தேவை இல்ல…இது ஆன்லைன் விஸா…4 தினங்களில் விஸா கிடைக்கும்…டெலிபோன் செய்து கேட்டுக் கொண்டு வாங்கன்னு சொன்னாங்க…என்னையும் சேர்த்து 4 பேரு 500 திரஹம் கறந்திட்டாங்க…

நான்கு நாள் கழித்து விஸா வந்திடுச்சு..போய் வாங்கி பார்த்தால்…பெரிய அதிர்ச்சி…(சிங்கிள் எண்ட்றீக்கு) ஓரு முறை செல்ல தான் அப்ளை பண்ணிருந்தேன் ஆனால் (மல்ட்டி எண்ட்றீ) பலமுறை செல்ல விசா 2 வருடத்துக்கு கொடுத்திருக்காங்க…எனக்கு இன்ப அதிர்ச்சி அட நம்ம யோக்கியதை இவங்களுக்கு நல்லா தெரிஞ்சுருக்கு அதனால தான் நமக்கு பலமுறை போய்வர கொடுத்திருக்காங்ன்னு சந்தோசமா நினைச்சி என் நண்பனுக்கு போன் பண்ணி விசயத்தை சொன்னேன்…

சிங்கப்பூர் செல்ல துபாயில் யார் விசா அடித்தாலும் 2 வருடத்திற்கு மல்ட்டி எண்ட்றி விசா தற்காலியமா கொடுத்து வராங்க..நீரொம்ப அலட்டிக்க வேண்டாம்னு சொன்னாரு…சப்புண்ணு போச்சு…இருந்தாலும் 2வருடம் கிடைச்சுருக்குங்குற சந்தோசம் இருந்துச்சு…(ஒருமுறை போவதற்கே முழிபிதுங்குது)

மலேசிய தூதரகத்துக்கு போன் செய்து இடம் விசாரித்தேன்…துபாய் கராமாவில் லேம்ஸிபிளாசாவுக்கு பக்கத்தில் மலேசியன் டிரேடிங் பில்டிங் இருக்கிறது…அதில் கீழ் தளத்தில் துதரகம் இயங்கி வருகிறது.

மலேசியா விசா அடிக்க 1-பாஸ்போர்ட் 2-போய் வர டிக்கேட் 3- நம்முடைய கம்பெனி லட்டர் 4- மலேசியாவில் தங்குவதற்கான ஹோட்டல் புக்கிங் (உறவினர் இருக்காங்க அங்க தங்கப்போறோம்னு சொன்னா உறவினர்களுடைய விபரம் அவங்களுடைய அழைப்பிதழ்) 5- 2 புகைப்படம் இதைக் கொடுத்து ஒருமுறை செல்ல விசாவிற்கு 50 திரஹம் 3மாதம் மட்டுமே விசா காலம்...இன்று கொடுத்தால் மறுநாள் பாஸ்போர்ட்டில் விசா அடித்து கொடுத்திடுவாங்க…

மல்ட்டி எண்ட்றீ (பலமுறை செல்ல) விசாவிற்கு 100 திரஹம் ஆனால் 3மாதம் தான் விசா காலம்(ரொம்ப அநியாயமா இருக்குல்ல) விசா அப்ளிகேஷன் ஆன்லைனில் கிடைக்கிறது…

இதை எழுதவே மூச்சு வாங்குது…இன்னும் மலேசியாவை பற்றி பார்த்த இடங்களைப் பற்றி சொல்லனும்… இல்லைன்னா தலை வெடிச்சுடும்…
இப்போதைக்கு இது …அடுத்து சிலவு சம்பரதாயங்களை பற்றி சொல்லலாம்னு இருக்கேன்…

இருந்தாலும் பயமா இருக்கு இந்த பின்னுட்டக் காரங்க இருக்காங்கலே அதிலும் கீழை ராசா அப்பப்பா தாங்க முடியலைங்க எப்படித்தான் யோசிப்பாங்களோ தெரியலை… எதையாவது ஒரு பிட்டை போட்டு…கலக்கிடுறாங்க…ம்…கலக்குங்க ராசா கலக்குங்க…!(இப்படி சொன்னாதான் கலக்குவீங்களா?)

சிங்கப்பூர்…!



லிட்டில் இந்தியா மார்க்கெட்


பஸ் பினாங்கை


பினாங்கு ஹில் ரெயிலின் அழகு


மாலையில் பினாங்கு கடைத்தெரு


நாங்கள்
 


கேஎல் நகரிலிருந்து விமான நிலையம்


ஏர் ஆசியா கவுண்டருக்கு
-----------------------------------------
மலாக்காவின் விமான நிலையம் சிலுவைப் போன்ற வடிவத்தில் கட்டப்பட்டிருக்கிறது.

வெட்க்கிய காதல்


"காதல் மழைக்காக ஒதுங்கியவர்கள்
அக்னியாய் பார்வைகள் அனலாய் வீச
தடைகளை குடையேந்தி தகர்தெரிந்தவர்கள்"
பேசுவேனா வீரவசனம் ?

விரசமும், சரசமும் வெட்டவெளியில்
வெட்க்கித்தலை குனிகிரேன் மனம் வெதும்பி

வீதியில் விளம்பரம்..
விரகம்தான் விடயமோ
புனிதமான காதல் புடலங்காயோ
காசு கொடுத்தால் கிடைக்க கத்தரிக்காயோ
சுதந்திரமென சுலபமாய் சொல்வீர்கள்
சீரழிக்கும் சுதந்திரம் சுலபமாய் வந்தாலும்
அருவெறுப்பாய் இருக்கிறது, அறவே வேண்டாம்!!!

வானத்தில் ஒரு விடுதி ‍ (Space Hotel)

வாங்க
வாங்க வரிசையில ஒழுங்கா நின்னு உங்களோட அனுமதிச் சீட்டை வாங்கிக்கோங்க,
2012ல் முதல் முறையா வானவெளியில் வர்த்தகரீதியான புதுசா ஒரு விடுதியை
தொடங்கப் போறாங்க. Galactic Suite அப்படிங்கிற
ஒரு நிறுவனம் நம்மள மாதிரி ஆர்வம் உள்ளவங்க எல்லோரையும் ரசிய ராக்கெட்
மூலம் மேல அனுப்ப போறாங்களாம். இங்கேயிருந்து மேல போக இரண்டு
நாட்களாகுமாம், அதுக்கு முன்னாடி உங்களையெல்லாம் 8 வாரத்துக்கு உண்டு
இல்லைன்னு பண்றமாதிரி பயிற்சி கொடுக்கிறதுக்காக கரீபியன் தீவுக்கு
கூட்டிட்டு போவாங்களாம்.
 
 
இந்த விடுதியில இருந்துக்கிட்டே 80 நிமிடத்திற்கு ஒரு முறை உலகத்தை சுத்தி
சுத்தி வந்துக்கிட்டே இருக்கலாம். இது வரை 43 பேர் இதுல பயணிக்க தங்களோட்
பெயரை பதிவு செஞ்சு இருக்காங்க. சரி எவ்ளோப்பா செலவு ஆகும்? மூன்று
நாளைக்கு 4.5 மில்லியன் அமேரிக்க டாலர்கள் செலவாகும், மூனு நாள் வேணாம்,
ஒரு நாளைக்கு மாத்திரம் என்னைய கூட்டிட்டு போய் வந்துடுங்களேன்னு சொன்னா
அது நடக்காது, இது என்ன தஞ்சாவூர் பஸ் ஸ்டான்டு பக்கத்திலேயா இருக்கு உங்க
இஷடத்துக்கு போய் வர? ஆனாலும் பாருங்க மூனு நாளைக்கு சிறைல அடச்சு வச்ச
மாதிரி எப்படித்தான் இருக்கப் போறாங்களோ, அதுனால இதெல்லாம் நமக்கு சரி
பட்டு வராது, நீங்க போய்ட்டு வந்து உங்க பதிவுல ஒரு இடுகை போடுங்க, நாங்க
வந்து கும்மி அடிப்போம்.



பூமியை நீங்க இப்படி படுத்துக்கிட்டே ரசிப்பீர்கள்!!


Thanks to : http://www.blogger.com/post

Saturday, November 21, 2009

துபாயில் நான்…

இருப்பை எல்லம் விட்டுவிட்டு
விருப்பை மட்டும் மூட்டை கட்டி
மறுப்பை சொல்ல வழியில்லாமல்
பொறுப்பை ஏற்று புறப்பட்டேன் நான்…

அன்னை மண்ணில்
வேரறுபட்டதும்,
அன்னிய மண்ணில்- நான்
வேர்ப்பட்டதும்,
விமானம் ஏற‌
தீர்மானம் செய்ததால்…

அன்று அரும்பாக இருக்கையிலே
ஆகாய பார்வையிலே
அலைபாய்ந்த ஆசையிலே
அழகாக தோன்றிய‌
ஆகாய ஊர்தியும்,
அரங்கேறி போகையிலே
ஆனந்த்தம் இல்லாத‌
அனுபவம் ஆனது.
அதில் அலங்காரம் செய்துதான்
ஆகாரம் வந்தது,
ஆசைபட்டு தீர்த்திடாமல்
அசை போட்டு தீர்த்துவிட்டேன்…

இறங்கும் நேரம் வந்து விட‍- அன்று
இருக்கை இருந்து பார்த்தபோது- இங்கு
இயற்கை என்று ஒன்றும் இல்லை…

மணல் நகரின் அனல் காட்சி
இங்கு மக்கள் அல்ல மன்னர் ஆட்சி…

அன்று நிவார‌ண‌ம் தேடி வந்த‌ ந‌க‌ர‌ம்
இன்று நிரந்த‌ர‌ம் ஆகிப்போன‌ ந‌க‌ர‌ம்,

நாள் ‍ விடிந்தாலும் முடிந்தாலும்
ஒரே போல‌ இருக்கும்,                                                                                                            
அட‌ அறைக்குள்ளே சிறைவைத்தால்
வேறென்ன‌ இருக்கும்…

உற‌வோடு உற‌வாட‌
தொலைபேசி என‌க்கு,
அதில் போன‌ காசுக்கு
இங்கேது க‌ண‌க்கு…

இங்கே ம‌னைவியோடு உற‌வாடி
பிள்ளை பெற‌முடியாம‌ல்,
பில்லை பெற்ற‌வ‌ர் ஆயிர‌ம்…

இள‌மையும் வேலைக்கு
இரையாகி போச்சு,
கால‌மும் காசுக்கு
க‌ரியாகி போச்சு,
த‌லையெல்லாம் அத‌ற்குள்ளே
ந‌ரையாகி போச்சு,
காசாவ‌து மீந்த‌தா
செல‌வாகி போச்சு…

வ‌ருமான‌ம் வ‌ருமுன்னே
செல‌வு வ‌ந்து சேர்ந்திடும்,
வெறுமாக‌ ஊர் சென்றால்
உற‌வு வ‌ந்து சேருமா?

காசுக் க‌ண‌க்குக‌ள்
க‌வ‌லை த‌ருகிற‌து,
க‌ட‌ந்த‌ கால‌ம்தான்
க‌ண்ணில் வ‌ருகிற‌து…

இனி இஷ்ட்ட‌ப்ப‌ட்டாலும்,
க‌ஷ்ட்ட‌ப்ப‌ட்டாலும்,
ந‌ஷ்ட்ட‌ப்ப‌ட்ட‌து திரும்பாது…

எந்நாடு சென்றாலும்
என் நாடு ஆகாது,
சொர்க‌மே த‌ந்தாலும் ‍ ம‌ன‌தில்
தாய் நாடு சாகாது…

--முஹம்மது நியாஸ்--
Thanks to :http://www.tamilsaral.com

அழவேண்டும் அழவேண்டும்



அழவேண்டும் அழவேண்டும்
அழுகைக்குள்தான் இருக்கிறது படுக்கை
அதில் மலர்ந்தால்தான் பிடிக்கிறது உறக்கம்

அழுகைக்குள் அழுகையாய்
அழுகைக்குள் அழுகையாய்
அடுக்கடுக்காய் அழவேண்டும்
மன அமைதி அதில்தான் மீளவேண்டும்

அழுகைதான் குடை
அதன் அடியில்தான் இளைப்பாறும்
வாழ்க்கையின் நடை

கண்களில் நீர் வந்து முட்டினால்
நிம்மதி நெஞ்சின் கதவு தட்டும்
கன்னத்தில் ஒரு சொட்டு உதிர்கின்ற போது
உயிருக்குள் அமைதி விதை நட்டுப் போகும்

எது வந்து மடி சேர்ந்தபோதும்
அது நில்லாமல் ஒரு நாளில் போகும்
மாற்றந்தான் வாழ்க்கையின் மாறாத நியதி
அழுகைதான் அதற்கான பயணத்தின்
ஊர்தி

கோழையின் கூடாரமல்ல
அழுகை கருணையின் கோபுரம்
தனக்கே அழாதவன்
ஊருக்காய் உறவுக்காய் அழப்போவதே
இல்லை

ஒவ்வோர் அழுகையின் முடிவிலும்தான்
ஓர் உறுதியான மனவீரம்
வேர் விடுகிறது

Source :http://anbudanbuhari.blogspot.com